ஆட்டோ ஓட்டுநர்களுடன் ராகுல் காந்தி கலந்துரையாடல் பிகாரில் மின்னல் பாய்ந்து 7 பேர் பலிதமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ் குமார் அகர்வால் நியமனம்!நீட் வினாத்தாள் கசிவு: யுபிஎஸ்சியிடம் என்டிஏ கற்றுக்கொள்ள வேண்டும்! உச்சநீதிமன்றம்மேற்கு வங்கத்தில் ஊடுருவல்: 335 பேர் முகாம்களில் அடைப்பு! தில்லியில் நீட் தேர்வர்களுக்கு இலவசப் பேருந்து! விசாரணை முடிந்து 3 மாதங்களுக்குள் தீர்ப்பு! உச்ச நீதிமன்றம் உத்தரவு! திருச்செந்தூர் கோயிலில் அமைச்சரிடம் லஞ்சம்! மூவர் பணியிடை நீக்கம்!
/

அமைச்சர் ரமேஷிடம் லஞ்சம்! திருச்செந்தூர் கோயில் அர்ச்சகர், காவலாளிகள் பணியிடை நீக்கம்!

திருச்செந்தூர் முருகன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரிடம் பணம் வசூலித்த மூன்று பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதைப் பற்றி...

News image

திருச்செந்தூர் கோயிலில் பேட்டியளித்த அமைச்சர் ரமேஷ்.

Updated On :29 மே 2026, 1:12 pm IST

திருச்செந்தூர் முருகன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரிடம் பணம் வசூலித்த விவகாரத்தில் 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

திருச்செந்தூர் முருகன் கோயிலில் சிறப்பு தரிசனத்துக்காக பக்தர்களிடம் ஆயிரக்கணக்கில் கட்டணம் வசூலிப்பதாக கடந்த சில மாதங்களாக பல்வேறு புகார்கள் எழுந்து வந்தன.

அந்தப் புகார்களைத் தொடர்ந்து, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், இன்று (மே 29) அதிகாலை ஆய்வுப் பணிக்காகச் சென்றுள்ளார்.

அவர், திருச்செந்தூர் கோயில் அறநிலையத் துறை அதிகாரிகள் யாருக்கும் தகவல் தெரிவிக்காமல், காரை கோயிலுக்கு வெளியே நிறுத்திவிட்டு, உதவியாளருடன் கருப்பு நிற டி-ஷர்ட்டில், முகக்கவசம் அணிந்து கோயிலுக்குச் சென்றுள்ளார்.

தனது உதவியாளரை அனுப்பி, விரைவாக தரிசனம் செய்ய என்ன செய்ய வேண்டும் என்று அர்ச்சகர்கள், ஊழியர்களிடம் விசாரிக்க கூறியுள்ளார். அப்போது, அமைச்சர் என்று தெரியாமல், விரைவாக தரிசனம் செய்ய வைப்பதாக கூறி சண்முகவிலாச மண்டபம் வாசலில், தலைக்கு ரூ. 1,000 என அமைச்சருடன் சேர்த்து மொத்தம் 4 பேருக்கு ரூ. 4,000 லஞ்சமாக கேட்டுள்ளனர்.

பணம் இல்லை எனக் கூறிய அமைச்சர், அர்ச்சகரின் ஜி-பே எண்ணுக்கு ரூ. 4,000 அனுப்பியுள்ளார். அமைச்சர் என்றே தெரியாத நிலையில், அந்த அர்ச்சகரை அமைச்சர் ரமேஷ் கையும், களவுமாக ஆதாரத்துடன் பிடித்துள்ளார்.

இந்த ஊழலில் கோயில் அர்ச்சகர்கள் மற்றும் அறநிலையத் துறை ஊழியர்கள் ஈடுபடுவதை தெரிந்துகொண்ட அமைச்சர், கோயில் அலுவலகத்தில் விளக்கக் கடிதம் எழுதி வாங்கியுள்ளார்.

இந்தச் சம்பவத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும், யாருக்கும் பாகுபாடு காட்டமாட்டோம் என்று அமைச்சர் ரமேஷ் உறுதியளித்திருந்தார்.

அதன்படி, திருச்செந்தூர் கோயிலில் அமைச்சரிடமே பணம் வசூலில் ஈடுபட்ட அர்ச்சகர், இரண்டு முன்னாள் ராணுவ வீரர்கள் என மூன்று பேரை பணியிடை நீக்கம் செய்து அறநிலையத்துறை செயலர் உத்தரவிட்டுள்ளார்.

கோயிலில் உள்துறையில் பணிபுரியும் முன்னாள் ராணுவ வீரர்கள் கருப்பசாமி, தோப்பு மற்றும் கோயில் அர்ச்சகர் ஐயப்பன் மூவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், அர்ச்சகர் ஐயப்பன் மறு உத்தரவு வரும் வரை கோயில் நடவடிக்கைகளில் ஈடுபடவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, மொட்டை அடிப்பதற்கு பக்தர்களிடம் பணம் வசூலித்த புகாரில் முடியிறக்கும் ஊழியர்கள் சங்கர், நாகராஜ் ஆகிய இருவரும் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

Summary

Three individuals have been suspended from service at the Tiruchendur Murugan Temple for collecting money from the Minister of Hindu Religious and Charitable Endowments.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.