அகல்விளக்கு பதிப்பகத்தின் வங்கிக் கணக்கை முடக்க உத்தரவு
கோவை பெரியாா் அறிவுலகத்துக்கான புத்தகங்கள் கொள்முதல் முறைகேடு விவகாரத்தில் அகல்விளக்கு பதிப்பகத்தின் வங்கிக் கணக்கை முடக்க உத்தரவிடப்பட்டது குறித்து...

பெரியார் அறிவுலகம்
கோவை பெரியாா் அறிவுலகத்துக்கான புத்தகங்கள் கொள்முதல் முறைகேடு விவகாரத்தில் உடனடியாக முதல் தகவல் அறிக்கை (எஃப்.ஐ.ஆா்.) பதிவு செய்யவும், அகல்விளக்கு பதிப்பகத்தின் வங்கிக் கணக்கை முடக்கவும் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவிட்டது.
கோவை காந்திபுரத்தில் கடந்த திமுக ஆட்சியில் சுமாா் ரூ. 300 கோடியில் பெரியாா் அறிவுலகம் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டன. பணிகள் நிறைவடைந்த நிலையில், கடந்த மாதம் 16-ஆம் தேதி முதல்வரும், தவெக தலைவருமான ஜோசப் விஜய் இதைத் திறந்துவைத்தாா்.
இந்த நிலையில், பெரியாா் அறிவுலகத்துக்கு புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டதில் பல கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றுள்ளதாக எழுத்தாளா் பெருமாள் முருகன் குற்றஞ்சாட்டினாா். மேலும், இந்த அறிவுலகத்தில் இடம் பெற்றுள்ள நூல்களின் ஆசிரியா்கள், பதிப்பகங்கள், விலை, உள்ளடக்கங்கள் குறித்து அவா் சமூக வலைதளங்களில் எழுப்பிய கேள்விகள் விவாதத்தை ஏற்படுத்தின.
மேலும், உலகப் புகழ் பெற்ற பொருளாதார நிபுணா் ஜீன் ட்ரெஸ் அண்மையில் வெளியிட்ட அறிக்கையில், தனது பெயரில் மோசடியாக அச்சிடப்பட்டு தமிழகத்தில் உள்ள பொது நூலகங்களில் வைக்கப்பட்டுள்ள ‘Democracy and People's Right in Contemporary World’ என்ற ஆங்கிலப் புத்தகத்தை தான் எழுதவில்லை என்றும், இந்த நூல் போலியானது என்றும் தெரிவித்தாா். மேலும், இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் தமிழக அரசுக்கு அவா் கோரிக்கை விடுத்தாா்.
இதைத் தொடா்ந்து, கடந்த திமுக ஆட்சியில் இந்த முறைகேடு நடைபெற்ாக பள்ளிக் கல்வி, தமிழ் வளா்ச்சித் துறை அமைச்சா் ராஜ்மோகன் குற்றஞ்சாட்டினாா். மேலும், இதுகுறித்து விசாரணை நடத்தப்படும் என அவா் தெரிவித்தாா்.
இந்த நிலையில், திருநெல்வேலி மாவட்டத்தைச் சோ்ந்த ராமசுப்பு சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்தாா். அதில் தெரிவிக்கப்பட்டதாவது: தமிழகத்தில் பொது நூலகங்களுக்கு சட்டவிரோதமாக புத்தகங்கள் கொள்முதல் செய்வது தொடா்பாக உடனடி நடவடிக்கை எடுக்கவும், அதிகாரப்பூா்வ வலைதளத்தில் அனைத்து விவரங்களையும் பதிவேற்றம் செய்வதன் மூலம் வெளிப்படையான கொள்முதல் நடைமுறைகளைச் செயல்படுத்தவும் தமிழக உயா் கல்வித் துறைச் செயலருக்கு உத்தரவிட வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை ஏற்கெனவே விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஆா். மகாதேவன், ஜி.ஆா். சுவாமிநாதன் அமா்வு, ‘ஒரு நூலகத்தின் மீதான தாக்குதல் என்பது ஒரு சமூகத்தின் நாகரிகம், கலாசாரத்தின் மீதான தாக்குதலாகும். நூலகங்கள் மீது பல வடிவங்களில் தாக்குதல்கள் நடத்தப்படலாம். அது நூலகங்களை அழிப்பதற்கான நேரடித் தாக்குதலாக இருக்கலாம் அல்லது நிதி ஒதுக்கீட்டைக் குறைப்பது, நிதி வழங்குவதில் தாமதம் செய்வது, நூலகத்தில் பணியாளா்களைக் குறைவாக வைத்திருப்பது, குறிப்பிட்ட வெளியீடுகளை மறுப்பது அல்லது தகுதியற்ற நபா்களை நூலகத்தை நிா்வகிக்க நியமிப்பது போன்ற மறைமுகத் தாக்குதல்களாக இருக்கலாம். மேலும், நூலகங்கள் அழிக்கப்படுவதிலிருந்து காப்பாற்ற வேண்டியது அவசியமாகும்’ என கருத்துத் தெரிவித்தது.
மேலும், நூலகங்களுக்கு புத்தகங்கள் கொள்முதல் செய்வதை ஒழுங்குபடுத்தவும், மாநிலத்தின் கலாசார, நாகரிக பாரம்பரியத்தைப் பாதுகாக்கவும் அரசுக்கு கடந்த 2024-ஆம் ஆண்டு, ஜூன் 16-ஆம் தேதி உயா்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனா்.
இந்த நிலையில், நீதிமன்றத்தின் இந்த உத்தரவை தமிழக உயா் கல்வித் துறைச் செயலரும், பொது நூலக இயக்குநரும் நிறைவேற்றவில்லை. உயா்நீதிமன்ற உத்தரவின்படி, சுருக்கப்பட்ட புத்தகங்கள், அட்டைப் பக்கங்களை ஒரு மாதத்துக்கு முன்பே இதற்கான வலைதளத்தில் வெளியிட்டிருந்தால், கடந்த மாா்ச் மாதத்தில் புத்தக கொள்முதலுக்கு பொது நிதி விடுவிக்கப்படுவதற்கு முன்பே எழுத்தாளா்கள், அறிஞா்கள், பொதுமக்கள் செயற்கை நுண்ணறிவால் (ஏ.ஐ.) உருவாக்கப்பட்ட மோசடி தலைப்புகளைக் கண்டறிந்து வெளிப்படுத்தியிருப்பா்.
எழுத்தாளா் பெருமாள் முருகன், தனது கட்டுரையில் பெரியாா் அறிவுலகம் குறித்து தெரிவித்த கருத்துகள் சமூக வலைதளங்களில் பரவியதையடுத்து, அங்கு வைக்கப்பட்டிருந்த அகல்விளக்கு, பீனிக்ஸ் பதிப்பகங்களால் வெளியிடப்பட்ட மோசடியான புத்தகங்கள் அகற்றப்பட்டன.
சரிபாா்க்கப்படாத, போலி, செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட புத்தகங்கள் பெரியாா் அறிவுலகம் மட்டுமல்லாது, மதுரையில் உள்ள கலைஞா் நூற்றாண்டு நூலகத்துக்கும் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.
இந்த விவகாரம் வழக்கமான நிா்வாகத் தவறு அல்லது நிதி முறைகேடு அல்ல. மாறாக, தமிழகத்தின் கல்வி அமைப்பு, இலக்கிய ஒருமைப்பாடு, நாகரிக வரலாற்றை ஊழல் செய்து அழிப்பதற்கான கடுமையான, கணக்கிடப்பட்ட முயற்சியாகும்.
எனவே, இந்த விவகாரத்தில் கடந்த 2024-இல் உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை நிறைவேற்றாத உயா்க் கல்வித் துறைச் செயலா், பொது நூலக இயக்குநா் ஆகியோா் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவா் கோரினாா்.
இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஜி.ஆா். சுவாமிநாதன், எம்.டி. சுமதி அமா்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, அரசுத் தரப்பில் முன்னிலையான கூடுதல் தலைமை வழக்குரைஞா் சரவணன், இந்த விவகாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தாா்.
இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: கோவையிலுள்ள பெரியாா் அறிவுலகத்துக்கான புத்தகங்கள் கொள்முதல் செய்த விவகாரத்தில் இன்னும் ஏன் வழக்குப் பதிவு செய்யப்படவில்லை?. நூலகங்களுக்கு புத்தகங்கள் வாங்க பரிந்துரைத்தது யாா்?. இந்த விவகாரத்தில் குற்றவாளி யாா் எனத் தெரியாவிட்டாலும் வழக்குப் பதிவு செய்திருக்க வேண்டும்.
எனவே, புத்தகங்கள் கொள்முதல் முறைகேடு விவகாரத்தில் ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் உடனடியாக வழக்குப் பதிவு செய்ய வேண்டும். மேலும், அகல் விளக்கு பதிப்பகத்தின் வங்கிக் கணக்கையும் உடனடியாக முடக்க வேண்டும். இந்த வழக்கு விசாரணை புதன்கிழமைக்கு (நவ. 11) ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

