ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

அன்று ஆந்திரத்தில் என்டிஆர்; இன்று தமிழகத்தில் விஜய்!

எம்.ஜி.ஆர். புதிய கட்சியைத் தொடங்கி சந்தித்த முதல் தேர்தலிலேயே ஆட்சியைப் பிடித்தது போல விஜய் ஆட்சியைப் பிடிக்கும் சூழல்

Chennai: Tamilaga Vettri Kazhagam (TVK) chief and candidate from the Perambur constituency, Vijay, celebrates after winning in the Tamil Nadu Assembly elections results, in Chennai, Monday, May 4, 2026. (PTI Photo)(PTI05_04_2026_000565B)

வெற்றிக் களிப்பில் தவெக தலைவர் விஜய் - PTI

Published On :

நமது நிருபர்

சென்னை : ஆந்திர முன்னாள் முதல்வரும், நடிகருமான என்.டி.ராமராவ், தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். ஆகியோர் புதிய கட்சியைத் தொடங்கி சந்தித்த முதல் தேர்தலிலேயே ஆட்சியைப் பிடித்தது போல தமிழகத்தில் நடிகர் விஜய் கட்சியைத் தொடங்கி சந்தித்த முதலாவது பேரவைத் தேர்தலிலேயே ஆட்சியைப் பிடிக்கும் சூழல் உருவாகியுள்ளது.

விஜய்க்கு முன்பாக, தமிழக திரையுலகில் இருந்து அரசியலுக்கு வந்த அண்ணா, எம்ஜிஆர், மு.கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் ஆட்சியைப் பிடித்துள்ளனர்.

திமுகவை தொடங்கிய அண்ணாதுரையால், 1957, 1962 ஆகிய ஆண்டுகளில் அடுத்தடுத்து வந்த இரண்டு தேர்தல்களிலும் ஆட்சியைப் பிடிக்க முடியவில்லை. 1967}இல் ஏழு கட்சிகளுடன் கூட்டணி அமைத்துதான் அவர் ஆட்சியைப் பிடித்தார்.

அண்ணாதுரைக்கு பிறகு முதல்வரான மு.கருணாநிதியும் சரி, 1971-இல் வங்கதேசத்தை உருவாக்கியதைத் தொடர்ந்து அன்றைய பிரதமர் இந்திரா காந்திக்குக் காணப்பட்ட ஆதரவு அலையில் அவருடன் கூட்டணி அமைத்துதான் வெற்றி பெற்றார்.

அவரது ஆட்சிக் காலத்தில் திமுகவின் முக்கிய பிரசார பீரங்கி என அழைக்கப்பட்டவர் எம்.ஜி.ஆர். எம்எல்சி, எம்எல்ஏ, திமுக பொருளாளர் போன்ற முக்கியப் பொறுப்புகளை வகித்தவர். அவரும் திமுகவில் இருந்து விலகி அதிமுகவை தொடங்கியபோது சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணி அமைத்தே வெற்றி பெற்றார். மேலும், தான் ஏற்கெனவே பயணித்த திமுகவின் கணிசமான வாக்குகளைப் பிரித்துதான் எம்ஜிஆர் வெற்றி பெற்றார்.

எம்ஜிஆர் காலத்தில் அதிமுகவில் கொள்கை பரப்புச் செயலர், மாநிலங்களவை உறுப்பினர் போன்ற பதவிகளை வகித்த ஜெயலலிதாவும், அதிமுகவுக்கு தலைமை வகித்து காங்கிரஸýடன் கூட்டணி அமைத்தே முதலாவது வெற்றியை அவரது அரசியல் வரலாற்றில் பதிவு செய்தார். அவர்களுக்குப் பிறகு தமிழக திரைத் துறையிலும், வேறு துறைகளிலும் இருந்து அரசியலுக்கு வந்த எவரும் தனித்துப் போட்டியிட்டு ஆட்சியைப் பிடித்ததாக வரலாறு இல்லை.

அத்தகைய ஒரு வரலாறு ஆந்திரத்தில் மட்டுமே என்.டி.ராமராவால் சாத்தியமானது. எவ்வித அரசியல் பின்புலமும் இல்லாமல் தெலுங்கு தேசம் கட்சியைத் தொடங்கிய ஓராண்டுக்குள் 1983-இல் அவர் ஆட்சியைப் பிடித்தார். அவரது வெற்றி, இந்திய அரசியல் வரலாற்றில் அதிசயமாகப் பேசப்பட்டது. அதன் பின்னர் தில்லியில் ஆம் ஆத்மி கட்சியைத் தொடங்கி, சந்தித்த முதலாவது பேரவைத் தேர்தலிலேயே ஆட்சியைப் பிடித்தவர் அரவிந்த் கேஜரிவால்.

இப்போது தமிழகத்தில் எவ்வித அரசியல் பின்புலமுமின்றி தவெகவை தொடங்கிய விஜய், ஆட்சியைப் பிடிக்கும் நிலையை எட்டியிருப்பது மிகப்பெரிய திருப்பமாக கருதப்படுகிறது.

"2024' மக்களவைத் தேர்தலுக்கு முன்பே தவெகவை தொடங்கிய விஜய், "2026 பேரவைத் தேர்தலே எனது இலக்கு' என அறிவித்து மக்களவைத் தேர்தலில் போட்டியிடவில்லை. அடுத்தடுத்து வந்த விக்கிரவாண்டி, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்களிலும் விஜய் கட்சி போட்டியிடவில்லை.

இந்த நிலையில், பேரவைத் தேர்தலுக்கு ஓராண்டுக்கு முன்பு விக்கிரவாண்டியில் கட்சியின் கொள்கை மாநாட்டை நடத்திய விஜய் லட்சக்கணக்கான ரசிகர்களையும், ஆதரவாளர்களையும் திரட்டி தனது சக்தியை நிரூபித்தார். தொடர்ந்து, மதுரை, கோவையில் நடைபெற்ற தவெக மாநாடுகளிலும் லட்சக்கணக்கான கூட்டம் அவரது பேச்சைக் காண வந்தது.

இதேபோல, திருச்சி, திருவாரூர், நாகை, நாமக்கல், கரூர் என விஜய் செல்லும் இடமெல்லாம் மக்கள் கூட்டம் நிறைந்து காணப்பட்டது. கரூரில் நடந்த துயர சம்பவத்துக்குப் பிறகு விஜய்க்கு பின்னடைவு ஏற்படக்கூடும் எனத் தகவல் வெளியானாலும் விஜய் சிறிது காலம் மெüனம் காத்துவிட்டு, துயர சம்பவத்தில் இறந்த 41 பேர் குடும்பத்துக்கும் நிவாரண தொகையை வழங்கிவிட்டு மீண்டும் வழக்கமான பிரசார பொதுக்கூட்டங்களில் பங்கேற்றார்.

தேர்தல் நேரத்தில் தமிழகம் முழுவதும் விஜய்யால் பிரசாரம் செய்ய முடியவில்லை. தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களிலும், சென்னை நகர பகுதிகளிலும் விஜய் பிரசாரத்தில் கட்டுக்கடங்காத கூட்டம் திரண்டபோதே அவர் மாற்று சக்தியாக உருவாவார் என்று அரசியல் நோக்கர்களால் கணிக்கப்பட்டது.

தமிழகத்தில் வாக்குப் பதிவு முடிந்த பின்னர் பெரும்பாலானோர் விசில் சின்னத்துக்கு வாக்களித்தோம் என வெளிப்படையாக கூறியபோதும் அதை அரசியல் கட்சிகள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால், திங்கள்கிழமை வாக்கு எண்ணிக்கை தொடங்கியதும், தபால் வாக்குகளை எண்ணும்போதே தவெக முன்னிலை பெற தொடங்கியது.

தொடர்ந்து, தமிழகத்தின் சென்னை, வடதமிழகம், கொங்கு மண்டலம், டெல்டா, தென்மாவட்டங்கள் என அனைத்துப் பகுதிகளிலும் தவெக தொடர்ந்து முன்னிலை பெற்றது.

திமுகவின் கோட்டையான சென்னையையும், அதிமுகவின் கோட்டையான கொங்கு மண்டலத்திலும் தவெக அதிக தொகுதிகளைக் கைப்பற்றி இரு திராவிட கட்சிகளுக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. தென்மாவட்டங்களிலும் இதேநிலைதான். திமுக டெல்டாவிலும், அதிமுக வடதமிழகத்திலும் ஓரளவு வெற்றியைப் பெற்றுள்ளன.

தவெக வெற்றி பெற்றுள்ள பகுதிகளை கவனித்தால் மயிலாப்பூர், தியாகராய நகர், ஸ்ரீரங்கம் தொகுதிகளில் கணிசமான எண்ணிக்கையில் பிராமணர்கள் தவெகவுக்கு வாக்களித்துள்ளது தெரியவந்துள்ளது. அதேபோல, கோவை, சேலம் மாவட்டங்களில் கன்னடம், தெலுங்கு, மலையாளம் பேசக்கூடிய மொழிவழி சிறுபான்மையினர் ஆதரவின்றி தவெகவால் வெற்றி பெற்றிருக்க முடியாது என்பதை அறியலாம்.

மேலும், கொங்கு மண்டலத்தில் மொழிவாரி சிறுபான்மையினர், கொங்கு வேளாளர்கள், செங்குந்த முதலியார்கள், அருந்ததியர்கள் குவியலாக தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால்தான் அதிமுகவை பின்னுக்குத் தள்ளி தவெக வென்றுள்ளதை அறியலாம்.

வடதமிழகத்தில் திமுகவை தொடர்ந்து ஆதரித்துவந்த ஆதிதிராவிடர்கள், பிற்பட்டோர் சமூக வாக்குகளை தவெக பெருமளவில் பெற்றதால், இந்த மண்டலத்திலும் குறிப்பிடத்தக்க வெற்றியை தவெக பெற்றுள்ளது. சென்னையில் அனைத்து தரப்பு மக்களும் திமுகவுக்கு எதிராக திரண்டு தவெகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இதேபோல, சென்னை முதல் கன்னியாகுமரி வரை கடலோரப் பகுதிகளில் மீனவர்கள் வாழும் பேரவைத் தொகுதிகளிலும் தவெகவுக்கு ஆதரவான நிலை இருந்துள்ளது. தென்மாவட்டங்களில் முக்குலத்தோர், நாடார்கள், சிறிய எண்ணிக்கை ஹிந்து சமூகங்கள் உள்பட அனைத்து சமூகங்களிலும் தவெக பெரும்பான்மை ஆதரவைப் பெற்றதால்தான் மிகப்பெரிய வெற்றியை அங்கு பெற்றுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் மதரீதியான வாக்குத் திரள்வு இருந்ததால், தவெகவால் வெற்றி பெற முடியவில்லை. தமிழகம் முழுவதும் தவெக பரவலாக பெற்றுள்ள வாக்குகளைப் பார்க்கும்போது, ஜாதி, மதம் கடந்து விஜய் தலைமையிலான தவெகவை மக்கள் ஆதரித்துள்ளனர் என்பது தெளிவாகிறது.

அதோடு, ஊழலற்ற ஆட்சி, மகளிருக்கு மாதம் ரூ.2500 உதவித் தொகை, திருமணத்துக்கு 8 கிராம் தங்கம், இலவசமாக ஆண்டுக்கு 6 சமையல் சிலிண்டர், ரூ.20 லட்சம் வரை கல்விக் கடன் உள்ளிட்ட வாக்குறுதிகள் இளைஞர்கள், மகளிரை வெகுவாக ஈர்த்திருக்கிறது.

ஆந்திரத்தின் என்டிஆர் போல தமிழகத்தில் புதிய அரசியல் சக்தியாக உருவாகியிருக்கிறார் விஜய். என்டிஆர் ஆக இனி கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற அவர் காட்டும் ஈடுபாட்டில்தான் அவரது உண்மையான வெற்றி அடங்கியிருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.