தமிழ்நாட்டில் கீழ்த்தரமான அரசியலை, குதிரை பேர கலாசாரத்தை அறிமுகப்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத்துக்கு அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், “சுத்த சுயம்பிரகாச தூய சக்தி என்று தன்னைத் தானே அறிவித்துக்கொண்டு அரசியலில் குதித்த திரையுலகப் பிரபலம், மக்களின் முழுமையான ஆதரவு தனக்கு கிடைக்கவில்லை என்ற நிலையில், தான் அமைத்த பொய்க்கால் குதிரை ஆட்சியைக் காப்பாற்ற பல்வேறு தகிடுதத்த அரசியலில் ஈடுபட்டு வருவது வெட்கக்கேடான ஒன்றாகும்.
தமிழக அரசியல் வரலாற்றிலேயே இல்லாத வகையில், மோசமான ஒரு குதிரை பேர அரசியலை நடத்தி, தான் அமைத்த மைனாரிட்டி ஆட்சியைக் காப்பாற்றிக்கொள்ள முனைவது கண்டு தமிழக மக்கள் எள்ளி நகையாடுகின்றனர்.
தமிழ் நாட்டில் மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் 126 தொகுதி மக்கள் தனக்கு எதிராக வாக்களித்துள்ளார்கள் என்பதை சிறிதும் உணராமல், தான் எந்தக் கட்சியை தீய சக்தி என்று வருணித்து களமாடினாரோ அந்தக் கட்சியின் தயவில் வெற்றி பெற்ற ஒருசில கட்சிகளை தேடிப்போய் ஆதரவு கேட்டதும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற சில சட்டமன்ற உறுப்பினர்களை சோஃபாவோடு போய் 'புஷ்பா' பட பாணியில் ஆதரவு பெற்றதும் ஒரு நேர்மையான அரசியல்வாதியின் செயலா? என்று வாக்களித்த மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின்மீது விசுவாசம் கொண்டுள்ள உண்மைத் தொண்டர்களின் கடுமையான உழைப்பால், தியாகத்தால் வெற்றிபெற்ற 3 சட்டமன்ற உறுப்பினர்களிடமிருந்து, கோட்டையின் கீழ்தளத்தில் உள்ள அவைத்தலைவர் அறையில் ராஜிநாமா கடிதம் எழுதி வாங்குவதும், அடுத்த 10 நிமிடத்தில் முதல் மாடியில் உள்ள தவெக அமைச்சர் ஒருவரின் அறையில் அவர்களுடைய கைகளில், கட்சி உறுப்பினர் அட்டை வழங்குவதும் முன்கூட்டியே திட்டமிடப்பட்ட ஓரங்க சதி நாடகத்தை, குதிரை பேரத்தை அம்பலப்படுத்தி உள்ளது.
தற்போதைய த.வெ.க. அரசின் இதுபோன்ற தகிடுதத்த வேலைகளை சந்திப்பது தமிழக அரசியலில் புதிதான அணுகுமுறையாகும். எத்தனையோ துரோகச் செயல்களையும், முதுகில் குத்திய நிகழ்வுகளையும் தாங்கித்தான் மக்கள் பணியாற்றி வருகிறது 'அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்' என்கிற மாபெரும் பேரியக்கம்.
இந்த அரசிற்கு முட்டு கொடுக்கக்கூடிய சட்டப்பேரவை உறுப்பினர்களாக இருந்தாலும், தற்போது ராஜிநாமா செய்துள்ளவர்களாக இருந்தாலும், திரைப் பிரபலத்தின் சின்னத்திற்கு எதிராக மக்கள் வாக்களித்துதான் வெற்றி பெற்றுள்ளார்கள் என்பதை மறந்துவிடக்கூடாது.
இதுபோன்ற துரோகச் செயல்களால் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை அசைத்துப் பார்க்கலாம்; வீழ்த்திவிடலாம்; அந்த இடத்திற்கு நாம் வந்துவிடலாம் என்று யாராவது நினைத்தால் அது பகல் கனவாகவே முடியும்.
'ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறவில்லை' என்பதுபோல, 'பழைய மந்தையில் புதிய கள்' என்பதுபோல, அடுத்தவர்களின் முதுகில் ஏறி பயணம் செய்வதில்தான் தங்களின் வாழ்வு இருக்கிறது என்று செயல்படும் புதிய கரகாட்ட கோஷ்டிக்கு தமிழக மக்கள் விரைவில் தக்க பாடம் புகட்டுவார்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Summary
AIADMK General Secretary Edappadi Palaniswami has strongly condemned the Tamilaga Vettri Kazhagam, accusing it of introducing base politics and a culture of horse-trading in Tamil Nadu.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








