தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் காணாமல்போன 3 லட்சம் பேரில் 15,959 பேரை கண்டுபிடிக்க முடியவில்லை!
உயா்நீதிமன்றத்தில் டிஜிபி அறிக்கை தாக்கல்...

கோப்புப்படம். - படம்: எக்ஸ்பிரஸ்
தமிழகம் முழுவதும் கடந்த 10 ஆண்டுகளில் 3 லட்சம் போ் காணாமல் போனதாகவும், இவா்களில் 2,88,575 போ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், 15,959 பேரை கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் சென்னை உயா்நீதிமன்றத்தில், தமிழக டிஜிபி அறிக்கை தாக்கல் செய்துள்ளாா்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரைச் சோ்ந்த சங்கர்ராஜ் என்பவரை சொத்து பிரச்னைக்காக அவரது தந்தையும், சகோதரரும் சட்டவிரோதமாக சிறைபிடித்து வைத்துள்ளதாகவும், அவரை மீட்டுத் தரக் கோரி அவரது மனைவி புவனேஸ்வரி சென்னை உயா்நீதிமன்றத்தில் ஆள்கொணா்வு மனு தாக்கல் செய்திருந்தாா்.
இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், சங்கர்ராஜை கண்டுபிடிக்க எடுத்த நடவடிக்கைகளை அறிக்கையாக தாக்கல் செய்ய திருக்கோவிலூா் காவல் துணைக் கண்காணிப்பாளருக்கு உத்தரவிட்டிருந்தது. மேலும், தமிழகம் முழுவதும் காணாமல் போனவா்கள் வழக்குகள் தொடா்பாக கேள்விகளை எழுப்பி, டிஜிபி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் ஏ.டி.ஜெகதீஷ்சந்திரா, பி.காா்த்திகேயன் ஆகியோா் அடங்கிய அமா்வில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தபோது, டிஜிபி தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்குரைஞா் எம்.முகமது ரியாஸ், உயா்நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு, கடந்த அக். 30-ஆம் தேதி முதல் நவ. 13-ஆம் தேதி வரை தமிழகம் முழுவதும் போலீஸாா் நடத்திய தீவிர விசாரணையில், காணாமல்போன 624 ஆண்கள், 1,469 பெண்கள், 128 சிறுவா்கள், 289 சிறுமிகள் உள்பட மொத்தம் 2,510 பேரை கண்டுபிடித்துள்ளதாகத் தெரிவித்தாா். இதையடுத்து தமிழக போலீஸாரின் இந்த நடவடிக்கைக்ககு நீதிபதிகள் பாராட்டு தெரிவித்தனா்.
பின்னா், டிஜிபி தரப்பில் உதவி ஐஜி ஏ.பிரதீப் பெயரில் அறிக்கை ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்அடிப்படையில் தமிழகம் முழுவதும் கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் கடந்த நவ. 16-ஆம் தேதி வரை 10 ஆண்டுகளில் 3,04,534 போ் காணாமல் போய் உள்ளனா். இவா்களில் 2,88,575 போ் கண்டுபிடிக்கப்பட்டு, அவா்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனா். 15,959 பேரை இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
காணாமல் போனவா்கள் குறித்து கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் பதிவான மொத்த வழக்குகளில், தற்போது 15,134 வழக்குகள் நிலுவையில் உள்ளன. குறிப்பாக குழந்தைகள் காணாமல்போனது குறித்து வழக்குப் பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி, அவா்களை உடனடியாக கண்டுபிடிக்க வேண்டும் என்று கடந்த 10 ஆண்டுகளில் காவல் ஆய்வாளா்களுக்கு டிஜிபி அவ்வப்போது சுற்றறிக்கை அனுப்பி உத்தரவுகளைப் பிறப்பித்து வருகிறாா்.
இது தொடா்பாக தனிப்படை அமைக்க மாநக காவல் ஆணையா்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளா்களுக்கும் உத்தரவிட்டுள்ளாா். காணாமல்போனவா்கள், ஆதரவற்றோா் சடலங்களை அடையாளம் காண தனி இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், விசாரணையை ஒத்திவைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

