பரந்தூர் விமான நிலைய திட்டத்தை கைவிட்டது ஏன்? சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி!
பரந்தூர் விமான நிலைய திட்டத்தை கைவிட்டது குறித்து சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி...

உயர் நீதிமன்றம் கேள்வி
பரந்தூர் விமான நிலைய திட்டத்தை கைவிட்டதை ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ள சென்னை உயர் நீதிமன்றம், மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.
சென்னையைச் சேர்ந்த மென் பொறியாளரும், பதிப்பாளருமான கௌதமன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், “ஆண்டுக்கு மூன்று கோடி பயணிகள் வந்துபோகும் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நிலவும் இடநெருக்கடியை சமாளிக்க 27 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் பரந்தூரில் விமான நிலையம் அமைக்க முடிவு எடுக்கப்பட்டது.
பரந்தூர் விமான நிலையம் அமைக்க 1700 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த 680 கோடி ரூபாய் அரசு பணம் செலவழிக்கப்பட்டு, 48 சதவிகித நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்ற தவெக அரசு, இந்தத் திட்டத்தை கைவிடுவதாக அறிவித்துள்ளது.
விவசாய நிலங்கள் கையகப்படுத்துவதால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி முதலமைச்சர் விஜய் இத்திட்டத்தை கைவிடுவதாக கடந்த ஆகஸ்ட் 24ஆம் தேதி சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
புதிய விமான நிலையம் அமைக்க பன்னூர், திருப்போரூர், படாலம் உள்ளிட்ட பகுதிகளை ஆய்வு செய்து இறுதியில் பரந்தூர் தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும், 2,325 ஹெக்டேர் பரப்பில் பரந்தூரில் விமான நிலையம் அமைக்க, 1527 ஹெக்டர் தனியார் நிலங்களை கையகப்படுத்த தமிழக அரசு 2023 ஆம் ஆண்டு அனுமதி வழங்கியது.
மேலும் 798 ஹெக்டேர் அரசு நிலம் வகை மாற்றம் செய்யப்பட்டதாகவும், எந்தவித தொழில்நுட்ப புள்ளி விவரங்களும் இல்லாமல், நிபுணர் குழுவின் அறிக்கைகள் இல்லாமல், பொருளாதார ஆய்வுகள் ஏதும் நடத்தாமல் திட்டம் கைவிடப்பட்டுள்ளது.
சட்டப்பேரவையில் 110 வது விதியின் கீழ் வெளியிடப்பட்ட பரந்தூர் விமான நிலைய திட்டத்தை கைவிட்டது தொடர்பான முதலமைச்சரின் அறிவிப்பை அமல்படுத்த தடை விதிக்க வேண்டும். கையகப்படுத்தப்பட்ட நிலத்தை மீண்டும் உரிமையாளர்களுக்கு வழங்க தடை விதிக்க வேண்டும்” என்றும் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த வழக்கை இன்று விசாரணைக்கு எடுத்த சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, மக்கள் பணம் கோடிக்கணக்கில் செலவிட்ட பிறகு, பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை கைவிட்டது ஏன்? என்று கேள்வி எழுப்பினர்.
மேலும், 4 வாரங்களுக்குள் மத்திய அரசு, தமிழக அரசு மற்றும் இந்திய விமான நிலைய ஆணையம் ஆகியவை பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தனர்.
Summary
Why was the Parandur airport project abandoned? Madras High Court asks!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

