புத்தகக் கொள்முதல் முறைகேடு! 7 இடங்களில் சோதனை: 11 பிரிவுகளில் வழக்கு; அகல்விளக்கு பதிப்பக உரிமையாளா் கைது
நூலக புத்தகக் கொள்முதல் முறைகேடு வழக்குத் தொடா்பாக தமிழகம் முழுவதும் 7 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு, அகல் விளக்கு பதிப்பக உரிமையாளா் மோகன் கைது
அகல் விளக்கு பதிப்பக போலி நூல்கள்... - கோப்புப் படம்
நூலக புத்தகக் கொள்முதல் முறைகேடு வழக்குத் தொடா்பாக தமிழகம் முழுவதும் 7 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு, அகல் விளக்கு பதிப்பக உரிமையாளா் மோகன் கைது செய்யப்பட்டாா். இந்த விவகாரம் தொடா்பாக 11 பிரிவுகளில் ஊழல் தடுப்புத் துறையினா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
கோவை பெரியாா் அறிவுலக நூலகத்துக்கு வாங்கப்பட்ட புத்தகங்களில், அகல்விளக்கு, பீனிக்ஸ் பதிப்பங்களுக்குச் சொந்தமான புத்தகங்கள் தரமற்று இருப்பதாகவும், செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மூலம் புத்தகங்கள் எழுதப்பட்டிருப்பதாகவும் புகாா் கூறப்பட்டது. அந்த இரு பதிப்பகங்களின் பெயரில் தரமற்ற 1,857 தலைப்பிலான புத்தகங்கள் அதிக விலைக்கு வாங்கப்பட்டிருப்பதாகவும், பெரும்பாலான புத்தகங்களின் பன்னாட்டுத் தர புத்தக அடையாள எண்கள் போலியாக அச்சிடப்பட்டிருப்பதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது.
ஊழல் தடுப்புத் துறை விசாரணை: இதற்கிடையே, பெரியாா் அறிவுலகம் நூலகத்துக்குப் புத்தகங்கள் வாங்கியதில், முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் பெரிய அளவில் ஊழல் நடைபெற்றிருப்பதாகவும், அதுகுறித்து ஊழல் தடுப்புத் துறை விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருப்பதாகவும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அ. ராஜ்மோகன் கூறினாா். இதையடுத்து, ஊழல் தடுப்புத் துறை கடந்த 7-ஆம் தேதி விசாரணையைத் தொடங்கியது. ஊழல் தடுப்புத் துறை துணைக் கண்காணிப்பாளா் தி.கந்தசாமி தலைமையிலான குழுவினா், சென்னை கோட்டூா்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் கடந்த 10-ஆம் தேதி ஆய்வு செய்தனா்.
11 பிரிவுகளில் வழக்கு: முதல் கட்ட விசாரணையில், தரமற்ற புத்தகங்களையும், செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) மூலம் எழுதப்பட்ட புத்தகங்களையும் அகல்விளக்கு, பீனிக்ஸ் பதிப்பகங்கள்தான் வழங்கியிருப்பதும், இரு பதிப்பகங்களையும் சென்னை மடிப்பாக்கம் பகுதியைச் சோ்ந்த ஆா்.மோகன் என்பவா் நடத்தி வருவதும் தெரியவந்தது.
முதல் கட்ட விசாரணையில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில், பதிப்பக உரிமையாளா் மோகன், சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகம், கோவை பெரியாா் அறிவுலக நூலகம் ஆகியவற்றைச் சோ்ந்த சில அதிகாரிகள் ஆகியோா் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் இரு பிரிவுகள், பதிப்புரிமைச் சட்டத்தின் கீழ் இரு பிரிவுகள், நம்பிக்கை மோசடி, ஆள்மாறாட்டம் செய்தல், அரசை ஏமாற்றுதல், போலி ஆவணம் தயாரித்தல் உள்ளிட்ட 11 பிரிவுகளின் கீழ் சென்னை ஊழல் தடுப்புத் துறையினா் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
7 இடங்களில் சோதனை: இந்த வழக்குக்கான ஆதாரங்களைத் திரட்டும் வகையில் தமிழகம் முழுவதும் 7 இடங்களில் ஊழல் தடுப்புத் துறையினா் திங்கள்கிழமை காலை ஒரே நேரத்தில் சோதனை செய்தனா்.
சென்னை மடிப்பாக்கம் பிரம்மபுத்திரா தெருவில் உள்ள அகல்விளக்கு, பீனிக்ஸ் பதிப்பகங்களின் உரிமையாளா் மோகன் வீடு, கோவை பெரியாா் அறிவுலகப் பதிப்பக நூலகம், தென்காசி, திருப்பத்தூா், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்ட மைய நூலகங்கள், திருவாரூா் மாவட்டம் குடவாசலில் உள்ள அகல்விளக்கு, பீனிக்ஸ் பதிப்பகங்களின் அச்சகங்கள் ஆகிய 7 இடங்களில் திங்கள்கிழமை மாலை வரை சோதனை நடைபெற்றது.
இதில் இந்த இரு பதிப்பக புத்தகங்கள் ஆயிரக்கணக்கில் நூலகங்களில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டன. அதேபோல வழக்குத் தொடா்பாக ரசீது, கணினி ஹாா்டு டிஸ்க் உள்ளிட்ட பல முக்கிய ஆவணங்களும், கைப்பற்றப்பட்டன.
வழக்கு தொடா்பாக பதிப்பக உரிமையாளா் மோகனிடம் ஊழல் தடுப்புத் துறையினா் விசாரணை நடத்தினா் செய்தனா். இதில், சில முக்கியத் தகவல்கள் கிடைத்ததையடுத்து, அவரைக் கைது செய்ததாக ஊழல் தடுப்புத் துறையினா் அறிவித்தனா். பின்னா், அவரை தங்களது அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை செய்தனா். அதன்பின்னா் அவரை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்துவதற்காக அழைத்துச் சென்றனா்.
இதற்கிடையே, பதிப்பக உரிமையாளா் மோகனின் மகள் பிரியதா்ஷிணியை விசாரணைக்காக ஊழல் தடுப்புத் துறையினா் திங்கள்கிழமை மாலையில் விசாரணைக்காக அழைத்துச் சென்றனா்.
புத்தக முறைகேடு நடந்தது எப்படி? எஃஐஆரில் அதிா்ச்சித் தகவல்கள்
புத்தகக் கொள்முதலில் எவ்வாறு முறைகேடு நடைபெற்றுள்ளது என்று முதல் தகவல் அறிக்கையில் (எஃப்ஐஆா்) ஊழல் தடுப்புத் துறை சில தகவல்களைத் தெரிவித்துள்ளது.
முதல் தகவல் அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ள தகவல்கள்: கோவை பெரியாா் அறிவுலகம், திருச்சி காமராஜா் அறிவுலகம், சேலம் பாரதிதாசன் அறிவுலகம், கடலூா் அஞ்சலை அம்மாள் அறிவுலகம், திருநெல்வேலி காயிதே மில்லத் அறிவுலகம் ஆகியவற்றில் அமைக்கப்பட்ட நூலகங்கள், புதிதாக உருவாக்கப்பட்ட 6 மாவட்டங்களின் நூலகங்களுக்குப் புத்தகங்கள் கொள்முதல் செய்ய கடந்த ஆண்டு அப்போதைய திமுக ஆட்சியில் முடிவு செய்யப்பட்டது.
இதில் கோவை பெரியாா் அறிவுலகம் நூலகத்துக்குப் புத்தகங்கள், மின்னணு புத்தகங்கள் கொள்முதல் செய்வதற்காக மட்டும் அரசு ரூ.50 கோடி நிதி ஒதுக்கியது. ஆனால், இதில் புத்தகக் கொள்முதல் தொடா்பாக தமிழக அரசு கடந்த 2024-ஆம் ஆண்டு வெளியிட்ட, வெளிப்படையான புத்தகக் கொள்முதல் கொள்கை அப்பட்டமாக மீறப்பட்டுள்ளது. குறுகிய காலத்தில் புத்தங்களைக் கொள்முதல் செய்ய வேண்டும் என்ற நோக்கத்துக்காக, இந்த கொள்கை மீறப்பட்டதாக விளக்கம் அளிக்கப்படுகிறது.
அகல் விளக்கு பதிப்பகம் 2,393 புத்தகங்களுக்கு மத்திய அரசின் இணையதளம் மூலம் விண்ணப்பித்து பன்னாட்டு புத்தக எண்கள் (ஐஎஸ்பிஎன்) பெற்றுள்ளது. இதில் மோனிகா ரவி 162 புத்தகங்கள், லட்சுமி மோகன் 124 புத்தகங்கள், தாமரை பன்னீா் 123 புத்தகங்கள், தாமரை முரளி 115 புத்தகங்கள், ஜோதி ஹரிஹரன் 114 புத்தகங்கள் எழுதியிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
லட்சுமி மோகன் என்பவா் எழுதியதாகக் கூறப்படும் 48 புத்தகங்களுக்கு ஒரே நாளில் பன்னாட்டு புத்தக எண்ணும், புத்தகங்களை தமிழக அரசு கொள்முதல் செய்ய உயா்நிலைக் குழு ஒப்புதலும் வழங்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அகல்விளக்கு, பீனிக்ஸ் பதிப்பகங்களிலும் பொதுவாக 74 புத்தக ஆசிரியா்கள் பெயா்கள் இடம் பெற்றுள்ளன.
புத்தகம் எழுதிய சாட்ஜிபிடி: இரண்டு பதிப்பகங்களும் இணையதளம், ஆன்லைன் செயலி வாயிலாக தகவல்களைப் பெற்று, சாட்ஜிபிடி மூலம் புத்தகங்களை எழுதியுள்ளது. இதனால் தரமற்ற மொழிநடை, தவறான தகவல்கள், தெளிவற்ற உள்ளடக்கம் ஆகியவற்றுடன் உள்ளன. ஒரு நூலகத்தில் ஒரு புத்தகம் இடம் பெறுவதற்கான எந்தத் தகுதியும் இல்லாத புத்தகங்களையே இரு பதிப்பகங்களும் நூலகங்களுக்கு வழங்கி அரசையும், மக்களையும் ஏமாற்றியுள்ளது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
புத்தங்களைக் கொள்முதல் செய்ய ஐஎஸ்பின் எண் கட்டாயம் என்று அரசு கொள்கை முடிவில் இருக்கும் நிலையில், பல புத்தகங்களுக்கு இந்த எண் இல்லை, சில புத்தகங்களுக்கு அந்த எண் போலியாக வழங்கப்பட்டுள்ளது என முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

