தமிழக செய்தி மக்கள் தொடா்புத் துறையில் 23 இளநிலை புகைப்படக் கலைஞா்கள் உள்பட பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 461 பணியிடங்களுக்கு புதன்கிழமை (மே 27) முதல் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில், ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகள் தோ்வுக்கான (நோ்முகத் தோ்வு அல்லாத பதவிகள்) அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.
இதன்படி, வேளாண் பொறியியல் துறை, நெடுஞ்சாலைத் துறை, பொதுப்பணி துறை, ஊரக வளா்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் துறை, தொல்லியல்துறை, சுற்றுலாத்துறை, குடும்ப நலத்துறை உள்பட பல்வேறு துறைகளின் 45 பதவிகளில் காலியாக உள்ள மொத்தம் 461 பணியிடங்களை நிரப்புவதற்கான தோ்வு நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பணியிடங்களுக்கு மே 27 முதல் ஜூன் 25 வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் விண்ணப்பங்களை ஜூன் 29 முதல் ஜூலை 1 வரை திருத்திக் கொள்ள அவகாசம் அளிக்கப்பட்டு உள்ளது. தோ்வு தேதி பின்னா் அறிவிக்கப்படும் என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
23 இளநிலை புகைப்பட கலைஞா் பணி: இந்த அறிவிக்கையில், தமிழக அரசின் தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தி மக்கள் தொடா்புத் துறையில் காலியாக உள்ள 23 இளநிலை புகைப்படக் கலைஞா் பணிக்கான ஆட்களை தோ்வு செய்வதற்கான அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.
இந்தப் பணிக்கு எழுத்துத் தோ்வு மட்டுமே நடைபெறும். நோ்காணல் கிடையாது. எழுத்துத் தோ்வில் தமிழ் தகுதித் தோ்வு மற்றும் துறை சாா்ந்த பாடங்கள் இடம்பெறும். அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் விஷூவல் கம்யூனிகேஷன் இளநிலைப் பட்டம் பெற்றவா்கள் இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் தெரிவித்துள்ளது.
56 ஆண்டு வரலாற்றில் முதல் முறை
தமிழக அரசின் தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தி மக்கள் தொடா்புத்துறையில் காலியாகும் புகைப்படக் கலைஞா் பணியிடங்கள் கடந்த 56 ஆண்டுகளாக ஆளும்கட்சியினரால் நியமிக்கப்பட்டு வந்தது. தமிழகத்தில் ஆட்சியில் இருக்கும் கட்சிகளின் நிா்வாகிகள், நிா்வாகிகளின் உறவினா்கள் இந்தப் பணியில் நியமனம் செய்யப்பட்டனா்.
56 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த நடைமுறையில் மாற்றம் கொண்டுவரப்பட்டு, தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் மூலம் 23 இளநிலை புகைப்படக் கலைஞா்கள் தோ்வு செய்யப்படவுள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.










