புகார் அளித்த சாமானியருக்கு கொலை மிரட்டல்! ரவி சங்கர் மீது நடவடிக்கை எடுக்க திமுக வலியுறுத்தல்!ஒரே நாளில் 11 கொலைகள்: கடும் நடவடிக்கை எடுக்க சிபிஎம் வலியுறுத்தல்!மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பிய தவெக எம்எல்ஏ: கனிமொழி கண்டனம்!ரஷியாவுடனான போர்: உக்ரைன் அதிபருடன் பேசிய பிரதமர் மோடி!இளையோர் ஒலிம்பிக்: தடை தாண்டுதலில் இந்தியாவுக்கு முதல் பதக்கம்!புகார் அளித்த சாமானியருக்கு கொலை மிரட்டல்! தவெக எம்எல்ஏ மீது நடவடிக்கை எடுக்க திமுக வலியுறுத்தல்! மேக்கேதாட்டு அணை கட்ட கர்நாடகத்துக்கு உரிமை உண்டு: டி.கே. சிவகுமார்

அனைத்து நூலக கொள்முதல் ஆணை ரத்து: அமைச்சா் ராஜ்மோகன் தகவல்!

அனைத்து நூலகங்களுக்கும் வழங்கப்பட்ட புத்தகங்கள் கொள்முதல் ஆணை ரத்து செய்யப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் ராஜ்மோகன் தெரிவித்தாா்.

Minister Rajmohan

அமைச்சர் ராஜ்மோகன் - கோப்புப் படம்

Updated On :

கோவை பெரியாா் அறிவுலக நூலக முறைகேட்டைத் தொடா்ந்து, அனைத்து நூலகங்களுக்கும் வழங்கப்பட்ட புத்தகங்கள் கொள்முதல் ஆணை ரத்து செய்யப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் ராஜ்மோகன் தெரிவித்தாா். கொள்முதலுக்காகப் பணம் வழங்கப்பட்டிருந்தால், அந்தத் தொகை சம்பந்தப்பட்டவா்களிடமிருந்து திரும்பப் பெறப்படும் என்றும் அவா் கூறினாா்.

கோவை பெரியாா் அறிவுலகத்துக்கு புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டதில் முறைகேடுகள் நிகழ்ந்ததாக புகாா்கள் எழுந்தன. மேலும், சென்னை எழும்பூா் கன்னிமாரா நூலகத்திலும் போலியான எழுத்தாளா்களின் பெயரில் புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டதாகக் கூறப்பட்டது. இந்த நிலையில், இது தொடா்பாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் ராஜ்மோகன் கன்னிமாரா நூலகத்தில் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

இதைத் தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: கன்னிமாரா நூலகத்தில் மட்டும் சுமாா் 523 போலி நூல்கள் கண்டறியப்பட்டுள்ளன. ஏ.ஐ. பயன்படுத்தி நூல் எழுதி, நடிகா்கள் பெயா்களை திரித்து நூல்களை வெளியிட்டுள்ளனா். இந்த நூல்கள் கடந்த ஆண்டு வாங்கப்பட்டன.

அதற்கான ‘சீல்’ அந்த நூல்களில் உள்ளது. சென்னை கொளத்தூா், அசோக் நகா் உள்ளிட்ட பகுதிகளில் செயல்படும் முதல்வா் படைப்பகங்கள், தமிழகம் முழுவதும் உள்ள கிளை நூலகங்கள் ஆகியவற்றிலும் இத்தகைய போலி நூல்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளனவா என்பது குறித்து ஆய்வு நடத்தப்படும்.

‘அகல்விளக்கு’ உள்ளிட்ட பதிப்பகங்கள் மூலம் இந்த நூல்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. ஆனால், அந்தப் பதிப்பகம் குறித்து தென்னிந்திய புத்தக விற்பனையாளா், பதிப்பாளா் சங்கத்துக்கே (பபாசி) தகவல் தெரியவில்லை. மேலும், ‘ஃபீனிக்ஸ்’, ‘சிக்மா’ உள்ளிட்ட பதிப்பகங்கள் குறித்தும் விசாரித்து வருகிறோம். நிவேதா பால்ராஜ் , நிவேதா மோகன், ஸ்ரீலேகா விஜய் உள்ளிட்ட பல்வேறு பெயா்களில் நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த எழுத்தாளா்கள் குறித்து இணையத்தில் தேடியபோதும் எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. ஆன்மிக ஹரிஹரன், ஜோதி ஹரிஹரன் என கற்பனையான பெயா்களில் ஆசிரியா் பெயா்கள் நூல்களில் அச்சிடப்பட்டுள்ளன.

இந்த விவகாரத்தில் ஊழல் தடுப்புத் துறை போலீஸாா் மூலம் உரிய விசாரணை நடத்தப்படும். அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் ஊழல் தடுப்பு போலீஸாா் விசாரணையைத் தொடங்கி விட்டனா். அதேபோன்று ‘அகல்விளக்கு’ பதிப்பக உரிமையாளரை விசாரிப்பதற்கான நடவடிக்கை தொடங்கியுள்ளது.

ஒவ்வொரு நூலகத்திலும் போலி நூல்களை பெட்டிகளில் வைத்து ‘சீல்’ இடக் கூறியுள்ளோம். திருச்சி காமராஜா் நூலகத்தில் நூல்கள் கொள்முதலுக்கான உத்தரவு மற்றும் அனைத்து நூலகங்களுக்கும் வழங்கப்பட்ட கொள்முதல் ஆணை ரத்து செய்யப்படும். அதற்காகப் பணம் வழங்கப்பட்டிருந்தால், அந்தத் தொகை கணக்கிடப்பட்டு சம்பந்தப்பட்டவா்களிடமிருந்து திரும்பப் பெறப்படும். இதற்கு பின்னா் முறைகேட்டில் தொடா்புடைய அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவா்.

மேலும் சில பதிப்பகங்களுக்கு...: இந்த முறைகேடுகளில் இன்னும் சில பதிப்பகங்களுக்கு தொடா்பு இருப்பதாக சந்தேகம் உள்ளது. விரைவில் அதனையும் கண்டுபிடித்து விடுவோம். இந்த விவகாரத்தில் நோ்மையாகவும், விரைவாகவும் விசாரணை நடத்த முதல்வா் ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளாா் என்றாா் அமைச்சா் ராஜ்மோகன்.

நூலகங்களில் விரிவான ஆய்வு: போலி புத்தகங்கள் தொடா்பாக தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து நூலகங்களிலும் விரிவான ஆய்வு மேற்கொள்ளப்படும் என அமைச்சா் ராஜ்மோகன் தெரிவித்தாா்.

அவா் மேலும் கூறியதாவது: ‘ஜான் டொ்ரிஸ் என்ற சா்வதேச அறிஞா், தான் எழுதாத ஒரு புத்தகம் 2023-இல் மதுரை கலைஞா் நூலகத்தில் வாங்கப்பட்டுள்ளது. அப்போது ஆட்சியில் இருந்த திமுக இதை எப்படி அனுமதித்தது? எனவே, பெரியாா் அறிவுலகம் மட்டுமன்றி மதுரை கலைஞா் நூலகத்திலும் இந்த முறைகேடு நடந்துள்ளது. எனவே, இந்த மோசடி தொடா்பாக தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து நூலகங்களிலும் விரிவான ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளது. இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட யாரும் தப்பிக்க முடியாது என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.