உருவானது முரசு புயல்! வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!தமிழ்நாடு நாள் ஜூலை 18 மட்டுமே! வரலாற்றை மாற்ற வேண்டாம்: திமுக ஞானேஷ் குமார் பதவி நீக்கம்: தில்லியில் இந்தியா கூட்டணி பேரணி!ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேர் கைது!வணிக சிலிண்டர் விலை உயர்வு!இந்தியா கூட்டணியின் பேரணி மாபெரும் வெற்றி பெற வேண்டும்: டி.கே. சிவகுமார்

எம்.ஜி.ஆர். கண்டெடுத்து, கலைஞர் வளர்த்தெடுத்த மாவீரர் துரைமுருகன்: மு.க. ஸ்டாலின்

திமுக பொதுச் செயலாளர் துரைமுருகனின் இல்லத் திருமண விழாவில் கலந்துகொண்டு மு.க. ஸ்டாலின் பேசியதாவது...

Duraimurugan, a hero discovered by M.G.R. and nurtured by Kalaignar: M.K. Stalin

திமுக பொதுச் செயலாளர் துரைமுருகனின் இல்லத் திருமண விழாவில் மு.க. ஸ்டாலின்.

Updated On :

எம்.ஜி.ஆர். கண்டெடுத்து, கலைஞர் வளர்த்தெடுத்த மாவீரர்தான் துரைமுருகன் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திமுக பொதுச் செயலாளர் துரைமுருகனின் இல்லத் திருமண விழாவில் கலந்துகொண்டு அவர் பேசியதாவது: எத்தனையோ அரசியல் தலைவர்களை பார்த்தவர்; எத்தனையோ அரசியல் தலைவர்களிடத்தில் பழகியவர்; எத்தனையோ தேர்தல் களத்திலும் ஈடுபட்டவர்; அவ்வாறு ஈடுபடுகிற நேரத்தில் எத்தனையோ தோல்விகளை, வெற்றிகளை சந்தித்தவர் துரைமுருகன்.

இன்னும் சொல்ல வேண்டும் என்று சொன்னால், எத்தனையோ சட்டப்பேரவை விவாதங்களில் பங்கேற்று அழுத்தமாக ஆணித்தரமாக உரையாற்றியிருப்பவர் துரைமுருகன். எதிராளிகளை கூட வியக்க வைக்கும் வகையில் பேச்சாற்றல் துரைமுருகனுக்கு உண்டு. சிறந்த நிர்வாகியாகவும் உணர்ச்சியோடு பேசக் கூடியவராக மட்டுமல்ல, நகைச்சுவை கலந்த அந்த உரையை கண்டவர்கள் நாம். அறிவுப்பூர்வமான புள்ளி விவரங்களை எல்லாம் எடுத்துச் சொல்லி, மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியவர் துரைமுருகன்.

துரைமுருகனின் செயலைப் பற்றி நான் சொல்ல வேண்டும் என்றால், ஏதாவது ஒரு விஷயத்தை பற்றி நாம் அவரிடத்தில் கேட்டால், அந்த விஷயத்தோடு நிற்காமல், அதன் வரலாறு; அந்த விஷயம் எங்கு நடந்தது; எந்த ஊரில் நடந்தது; எந்த தெருவில் நடந்தது; எந்த வீட்டில் நடந்தது; யார் யார் அதில் பங்கேற்றார்கள்? என்பதை மடைதிறந்த வெள்ளம் போல அனைத்தையும் விரல் நுனியில் வைத்திருப்பதைப் போல எல்லாவற்றையும் பேசும் ஆற்றலைப் பெற்றவர் துரைமுருகன்.

சட்டப்பேரவையை பொறுத்தவரைக்கும், இவரை எதிர்த்து பேசுவது என்பது பெரிய விஷயமாக இருந்தது. அந்த அளவுக்கு சட்டப்பேரவையில் தன்னுடைய அழுத்தத்தைச் எடுத்துச் சொல்லக்கூடியவர்.

இன்னும் சொல்ல வேண்டும் என்றால், தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆரின் ஆட்சி நடைபெற்றபோது, அந்த ஆட்சிக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் துரைமுருகன், க.சுப்பு, ரகுமான் கான் ஆகிய இந்த மூன்று பேரும் தான் அன்றைக்கு சிம்ம சொப்பனமாக சட்டப்பேரவையில் விளங்கினார்கள். அந்தக் காரணத்தால், அன்றைக்கு இருந்த எம்.ஜி.ஆரின் அ.தி.மு.க. ஆட்சி அவர் மீது நடவடிக்கை எடுத்து, சட்டப்பேரவையில் வரக்கூடாது என்று சொல்லி ஒரு தண்டனை கொடுத்தார்கள்.

அப்போது தலைவர் கலைஞர் அந்தத் தண்டனையை கட்சியின் பிரசாரத்திற்காக பயன்படுத்தி, ‘இடி – மின்னல் – மழை’ என்ற தலைப்பைப் போட்டு, தமிழ்நாடு முழுவதும் சுற்றிவர சொன்னார்கள். ‘மின்னல்’ என்ற தலைப்பில் துரைமுருகன் பேசிய பேச்சுக்கள் எல்லாம் இன்றைக்கும் தமிழ்நாட்டின் தெருக்களில் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது.

அவர் பிறந்த சொந்த ஊரான காங்குப்பத்தில் கருப்பு சட்டையை அன்றைக்கு இருந்த காங்கிரஸ் கட்சிக்காரர்கள் எரித்தார்கள். அதை எதிர்த்து போரிட்டவர் துரைமுருகன். அப்போது அன்னை சத்தியவாணி முத்துவை அழைத்து வந்து, அந்த காங்குப்பத்தில் ஒரு கிளைக் கழகத்தை தொடங்கி வைத்தார். 16 வயதில் கிளைக்கழகத்தின் செயலாளராக இருந்து, படிப்படியாக உயர்ந்து வளர்ந்து, இன்றைக்கு ஒரு மாபெரும் இயக்கத்தின் பொதுச்செயலாளராக மிகப்பெரிய பொறுப்பில், அவர் இருந்து கொண்டிருக்கிறார்.

பெருமையோடு சொல்ல வேண்டும் என்றால், பொதுவாழ்வில் ஒருவர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டுதான் துரைமுருகன் என்று சொன்னால், அது மிகையாகாது.

1965-இல் இந்தி ஆதிக்கத்தின் எதிர்ப்பு போராட்டம் நடைபெற்றபோது, தளபதியாக உருவெடுத்தவர்தான் துரைமுருகன்.

அவருடைய ஆரம்ப அரசியல் வாழ்க்கையைப் பற்றி சொல்ல வேண்டும் என்று சொன்னால், அவரே பல நேரங்களில் சட்டப்பேரவையிலும், பொதுக்கூட்டத்தில் பேசியிருக்கிறார். என்ன என்று கேட்டால், எம்.ஜி.ஆர். கண்டெடுத்து, தலைவர் கலைஞர் வளர்த்தெடுத்த ஒரு மாவீரன்தான் துரைமுருகன்.

1963-இல் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் ஒரு விழா நடைபெற்றபோது, துரைமுருகன் அங்கு சிறப்புரை ஆற்றியிருக்கிறார். அந்த விழாவிற்கு வந்த எம்.ஜி.ஆர்., துரைமுருகன் பேச்சைப் பார்த்து அசந்து ஆச்சரியப்பட்டு வாழ்த்தி, அவருடைய கல்விக்கே உதவியவர் எம்.ஜி.ஆர்..

அதுமட்டுமல்ல, பின்னர் திருவண்ணாமலையின் இடைத்தேர்தல் வந்தபோது, கே.வி.குப்பம் கூட்டத்தில் எம்.ஜி.ஆர்.தான் துரைமுருகனை கலைஞரிடத்தில் அறிமுகப்படுத்தி வைத்தார்.

எனவே, இவ்வாறு பல்வேறு நிகழ்ச்சிகளை நான் இங்கு எடுத்துச் சொல்ல முடியும். இன்னும் சொல்ல வேண்டும் என்று சொன்னால், திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து எம்.ஜி.ஆர். பிரிந்து தனி கட்சி தொடங்கியபோது, துரைமுருகனை எம்.ஜி.ஆர்., “நீயும் என் கட்சியில் வந்து சேர்’ என்று அழைத்திருக்கிறார். ஆனால், எம்.ஜி.ஆர். இடத்தில், துரைமுருகன் சொன்னது என்னவென்று கேட்டால், “நீங்கள் என்னுடைய கல்விக்கு உதவியிருக்கலாம்; என்னிடத்தில் நீங்கள் அன்பைப் பொழிந்திருக்கலாம், பாராட்டியிருக்கலாம். ஆனால், கொள்கை என்று வருகிறபோது எனக்கு தலைவன் கலைஞர்தான். நான் அவரோடுதான் இருப்பேன்” என்று சொல்லி, இன்று வரையில் கலைஞர் வளர்த்தெடுத்திருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தில்தான் இன்றைக்கும் அவர் பொதுச் செயலாளராக இருந்து பணியாற்றிக் கொண்டிருக்கிறார் என்று தெரிவித்தார்.

Summary

DMK President M.K. Stalin has stated that Duraimurugan is a stalwart discovered by M.G.R. and nurtured by Kalaignar.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.