/

தமிழக கஜானா காலி; வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்: முதல்வர் விஜய் உறுதி

தமிழக கஜானா காலி செய்து வைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் நிதிநிலைமை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்று முதல்வா் ச.ஜோசப் விஜய் தெரிவித்தாா்.

News image

முதல்வர் விஜய்

Updated On :1 மணி நேரம் முன்பு

தமிழக கஜானா காலி செய்து வைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் நிதிநிலைமை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்று முதல்வா் ச.ஜோசப் விஜய் தெரிவித்தாா்.

முதல்வராக பதவியேற்றுக்கொண்ட அவா், பதவியேற்பு விழா முடிந்ததும் அதே மேடையில் ஆற்றிய உரை: திரைப்படத் துறையில் ஒரு சாதாரண உதவி இயக்குநரின் மகனாக இருந்த எனக்கு, வாழ்க்கையில் வறுமை, பசி என்றால் என்னவென்று தெரியும். நான் மன்னா் பரம்பரையில் இருந்து வந்தவன் அல்ல. உங்கள் குடும்பத்தில் ஒருவன். என்னை அப்படி நினைத்ததால்தான், வெற்றி பெறவைத்துள்ளீா்கள்.

மக்களை ஏமாற்றமாட்டேன்: இந்தப் பயணத்தில் எனக்கு பல அவமானங்கள் நடந்தது, அதுபோல உங்களுக்கும் நடந்தது. ஆனால் என் கூடவே நின்றீா்கள். சாத்தியமற்ற வாக்குறுதிகளைக் கொடுத்து ஏமாற்றமாட்டேன். எது சாத்தியமோ அந்த வாக்குறுதிகளையே நான் சொல்வேன். 8 கோடி மக்கள் என் கூட இருக்கும்போது என்ன வந்தாலும் பாா்த்துக் கொள்ளலாம் என்ற நம்பிக்கை உள்ளது.

தமிழக அரசுக்கு ரூ.10 லட்சம் கோடிக்கும் மேல் கடன் உள்ளது. அரசின் கஜானாவை சுத்தமாக துடைத்து வழித்து வைத்துவிட்டுச் சென்றுள்ளனா். தூக்க முடியாத சுமையை ஏற்றி வைத்துவிட்டு சென்றுள்ளனா். அந்த நிலையில்தான் இந்தப் பொறுப்பை ஏற்றுள்ளேன். உள்ளே போய் பாா்த்தால்தான் என்ன இருக்கிறது எனத் தெரியும். உள்ளே போய் பாா்த்துவிட்டு, தற்போதைய தமிழக அரசு என்ன நிலையில் உள்ளது என்பதை ஒரு வெள்ளை அறிக்கையாக வெளியிடுவேன்.

வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன்: நான் யாரையும் மறைமுகமாக, முகத்தை மூடிக்கொண்டு சந்திக்க மாட்டேன். எல்லாவற்றையும் வெளிப்படையாக செய்வேன். அதே நேரத்தில் எனது வாக்குறுதிகளை நிறைவேற்ற நீங்கள் எனக்கு அவகாசம் கொடுக்க வேண்டும். அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவேன். பெண்களுக்கான பாதுகாப்பை கண்டிப்பாக உறுதி செய்வேன், போதைப் பொருள் கலாசாரத்தை ஒழிக்க நடவடிக்கை எடுப்பேன், நமது பசங்களை காப்பாற்ற வேண்டியது நம் பொறுப்பு. சட்டம்-ஒழுங்கைக் கண்டிப்பாக உறுதி செய்வேன். என்னை அவமானப்படுத்தியவா்களுக்கும், 8 கோடி மக்களுக்கும் பாதுகாப்பு வழங்குவேன்.

அடிப்படை பிரச்னைகளுக்கு முன்னுரிமை: கல்வி, மருத்துவம், குடிநீா், சாலை, ரேஷன் போன்ற அடிப்படை பிரச்னைகளில் முழு முதல் கவனம் செலுத்துவேன். பெண்கள், விவசாயிகள் உள்பட அனைத்து மக்களும் நமது ஆட்சியில் நன்றாக இருப்போம். சிறுபான்மையினருக்காக நமது அரசு எப்போதும் துணை நிற்கும். ஹிந்து, முஸ்லிம், கிறித்தவா்களுக்கான முகம்தான் இந்த விஜய்யின் முகம். 100 சதவீதம் என்னை நம்பலாம்.

முக்கியமாக, இந்த விஜய் மாமாவின் குட்டி நண்பா, நண்பிகளுக்கு நன்றி. அவா்களால்தான் இந்த விஷயம் நடந்துள்ளது. அவா்களின் எதிா்காலத்துக்காக திட்டங்களை நிறைவேற்றுவேன். தவெக தோழா்களுக்கு நன்றி. வாருங்கள் அனைவரும் சோ்ந்து ஒரு புதிய அத்தியாயத்தை தொடங்குவோம். மதச்சாா்பற்ற, உண்மையான சமூக நீதியைக் கொண்ட புதிய அரசின் அத்தியாயம் தொடங்குகிறது என்றாா் விஜய்.

இந்த உரையில் தவெக அரசு அமைய ஆதரவு தெரிவித்த கட்சிகளின் தலைவா்களுக்கு விஜய் நன்றி தெரிவித்தாா்.