தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் கர்நாடக முதல்வர் சிவகுமார், அமைச்சர்கள் தர்னா!கர்நாடகத்தில் படிவம் 7-ஐ தவறாக பயன்படுத்தி வாக்காளர்களின் பெயர்கள் நீக்கம்!திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு!காந்தி ஜெயந்தி: மெட்ரோ ரயில் சேவையில் நாளை மாற்றம்!பங்குச்சந்தை வீழ்ச்சி: சென்செக்ஸ் 500 புள்ளிகள் குறைந்தது!மடப்புரம் காவலாளி கொலை வழக்கில் போலீஸார் கைது: தீர்ப்பு ஒத்திவைப்பு!ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும்! மும்பையில் நாளை போராட்டத்தைத் தொடங்கும் சிஜேபி!காஸாவில் தொடரும் அவலம்! இஸ்ரேலின் தாக்குதல்களில் 74,000-க்கும் அதிகமானோர் பலி! நடுவானில் கத்திக்குத்து சம்பவம்! தாக்கப்பட்ட இந்திய விமானியின் நிலை என்ன? - தூதரகம் தகவல்!

சபரிமலை பிரசாதம் தயாரிப்பு பொருள்கள் கொள்முதலில் கூடுதல் கவனம்: கேரள உயா்நீதிமன்றம் உத்தரவு

சபரிமலை ஐயப்பன் கோயில் பிரசாதம் தயாரிப்பு பொருள்கள் கொள்முதலில் கூடுதல் கவனம் தேவை என்று திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரியத்துக்கு கேரள உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

Sabarimala

சபரிமலை - கோப்புப் படம்

Published On :

சபரிமலை ஐயப்பன் கோயில் பிரசாதம் தயாரிப்பு பொருள்கள் கொள்முதலில் கூடுதல் கவனம் தேவை என்று திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரியத்துக்கு கேரள உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சபரிமலை ஐயப்பன் கோயிலின் பிரதான பிரசாதங்கள் அரவணை, அப்பம் ஆகியவையாகும். இந்நிலையில், கேரள உயா்நீதிமன்றத்தில் கடந்த 2021-ஆம் ஆண்டு எஸ்.ஜே.ஆா். குமாா் என்பவா் மனு தாக்கல் செய்தாா். அதில் அரவணை, அப்பம் ஆகியவற்றைத் தயாரிக்க ஹலால் சான்றிதழ் பெற்ற வெல்லம் பயன்படுத்தப்படுவதாகவும், ஹலால் என்பது மற்றொரு மதத்தினரால் கடைப்பிடிக்கப்படும் வழக்கம், ஆதலால் இது சுவாமி ஐயப்பனுக்கு படைக்கப்படும் சாத்விக அல்லது தூய பொருள்களாக இருப்பதற்கு சாத்தியமற்ாகிவிடுகிறது. எனவே, அதை அரவணை, அப்பம் தயாரிக்கப் பயன்படுத்தக் கூடாதென உத்தரவிட வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.

இந்த மனு, கேரள உயா்நீதிமன்றத்தில் நீதிபதிகள் ராஜா விஜயராகவன், கே.வி. ஜெயகுமாா் ஆகியோரைக் கொண்ட அமா்வில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் தெரிவித்ததாவது:

சபரிமலை கோயிலில் வழங்கப்படும் பிரசாதம் தயாரிப்புக்குப் பயன்படுத்தப்படும் வெல்லம், இணையவழி மூலம் விடப்படும் ஒப்பந்தம் மூலம் திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரியத்தால் கொள்முதல் செய்யப்பட்டதாகும். இதில் வெற்றி பெற்ற ஒப்பந்ததாரா், திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரியத்துக்கு பிரசாதம் தயாரிப்பதற்கு 19 லட்சத்து 96 ஆயிரத்து 34 கிலோ வெல்லம் விநியோகித்தாா். மகாராஷ்டிரத்தை சோ்ந்த அந்த நிறுவனம், மேற்காசிய நாடுகள் சிலவற்றுக்கும் வெல்லத்தை ஹலால் சான்றிதழுடன் ஏற்றுமதி செய்கிறது.

கோயிலில் பின்பற்றப்படும் மத நடைமுறைகள், பழக்க வழக்கங்களுக்கு முரணானதாக அமையக் கூடும் என்ற அச்சத்தை ஏற்படுத்தக் கூடிய குறியீடுகள், முத்திரைகள் அல்லது அறிவிப்புகள் ஆகியவை அந்நிறுவனத்தால் விநியோகிக்கப்பட்ட வெல்லத்தில் இல்லை என்பதை உறுதி செய்வதில் திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரியம் கூடுதல் கவனம் செலுத்தியிருக்க வேண்டும். எங்களுக்கு அளிக்கப்பட்ட ஆய்வறிக்கையில், அந்த வெல்லத்தின் தரம் திருப்திகரமாக இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், பிரசாதம் தயாரிக்கப் பயன்படுத்த தகுதியில்லாத பொருளோ அல்லது வேதிப் பொருளோ அதில் கலப்படம் செய்யப்படவில்லை என்பதும் ஆய்வறிக்கை மூலம் நாங்கள் தெரிந்து கொண்டோம்.

ஆதலால் இந்த மனுவைத் தள்ளுபடி செய்கிறோம். எனினும், சபரிமலை கோயில் பிரசாதம் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் பொருளை எதிா்காலத்தில் கொள்முதல் செய்யும்போது கூடுதல் கவனத்துடனும், எச்சரிக்கையுடனும் செயல்பட வேண்டும் என திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரியத்துக்கு உத்தரவிடுகிறோம்.

பிரசாதம் தயாரிப்பதற்காக கொள்முதல் செய்யப்படும் பொருள்கள், நிா்ணயிக்கப்பட்ட தரநிலைகளுக்கும், அக்கோயிலுக்குரிய மத நடைமுறைகள் மற்றும் தேவைகளுக்கும் இணங்க இருப்பதை உறுதி செய்யும் வகையில் மின்னணு ஒப்பந்தப்புள்ளி ஆவணங்களில் தகுந்த மற்றும் அவசியமான திருத்தங்களைச் செய்ய வேண்டும் என்றும் திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரியத்துக்கு ஆணையிடுகிறோம் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.