போதைப் பொருள் பயன்பாட்டை ஊக்குவிப்பது தான் முதல்வரின் வேலையா? டிடிவி தினகரன்
மாணவர்களுக்கு விருது வழங்கும் விழாவில் முதல்வர் விஜய்யின் பேச்சுக்கு டிடிவி தினகரன் கண்டனம்...
டிடிவி தினகரன் - DNS
மாணவ, மாணவியர்கள் மத்தியில் போதைப் பொருள் பயன்பாட்டை ஊக்குவிப்பது போல பேசுவது தான் முதல்வரின் வேலையா என்று அமமுக பொதுச் செயலர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை நீலாங்கரையில் தவெக சார்பில் மாணவர்களுக்கு விருது வழங்கும் விழா நவ. 4 ஆம் தேதி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட முதல்வர் விஜய், மாணவர்கள் மத்தியில் பேசிய கருத்துக்கு கண்டனம் எழுந்து வருகின்றது.
இதுதொடர்பாக டிடிவி தினகரன் வெளியிட்டிருக்கும் பதிவில் தெரிவித்திருப்பதாவது:
“இளைஞர்களின் எதிர்காலத்தை சீரழித்து வரும் போதைப் பொருள் பயன்பாடு கொண்டாட்டப் பட்டியலில் (Fun & Enjoyment) சேர்ந்துவிட்டதா? – மாணவ, மாணவியர்கள் மத்தியில் போதைப் பொருள் பயன்பாட்டை ஊக்குவிப்பது போல பேசி, அதனை இயல்பாக்க முயல்வது தான் முதலமைச்சரின் வேலையா?
10 மற்றும் 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு விருது வழங்குகிறோம் என்ற பெயரில் அவர்களை அழைத்து, அவர்கள் மத்தியில், “லஞ்சம் ஊழல் அந்த சைடு எல்லாம் போய்டாதீங்க, இந்த போதைப் பொருள் அந்த சைடு எல்லாம் போய்டாதீங்க ஒரு Fun & Enjoyment இருக்கும் ஆனா எந்த தவறுக்கும்அடிமையாயிடாதீங்க ” என முதலமைச்சர் ஜோசப் விஜய் பேசியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
ஏற்கனவே காற்றில் கலந்த விஷத்தைப் போலத் தமிழகத்தின் பட்டிதொட்டியெங்கும் பரவி, குறிப்பாக மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் எதிர்காலத்தையே சிதைத்துக் கொண்டிருக்கும் போதைப் பொருட்களை, கொண்டாட்டப் பட்டியலில் சேர்த்து, அளவுடன் பயன்படுத்துங்கள் என்பது போல ஊக்குவிப்பதும், அவற்றின் பயன்பாட்டை இயல்பாக்க முயல்வதும் முதலமைச்சருக்கும் அவர் வகிக்கும் பதவிக்கும் அழகல்ல.
சமீபத்தில், 100 கிலோவுக்கும் அதிகமான மெத்தம்பெட்டமைன் (Methamphetamine) எனும் கொடிய போதைப்பொருளைப் பதுக்கி வைத்திருந்த தவெக நிர்வாகியை மத்திய அரசின் விசாரணை அமைப்பு கைது செய்துள்ள நிலையில், தற்போது போதைப்பொருள் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையிலான முதலமைச்சரின் பேச்சைப் பார்க்கும்போது, பல்வேறு சந்தேகங்கள் எழுகின்றன.
திரைப்படங்களின் மூலம் மது அருந்துதல், புகைப்பிடித்தல், போதைப் பொருட்களைப் பயன்படுத்துதல், அதை விற்பனை செய்வது போன்ற சமூகச் சீர்கேடுகளை ஊக்குவிக்கும் வகையிலான கதாபாத்திரங்களில் நடித்தது போதாதென்று, தற்போது மாணவர்களுக்கு விருது வழங்கும் விழாவிலும் இத்தகைய செயல்பாடுகளை இயல்பாக்கி பேசுவது, முதலமைச்சரே இளைஞர்களையும் மாணவர்களையும் தவறான பாதைக்கு அழைத்துச் செல்கிறாரோ என்ற அச்சத்தை ஏற்படுத்துவதோடு, முதலமைச்சரே சொல்லிவிட்டார் என்பதற்காகச் சிறிதளவு போதைப் பொருட்களைப் பயன்படுத்தலாமே என்ற மனநிலைக்கு மாணவர்களும் இளைஞர்களும் சென்றுவிட்டால், அவர்களது எதிர்காலத்தைப் பாதுகாப்பது யார்? அதற்கான சமூகப் பொறுப்பை ஏற்பது யார்? என்ற கேள்வியும் எழுகிறது.
எதற்கெடுத்தாலும் தன்னை எம்.ஜி.ஆருடன் ஒப்பிட்டுப் பேசிக்கொள்ளும் முதலமைச்சர் ஜோசப் விஜய், புரட்சித்தலைவர் தான் நடித்த திரைப்படங்களில் மது அருந்துதல், புகைபிடித்தல் உள்ளிட்ட எந்தவொரு சமூகச் சீர்கேட்டையும் ஊக்குவிக்கும் வகையிலான காட்சிகளில் நடிக்காமல், தனது திரைப்படங்கள் மக்களுக்கு நன்னடத்தையையும் , சமூக விழிப்புணர்வையும் எடுத்துரைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தவர் அதனால் தான் அவர் மக்களால் அன்போடு ‘வாத்தியார்’ என்று அழைக்கப்படுகிறார் என்பதை எண்ணிப்பார்த்து இனியாவது எம்.ஜி.ஆருடன் தன்னை ஒப்பிட்டுப் பேசுவதை நிறுத்திக்கொள்வதோடு தான் அத்தகைய ஒப்பீட்டுக்குத் துளியும் தகுதியோ அருகதையோ இல்லாதவர் என்பதை உணர வேண்டும்!
தமிழகத்தில் அன்றாடம் அரங்கேறும் கொலை, கொள்ளை மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்களுக்கான அடிப்படைக் காரணிகளில் ஒன்றாக இருக்கும் போதைப் பொருட்களின் புழக்கத்த்தை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டிய முதலமைச்சர் ஜோசப் விஜய், ஒரு துளி விஷம் என்றாலும் அது விஷம் தான் என்பதை உணராமல் போதைப் பொருட்களின் பயன்பாட்டை ஊக்குவிப்பது போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தியிருப்பது அபத்தமானது.
எனவே, மாணவர்களுக்கு விருது வழங்கும் மேடையில், அவர்களை நல்வழிப்படுத்துவதற்கான விதைகளை விதைத்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டுமே தவிர, விஷத்தை விதைத்து அவர்களின் எதிர்காலத்தைப் பாழாக்கக் கூடாது என்பதை முதலமைச்சர்ஜோசப் விஜய்க்கு இந்நேரத்தில் நினைவுபடுத்த விரும்புகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
Summary
Is it the Chief Minister's job to promote drug use? – TTV Dhinakaran
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


