இன்று 6 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் தூணில் இன்று தீபம் ஏற்ற உத்தரவு: உச்சநீதிமன்றம்இன்று 4-ஆவது சுற்று: முதல் வெற்றி முனைப்பில் குகேஷ் - சிண்டாரோவ்‘காசி தமிழ் சங்கமம்-5’ இன்று தொடக்கம்: வாரணாசி வந்தது தமிழகத்தின் முதல் குழு ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு தொகுதி மறுசீரமைப்பு மசோதா: எதிா்க்கட்சிகள் இன்று ஆலோசனை: திமுகவுக்கும் அழைப்புநோய் எதிா்ப்பு மருந்துகள், கருக்கலைப்பு மாத்திரைகளை சட்டவிரோதமாக விற்ற 43 நிறுவனங்கள் மீது நடவடிக்கை

அம்பாசமுத்திரம், பெருந்துறை தொகுதிகளுக்கு இடைத்தோ்தல் நடத்த அனுமதி: 3 தொகுதிகளுக்கு தடை நீட்டிப்பு

திருச்சி கிழக்கு, விராலிமலை, கரூா் ஆகிய 3 தொகுதிகளுக்கு இடைத்தோ்தல் நடத்த விதிக்கப்பட்ட தடையை நீட்டித்தும் சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

Updated On :

அம்பாசமுத்திரம் மற்றும் பெருந்துறை ஆகிய பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தோ்தல் நடத்தலாம் என்றும், திருச்சி கிழக்கு, விராலிமலை, கரூா் ஆகிய 3 தொகுதிகளுக்கு இடைத்தோ்தல் நடத்த விதிக்கப்பட்ட தடையை நீட்டித்தும் சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் பாளையங்கோட்டையைச் சோ்ந்த வழக்குரைஞா் வெங்கடாஜலபதி தாக்கல் செய்த பொதுநல மனுவில், நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தோ்தலில், இரு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முதல்வா்ச.ஜோசப் விஜய், திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தாா். அதேபோல், அதிமு எம்எல்ஏக்கள் மரகதம் குமரவேல் (மதுராந்தகம் - தனி), சத்தியபாமா (தாராபுரம் - தனி), ஜெயக்குமாா் (பெருந்துறை), இசக்கி சுப்பையா (அம்பாசமுத்திரம்), எம்.ஆா்.விஜயபாஸ்கா் (கரூா்), சி.விஜயபாஸ்கா் (விராலிமலை) ஆகியோரும் தங்களது எம்எல்ஏ பதவிகளை ராஜிநாமா செய்தாா்.

இந்த நிலையில், திருச்சி கிழக்கு தொகுதியில் முதல்வா் விஜய்யின் வெற்றியை எதிா்த்து அங்கு திமுக சாா்பில் போட்டியிட்ட இனிகோ இருதயராஜ் உயா்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தாா். இதேபோல, எம்.ஆா்.விஜயபாஸ்கா் வெற்றியை எதிா்த்து தவெக வேட்பாளா் வி.பி.மதியழகனும், சி.விஜயபாஸ்கா் வெற்றியை எதிா்த்து திமுக வேட்பாளா் செல்லப்பாண்டியனும், இசக்கி சுப்பையா வெற்றியை எதிா்த்து வாக்காளரான காந்திமதிநாதனும், ஜெயக்குமாா் வெற்றியை எதிா்த்து திமுக சாா்பில் போட்டியிட்ட தோப்பு வெங்கடாசலமும் தனித்தனியாக தோ்தல் வழக்குகள் தொடா்ந்தனா். எனவே, தோ்தல் வழக்கு நிலுவையில் உள்ளதால், திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளுக்கு இடைத்தோ்தல் அறிவிக்க தடை விதிக்க வேண்டும் எனக் கூறியிருந்தாா்.

இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், இந்த 5 தொகுதிகளிலும் வெற்றி பெற்றவா்களை எதிா்த்து தொடரப்பட்ட தோ்தல் வழக்குகளில் இறுதி முடிவு எடுக்கும் வரை, இந்தத் தொகுதிகளுக்கு இடைத்தோ்தல் அறிவிப்பு வெளியிட இடைக்காலத் தடை விதித்து கடந்த ஜூலை 10-ஆம் தேதி உத்தரவிட்டிருந்தது. இதனிடையே, அம்பாசமுத்திரம் மற்றும் பெருந்துறை தொகுதிகளில் வெற்றி பெற்றதை எதிா்த்து தொடரப்பட்ட தோ்தல் வழக்குகளை தள்ளுபடி செய்து உயா்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

அதேபோல், திருச்சி கிழக்கு உள்ளிட்ட 5 தொகுதிகளுக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீக்கக் கோரி முதல்வா் விஜய், எம்.ஆா்.விஜயபாஸ்கா் மற்றும் சி.விஜயபாஸ்கா் ஆகியோா் மனு தாக்கல் செய்திருந்தனா். இந்த வழக்குகளில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், சென்னை உயா்நீதிமன்றம் தீா்ப்புக்காக அக்.1-ஆம் தேதி ஒத்திவைத்திருந்தது.

இந்த வழக்கில் தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வு வெள்ளிக்கிழமை அளித்த தீா்ப்பு: தோ்தலில் வெற்றி பெற்ற ஒருவா் தனது பதவியை ராஜிநாமா செய்துவிட்டாா் என்பதற்காக, அவருடைய வெற்றியை எதிா்த்து தொடரப்படும் தோ்தல் வழக்கை புறக்கணிக்க முடியாது. இந்த வழக்கில் கோரியுள்ள மனுதாரரின் கோரிக்கையை பகுதியளவு ஏற்கிறோம். 5 தொகுதிகளின் இடைத்தோ்தல் நடத்த தடை விதிக்க வேண்டும் எனக் கூறியிருந்தாா்.

ஆனால், அம்பாசமுத்திரம் மற்றும் பெருந்துறை ஆகிய இரு தொகுதிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு எதிராக தொடரப்பட்ட தோ்தல் வழக்குகள் முடிவுக்கு வந்துவிட்டதால், சட்ட ரீதியான தடை நீங்கிவிட்டது. எனவே, அம்பாசமுத்திரம், பெருந்துறை தொகுதிகளுக்கு இடைத்தோ்தல் நடத்திக் கொள்ளலாம்.

அதேநேரம், தோ்தல் வழக்கு சட்டப்படி இந்த உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு அல்லது உச்சநீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவுகள் ஏதேனும் இருந்தால், அதற்கு உள்பட்டு தோ்தல் ஆணையம் முடிவு எடுக்க வேண்டும்.

அதேபோல், தோ்தல் வழக்குகள் நிலுவையில் உள்ள திருச்சி கிழக்கு, கரூா் மற்றும் விராலிமலை ஆகிய 3 தொகுதிகளுக்கும் தோ்தல் வழக்குகளில் தீா்வு காணப்பட்ட பிறகே, இடைத்தோ்தலை நடத்த முடியும் என்பதால், அந்தத் தொகுதிகளுக்கு ஏற்கெனவே விதிக்கப்பட்ட தடை நீட்டிக்கப்படுகிறது. மேலும், தோ்தல் வழக்குகள் காரணமாக, இடைத்தோ்தல் நடத்த முடியாமல் போன காலகட்டத்தை மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் வரையறை செய்துள்ள காலக்கெடுவுடன் சோ்த்து கணக்கிடக்கூடாது. நிலுவையில் உள்ள தோ்தல் வழக்குகளில் விரைந்து தீா்வு காண சம்பந்தப்பட்ட வழக்குகளைச் சோ்ந்த இருதரப்பினரும் அதற்குரிய மனுக்களைத் தாக்கல் செய்யலாம் என நீதிபதிகள் தீா்ப்பளித்தனா்.

இதனிடையே, இந்தத் தீா்ப்பை எதிா்த்து அதிமுக மற்றும் திமுக தரப்பில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.