சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தோற்றது பற்றி பென் நிறுவனத் தலைவர் சபரீசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
திமுகவுக்கு அரசியல் உத்திகளை வகுக்கும் ‘பென்’ நிறுவனத்தை மு.க.ஸ்டாலினின் மருமகனான சபரீசன் நடத்திவந்தார். திமுகவில் எவ்வித பொறுப்பிலும் இல்லாத நிலையிலும் மறைமுக அதிகார மையமாக சபரீசன் இருந்ததாகத் தொடர்ந்து எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வந்தன.
இந்தத் தேர்தலில் திமுக தோற்றதற்கு பென் நிறுவனமும் காரணமாகக் கூறப்பட்டது. களம் சார்ந்து இயங்குவதில் இவரது நிறுவனம் சரியாக செயல்படவில்லை என்று இணையத்தில் திமுகவினர் பலரும் குற்றச்சாட்டு வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து பென் நிறுவனத் தலைவரான சபரீசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சமீபத்திய தேர்தல் முடிவுகள் பற்றி கடந்த சில நாள்களாக பென் நிறுவனம் மற்றும் அதன் செயல்பாடுகள் மீது பழி சுமத்தும் பல முயற்சிகளை நான் கவனித்து வருகிறேன்.
ஜனநாயக சமூகத்தில் விமர்சனங்கள் இயல்பானதே. ஆனால், ஒரு பெரிய அரசியல் முடிவினை சிறிய வாதத்துக்குள் சுருக்குவது பயனற்றது. அது யதார்த்தமானதல்ல.
தகவல் தொடர்பை மேம்படுத்துதல், மக்களுடன் இணையம் வழியே செயல்டுதல் மற்றும் அரசியல் களத்தில் நவீன அணுகுமுறைகளைக் கொண்டுவருதல் போன்ற நோக்கங்களுடன் பென் நிறுவனம் உருவாக்கப்பட்டது.
கட்சித் தொண்டர்கள், ஆதரவாளர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் பொதுமக்களிடமிருந்து வரும் ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை நான் தனிப்பட்ட முறையில் வரவேற்கிறேன். ஆலோசனைகளை ஏற்று நேர்மையாக மாற்றமடைவது மூலமே வளர்ச்சி பெறமுடியும்.
நமது கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் மக்களின் தீர்ப்பை கண்ணியத்துடனும் தைரியத்துடனும் எதிர்கொள்வதற்கு நமக்கான முன்மாதிரியாக இருக்கிறார். அவர் கொளத்தூரில் மக்களை நேரடியாகச் சந்தித்து நன்றி தெரிவித்து, தேர்தல் முடிவை வெளிப்படையாக ஏற்று அறிக்கை வெளியிட்டார். நமது கட்சியின் விழுமியங்களை பறைசாற்றும் விதமாக அவரது செயல் அமைந்தது.
அவரது அடிச்சுவற்றைப் பின்பற்றி, பென் நிறுவனம் தமது குறைகளை நேர்மையாகப் புரிந்துகொண்டு, புதிய நோக்கங்கள் மற்றும் வளர்ச்சிப் பாதையில் முன்னோக்கிச் செல்ல உறுதியெடுத்துள்ளது.
மக்களின் தீர்ப்பை நான் பணிவுடன் ஏற்கிறேன். இனி வரும் காலங்களில், பொறுப்புடனும் பணிவுடனும் பொதுமக்களின் எதிர்பார்ப்புகளைப் புரிந்துகொண்டு தொடர்ந்து பணியாற்றுவேன்” என சபரீசன் தெரிவித்துள்ளார்.
Summary
Is the Pen Company Responsible for DMK's Defeat? Sabareesan's Statement
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








