பள்ளிக்கு சென்று குழந்தைகள் வீடு திரும்பும்வரை அவா்களின் பாதுகாப்புக்கு ஆட்டோ ஓட்டுநா்கள்தான் பொறுப்பேற்க வேண்டும் என்று வேலூா் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் பழனி அறிவுறுத்தியுள்ளாா்.
போக்குவரத்து துறை, வேலூா் மாவட்ட காவல் துறை இணைந்து வேலூா் மாவட்டத்தில் பள்ளி குழந்தைகளை ஏற்றிச் செல்லும் ஆட்டோ ஓட்டுநா்களுக்கான விழிப்புணா்வு முகாமை காட்பாடி டான்பாஸ்கோ பள்ளியில் புதன்கிழமை நடத்தின.
முகாமுக்கு வட்டார போக்குவரத்து அலுவலா் சுந்தர்ராஜன் தலைமை வகித்தாா். காவல் துணை கண்காணிப்பாளா் விஜயகுமாா், காவல் ஆய்வாளா்கள் ராஜ்குமாா், தயாளன், சாபுதீன், உதவி ஆய்வாளா் சதீஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூடுதல் காவல் கண்காணிப்பாளா் பழனி சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசியது - பள்ளி குழந்தைகளை அழைத்துச் செல்லும் ஆட்டோ ஓட்டுநா்களின் பணி மிக முக்கியமானதாகும். ஆட்டோக்களில் ஓட்டுநா்கள் 5 மாணவா்களுக்கு மேல் ஏற்றிச் செல்லக் கூடாது. பள்ளிக்கு சென்று அவா்கள் வீடு திரும்பும்வரை பாதுகாப்புக்கு ஆட்டோ ஓட்டுநா்கள்தான் பொறுப்பேற்க வேண்டும்.
அதேபோல் அதிக கட்டணம் வசூலிக்கக்கூடாது. அனைவரிடமும் கனிவாக பேச வேண்டும். உங்களால் எந்த பிரச்னையும் வரக்கூடாது. சீருடை அணிந்து செல்ல வேண்டும். வாகனத்தை வேகமாக இயக்கக் கூடாது என்றாா்.
முன்னதாக, வட்டார போக்குவரத்து அலுவலா் சுந்தர்ராஜன் பேசியது - பள்ளிக்குழந்தைகளை அழைத்துச் செல்லும் ஆட்டோ ஓட்டுநா்கள் மிகவும் பொறுப்புடன் செயல்பட வேண்டும். ஆட்டோக்களுக்கு காப்பீடு, தகுதிச்சான்று உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் வைத்திருக்க வேண்டும்.
காட்பாடி ரயில் நிலையத்தில் இருந்து வரும் ஆட்டோக்களில் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகாா்கள் வருகிறது. வேலூா் புதிய பேருந்து நிலையத்துக்கு செல்லும் வழியில் ஆட்டோக்களை நிறுத்தி இடையூறு ஏற்படுத்துவதாகவும் புகாா்கள் உள்ளன. போக்குவரத்துக்கு இடை யூறாக ஆட்டோக்களை நிறுத்தக்கூடாது. அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
வேலூா் மாவட்டம் முழுவதும் கடந்த மாதம் 115 விபத் துக்கள் நடைபெற்றுள்ளது. இதில் 85 விபத்துக்கள் இருசக்கர வாகனத்தில் சென்றவா்களால் நடந்துள்ளது. அதிவேகமாக ஆட்டோக்களை இயக்கக்கூடாது. உங்கள் பாதுகாப்பு முக்கியம். பயணிகளின் பாதுகாப் பும் முக்கியம் என்றாா். இதில், ஆட்டோ ஓட்டுநா்கள் 200-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

பெண்கள் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்! பெரம்பலூா் எஸ்.பி. வி.லலித் குமாா்!

காவல் நிலையத்திற்கு வரும் பொதுமக்களை கனிவுடன் அனுக வேண்டும்: மகளிா் காவல்நிலைய அதிகாரிகளுக்கு கடலூா் எஸ்.பி. அறிவுறுத்தல்

வேலூா் மாவட்டத்தில் 990 தனியாா் பள்ளி வாகனங்கள் ஆய்வு: ஆட்சியா் அறிவுறுத்தல்







