காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் முறைகேடு நடந்துள்ளதாக ஜோதிமணி எம்.பி. பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
சமீபத்தில், தமிழ்நாட்டில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் அங்கம் வகித்த காங்கிரஸ் கட்சி 28 தொகுதிகளில் போட்டியிட்டது.
ஸ்ரீபெரும்புதூர் போட்டியிட்ட தமிழ்நாடு காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை உள்பட 23 பேர் தோற்ற நிலையில், மயிலாடுதுறை, மேலூர், விளவங்கோடு, குளச்சல், கிள்ளியூர் ஆகிய தொகுதிகளில் மட்டும் காங்கிரஸ் வெற்றி பெற்றது.
நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில், யாருக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில், 107 இடங்களில் வெற்றி பெற்ற விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து, நிபந்தைகளுடன் ஆதரவளித்த காங்கிரஸ் கட்சி, 2 அமைச்சரவைப் பதவிகளையும் பெற்றது.
இருப்பினும், காங்கிரஸ் தோல்விக்கான காரணம் குறித்து வேட்பாளர்கள் மற்றும் தொகுதி பொறுப்பாளர்களிடம், தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் ஷோடங்கர் மற்றும் மாநில நிர்வாகிகள் விசாரணை நடத்தினர்.
அப்போது வேட்பாளர்கள் மீது மாவட் நிர்வாகிகளும், மாவட்ட நிர்வாகிகள் மீது வேட்பாளர்களும் மாறி, மாறி குற்றம் சாட்டியதாகக் கூறப்படுகிறது. மேலும், கட்சி மேலிடம் வழங்கிய பணத்தை, வேட்பாளர்கள் செலவு செய்யவில்லை என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், மக்களவை உறுப்பினர் ஜோதிமணி, காங்கிரஸ் கட்சியில் ஊழல் நடந்ததாகவும், காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் முறைகேடு நடந்ததாகவும் குற்றச்சாட்டு ஒன்றை தெரிவித்து சொந்தக்கட்சியினரையே பரபரக்க வைத்துள்ளார்.
இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் ஜோதிமணி எம்பி பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், “தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் தொகுதித் தேர்வு மற்றும் வேட்பாளர் தேர்வில் மிகப்பெரிய முறைகேடு நடந்துள்ளது.
வேட்பாளர்களைத் தேர்வு செய்த பிறகு அதற்குத் தகுந்தது போல தொகுதிகள் கேட்டுப் பெறப்பட்டுள்ளன. சர்வே என்ற பெயரில் மிகப்பெரிய ஊழல் நடைபெற்றுள்ளது. கட்சிக்கு நீண்டகாலம் பணியாற்றியவர்களை, வெற்றி வாய்ப்பு உள்ளவர்களை முற்றிலும் புறக்கணித்துவிட்டு, புதியவர்கள், வெற்றி வாய்ப்பில்லாத பலருக்குத் தொகுதிகள் கேட்டுப்பெறப்பட்டு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
தேர்தலில் போட்டியிட வாய்ப்பு பெற்ற சிலர் தேர்தல் முடிந்து சில நாள்களுக்குள் கட்சியில் இருந்து விலகுகின்றனர் அல்லது ஒதுங்கிவிட்டனர். இவர்களுக்கெல்லாம் வாய்ப்பு வழங்கியது யார்? எதனடிப்படையில் இவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது? தவறு செய்தவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?
தொகுதித் தேர்வு மற்றும் வேட்பாளர் தேர்வு குறித்து விசாரணை நடத்தாமல், தேர்தலில் கட்சி விரோத நடவடிக்கைகளை மட்டும் விசாரிக்க கமிட்டி அமைப்பது தவறு செய்தவர்கள் தப்பித்துக் கொள்வதற்கான ஒரு ஏற்பாடு மட்டுமே.
தொகுதி மற்றும் வேட்பாளர் தேர்வில் ஈடுபட்டது தமிழ்நாடு பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தலைமையிலான கமிட்டி. அந்தக் கமிட்டி மீதான குற்றச்சாட்டுகளை காங்கிரஸ் கட்சியின் விதிமுறைகளின்படி அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி மட்டுமே விசாரிக்க முடியும்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநிலப் பொறுப்பாளர்கள் விசாரிக்க முடியாது. காங்கிரஸ் கட்சி உண்மையிலேயே தன்னை சீரமைத்துக் கொள்ள விரும்பினால் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பான விசாரணையை முறையாக நடத்த வேண்டும். தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்பொழுதுதான் கட்சித் தொண்டர்களின் நம்பிக்கையைப் பெற முடியும்.
பல்வேறு மாநிலத் தேர்தல்களில் தொகுதி மற்றும் வேட்பாளர் தேர்வு தொடர்பாக குற்றச்சாட்டுகள் எழுகிறது. சில நேரங்களில் இதுவும் தோல்விக்கு ஒரு காரணமாக அமைகிறது. ஆனால், விசாரணை செய்வதற்குப் பதிலாக தவறு செய்தவர்கள் காப்பாற்றப்படுகிறார்கள்.
தமிழ்நாடு வேட்பாளர் தேர்வை மிக அருகில் பார்த்தபோது மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. இவ்வளவு வெளிப்படையாகய் தவறுகள் நடப்பது கட்சியின் எதிர்காலத்திற்கு மிகப்பெரிய பின்னடைவாக அமையும். இந்த நாட்டை பாஜக, நரேந்திர மோடியிடமிருந்து காப்பாற்ற வேண்டிய வரலாற்றுக் கடமை காங்கிரஸ் கட்சிக்கு உள்ளது.
தலைவர் ராகுல்காந்தி எவ்வித சமரசமும் இல்லாமல் போராடி வருகிறார். ஆனால், கட்சிக்குள் நடக்கும் இதுபோன்ற தவறுகள் காங்கிரஸ் கட்சித் தொண்டர்களின் நம்பிக்கையை குலைத்து வருகிறது.
நாம் ஒரு வலிமையான எதிர்க்கட்சியாக களத்தில் நின்று போராடி வெற்றிபெற வேண்டுமானால் கட்சிக்குள் தொண்டர்கள் மாவட்ட, வட்டார தலைவர்களின் குரலுக்கு மதிப்பு இருக்க வேண்டும். நேர்மையோடும், வெளிப்படைத் தனமையோடும்.கட்சி செயல்பட வேண்டும். காங்கிரஸ் கட்சிக்குள் செய்யப்பட வேண்டிய தேர்தல் சீர்திருத்தம் தமிழ்நாட்டில் இருந்து துவங்கட்டும்” என்றும் பதிவிட்டுள்ளார்.
Summary
MP Jothimani has leveled a sensational allegation, claiming that irregularities occurred in the selection of Congress candidates.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

புதிய பொறுப்பாளருடன் தமிழகம், புதுச்சேரி காங்கிரஸ் தலைவா்கள் சந்திப்பு

ராமர் கோயில் நன்கொடை முறைகேடு வழக்கில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை: காங்கிரஸ்

மருங்காபுரி பகுதியில் நவீன குளிர்பதனக் கிடங்கு: ஜோதிமணி எம்.பி. கோரிக்கை
ரூ. 30,000 கோடி டெண்டர் முறைகேடு! ஆதாரங்களை வெளியிட பாஜகவுக்கு காங்கிரஸ் சவால்
விடியோக்கள்

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் எல்லாம் சரியாகிவிடுமா?: அமைச்சர் நிர்மல் குமார் | TVK | BJP


