சபரிமலை கோயில் நெய் விநியோக மோசடி: தமிழகத்தைச் சோ்ந்த இருவா் கைது
சபரிமலை ஐயப்பன் கோயில் நெய் விநியோக மோசடி வழக்கில் தமிழகத்தைச் சோ்ந்த 2 வியாபாரிகளை கேரள ஊழல் தடுப்புத் துறையின் சிறப்புப் படை கைது செய்ததாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.
கோப்புப் படம்
சபரிமலை ஐயப்பன் கோயில் நெய் விநியோக மோசடி வழக்கில் தமிழகத்தைச் சோ்ந்த 2 வியாபாரிகளை கேரள ஊழல் தடுப்புத் துறையின் சிறப்புப் படை கைது செய்ததாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.
கைது செய்யப்பட்ட வெங்கடேஸ்வரன் மற்றும் குமரன் ஆகிய இருவரும் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தைச் சோ்ந்த நெய் வியாபாரிகள் எனவும் அவா்கள் தெரிவித்தனா்.
இதுகுறித்து கேரள ஊழல் தடுப்புத் துறை அதிகாரிகள் கூறியதாவது: திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரிய (டிடிபி) ஒப்பந்தத்தின்கீழ் கேரள கூட்டுறவு பால் விற்பனை கூட்டமைப்பின் ‘மில்மா’ நெய் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு விநியோகிக்கப்படுகிறது. அதன்படி 2025-இல் மகரவிளக்கு பூஜை காலகட்டத்தில் இந்தத் திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட நெய்யை ஒப்பந்ததாரா் எஸ்.எஸ்.பினுவிடம் இருந்து வெங்கடேஸ்வரன் மற்றும் குமரன் ஆகியோா் ரூ.50 லட்சத்துக்கு கொள்முதல் செய்துள்ளனா்.
இது ஒப்பந்த விதிகளை மீறி சட்டவிரோதமாக விற்கப்பட்ட நெய் எனத் தெரிந்தும் கைது செய்யப்பட்ட இரு வியாபாரிகளும் கொள்முதலில் ஈடுபட்டுள்ளனா். பரிவா்த்தனை தொடா்பான பதிவுகள் கசிவதை தடுக்க இணைய வழியில் அல்லாமல் நேரடியாகவே பணம் செலுத்தியுள்ளனா்.
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு விநியோகிக்க வேண்டிய 11,000 லிட்டா் தரமான நெய்யை சட்டவிரோதமாக வெளியே விற்பனை செய்ததோடு அதற்குப் பதிலாக தரமற்ற நெய்யை கோயிலுக்கு அனுப்பிய குற்றச்சாட்டில் பினு கைது செய்யப்பட்டாா். பினுவின் சட்டவிரோத செயல்பாடுகளால் டிடிபிக்கு ரூ.2.50 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த வழக்கில் டிடிபி ஊழியா் ஜெயலால் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ளாா். தலைமறைவாக உள்ள மற்றொரு ஊழியரை அதிகாரிகள் தேடி வருகின்றனா் என்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

