வெற்றி பெற்றால் வெறிக் கூத்தாடுவதுமில்லை; தோல்வி கண்டால் துவண்டு விடுவதுமில்லை என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் புதன்கிழமை தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த கொண்டாட்டத்தையொட்டி, கட்சி தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
அதில் தெரிவித்திருப்பதாவது:
”ஒவ்வொரு நாளும் அண்ணா அறிவாலயத்திற்குத் திரண்டு வரும் தொண்டர்களின் முகம் கண்டு, உங்களில் ஒருவனான நான் ஊக்கம் பெறுகிறேன். என்னைக் கண்ட நொடியில், தொண்டர்கள் தங்கள் உள்ளத்தை அழுத்திக் கொண்டிருந்த கவலையிலிருந்து விடுபடுகிறார்கள். அவர்களின் உணர்வு மழையில் நான் நனைகிறேன். திருச்சி, தஞ்சை ஆகிய இடங்களுக்குப் பயணம் செய்தபோதும் தொண்டர்களின் உணர்வைக் கண்டேன். சமூக வலைதளங்களில் பதிவிடும் ஆயிரக்கணக்கான உடன்பிறப்புகளின் உணர்வுகளையும் கவனிக்கிறேன். தேர்தல் முடிவுகளைக் கடந்த கட்சி உணர்வே நம் வலிமை.
வெற்றி பெற்றால் வெறிக் கூத்தாடுவதுமில்லை; தோல்வி கண்டால் துவண்டு விடுவதுமில்லை. இது நம் உயிர்நிகர் தலைவர் கருணாநிதி நமக்குக் கற்றுத் தந்த அரசியல் பாடம். பேரறிஞர் அண்ணாவின் மறைவுக்குப் பிறகு 50 ஆண்டுகாலம் இந்த இயக்கத்தைக் கட்டிக்காத்த மகத்தான தலைவரான கருணாநிதி தேர்தல் களத்தில் பெறாத வெற்றியுமல்ல, அடையாத தோல்வியுமல்ல. தேர்தல் முடிவுகள் எப்படி இருந்தாலும் அவரது பயணமும் கட்சியின் பயணமும் ஓய்வதேயில்லை.
தோல்வியடைந்த தேர்தல்களுக்குப் பிறகுதான், சுவரில் அடித்த பந்து போல கட்சி அதிக வேகத்துடன் திரும்பவும்களத்திற்கு வரும். ஏனென்றால், திராவிட முன்னேற்றக் கழகம் என்பது இனம் - மொழி காத்திடும் சமூகநீதி இயக்கம். தமிழ்மொழிக்காகத் தன்னுயிரைத் தந்த தியாகத் தொண்டர்களின் இயக்கம். தமிழ்நாட்டின் நலன் காக்க சிறை கண்ட தலைவர்களின் இயக்கம். துரோகங்களை எதிர்கொண்டு முறியடித்த இயக்கம். தோல்வியைப் படிக்கட்டுகளாக்கித் திரும்பத் திரும்ப வென்று காட்டும் வலிமை கொண்ட இயக்கம்.
கருணநிதி தன் தொண்டர்களுக்காக முரசொலியில் எழுதிய கடிதங்கள் பலவற்றில் கட்சியினர் பற்றி அடிக்கடி குறிப்பிடுவார், “அற்ற குளத்து அறுநீர்ப் பறவை போல இல்லாமல், கொட்டியும் ஆம்பலும் போல எப்போதும் உடனிருப்பவர்கள்தான் என் உண்மையான உடன்பிறப்புகள்” என்று சொல்வார். கோடைக்காலத்தில் குளம் வற்றியதும், அதுவரை அதில் தண்ணீர் குடித்து வந்த பறவைகள் வேறு இடம் தேடிப் போய்விடும். இது மற்றவர்கள் இயல்பு. ஆனால், குளத்தின் கரையோரமாக வளர்ந்த செடி கொடிகளான கொட்டி, ஆம்பல் போன்றவை எந்த நிலையிலும் அந்தக் குளத்துடனேயேதான் இருக்கும். இதுதான் தி.மு.க. உடன்பிறப்புகளின் உணர்வு. அந்த உணர்வை நமக்கு ஊட்டி வளர்த்தவர் கருணாநிதி. அவர் ஊட்டிய உணர்வுதான் இன்றும் நம்மை பெரியார் - அண்ணா கொள்கைப் பார்வையுடன் வழிநடத்துகிறது.
தமிழ்நாட்டின் அரசியல் போக்கைத் தீர்மானிக்கும் இயக்கமாக இப்போதும் தி.மு.க.தான் இருக்கிறது. அதன் வலிமையைப் பெருக்குகின்ற வகையில், கழகத்தின் அமைப்பு முறையில் மிகப்பெரிய அளவிலான மாற்றங்களைச் செய்வதற்கு உங்களில் ஒருவனான நான், உரிய ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறேன். தொண்டர்கள் அனைவரின் பங்களிப்பும் சிறந்த முறையில் வெளிப்படும் இயக்கமாகக் கட்சி திகழும்.
உங்களால் கட்சித் தலைவராக நான் பொறுப்பேற்றிருந்தாலும், உங்களைப் போல நானும் கருணாநிதியின் உடன்பிறப்புதான். கட்சியின் முதன்மைத் தொண்டன் என்ற உணர்வுடனேயே என் பணியினைத் தொடர்கிறேன். நம் உயிர்நிகர் தலைவர் கருணாநிதியிடம் நேரில் கற்ற அரசியல் பாடத்தை நெஞ்சில் ஏந்தி, நம் கட்சிப் பயணம் என்றென்றும் தொடர்ந்திடும்.
கருணாநிதி பிறந்த ஜூன் 3-ஆம் நாள் வந்தாலே ஒவ்வொரு ஆண்டும் நம் தொண்டர்கள் அனைவருக்கும் புத்துணர்வு ஏற்படும். சோர்வு – கவலை - விரக்தி எல்லாவற்றையும் ‘கருணாநிதி’ எனும் குருதியுடன் கலந்த உணர்வு விரட்டியடித்து, களத்தில் நம்மை ஊக்கத்துடன் பணியாற்றச் செய்யும். கருணாநிதியின் உடன்பிறப்புகளான நமக்கு ஊக்கமும் உற்சாகமும் தருவதற்காகவே வரவிருக்கிறது, ஜூன் 3.
கருணாநிதியின் 103-ஆவது பிறந்தநாளான வரும் ஜூன் 3-ஆம் நாள், நமக்கான புத்தெழுச்சி நாளாக அமையட்டும். தமிழ்நாடு முழுவதும் கருணாநிதியின் பிறந்தநாளைச் சிறப்பாகக் கொண்டாடுவோம். கட்சிக் கிளைகள் எங்கும் கருப்பு - சிவப்பு இருவண்ணக் கொடி உயர்ந்து பறக்கட்டும். நலிந்தோருக்கும் - ஏழைகளுக்கும் உதவி செய்யும் நிகழ்வுகள் நடக்கட்டும். 75 ஆண்டுகளைக் கடந்த இயக்கமான திராவிட முன்னேற்றக் கழகத்தின் வளர்ச்சிக்குத் தன்னை அர்ப்பணித்துக்கொண்ட மூத்த முன்னோடிகளுக்கு உதவிடும் வகையில் தலைவர் கருணாநிதியின் பிறந்தநாளைக் கட்சி நிர்வாகிகள் கொண்டாட வேண்டும்.
கடந்த இரண்டு வாரங்களாக கட்சியின் புதிய இளைஞர்களின் பங்களிப்பை சமூக வலைதளங்களில் அதிகளவில் காண்கிறேன். தகவல் தொழில்நுட்பத்திற்கான கொள்கையை வகுத்து, தமிழ் இணைய மாநாட்டினை நடத்தி, இன்றைய டிஜிட்டல் பெரும்பாய்ச்சலுக்கு அன்றே வழிவகுத்த கருணாநிதியை இளைய தலைமுறை நினைவில் கொண்டு, எக்ஸ் (ட்விட்டர்) - இன்ஸ்டாகிராம் - யூடியூப் - ஃபேஸ்புக் - வாட்ஸ்அப் என அனைத்து தளங்களிலும், நவீனத் தமிழ்நாட்டை வடிவமைத்த சிற்பியான கருணாநிதியின் வரலாற்றுச் சாதனைகளைக் காணொளிகளாகப் பரப்புங்கள்.
தி.மு.க.வினரான நம் பயணம் ஒருநாளும் ஓயாது, என்றென்றும் தொடரும் என ஜூன் 3 அன்று கருணாநிதி மீது ஆணையிட்டு உறுதியேற்போம். தமிழ்நாட்டின் நலன் காக்க மேலும் அதிகமாக உழைத்திடுவோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Summary
Letter written by DMK President M.K. Stalin to his party cadres
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தேர்தல் தோல்வி: கள ஆய்வுக் குழுவுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை!
எம்.எல்.ஏ.க்களை ஒளித்து வைக்கவேண்டிய பயமில்லை: மு.க. ஸ்டாலின்

முதல்வர் விஜய்க்கு ஆலோசனைகள் வழங்கினேன்: மு.க. ஸ்டாலின்

யாருக்கு ஆதரவு? திமுக நிர்வாகிகளுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை!
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!



