சென்னையை ஏமாற்றும் மழை! நாளை உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி சாதகமாக அமையுமா?
தெற்கு அந்தமான் கடலில் உருவாகவுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி குறித்து...

மழை - பிரதிப் படம்
தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நாளை (நவ. 30) குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஏற்கெனவே, வங்கக் கடலில் கடந்த அக்டோபா் இறுதியில் உருவான ‘அர்னாப்’ மற்றும் ‘முரசு’ ஆகிய இரு புயல்களும் ஆந்திர மாநிலத்தில் கரையைக் கடந்தன.
அண்மையில் உருவான அக்வான் புயலும் ஆந்திர மற்றும் ஒடிசா கடற்கரைக்கு இடையே கரையைக் கடந்தது. இதனால் தமிழகத்தை நோக்கி வரவேண்டிய மழை மேகக்கூட்டங்கள் வராமல் மழை பெய்யவில்லை.
குறிப்பாக, சென்னையில் எதிர்பார்த்த மழை பெய்யவில்லை. இதனால், ஏரிகளில் நீர்மட்டம் குறைந்துள்ளது. அனைவரும் மழை எதிர்பார்த்து காத்துக்கிடக்கின்றனர்.
இந்த நிலையில், தெற்கு அந்தமான் கடலில் இன்று (நவ. 29) உருவாகும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, நாளை (நவ. 30) தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும்.
இது டிசம்பர் முதல் வாரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது. இந்தப் புயல் சின்னம் தமிழகத்தை நோக்கி நகர்ந்தால், சென்னையில் கணிசமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இது தொடர்பாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், ”நவம்பர் மாதம் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டது. எல் நினோ நிலவும் ஆண்டில், வானிலை குறித்து எழுதுவதற்குக்கூட பெரிய விஷயங்கள் ஏதுமில்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
டிச. 1,2 தேதிகளில் சென்னையில் ஓரளவு மழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. இருப்பினும், இந்த மழையால் சென்னையின் ஏரிகளின் நீர்மட்டத்தில் பெரிய அளவிலான முன்னேற்றம் ஏற்பட வாய்ப்பில்லை.
டிசம்பர் முதல் வாரத்தில் சென்னையை நோக்கி ஒரு புயல் சின்னத்தை உருவாக்குவது ஜிஎஃப்எஸ் மாதிரி மட்டுமே” என்று குறிப்பிட்டுள்ளார்.
Summary
The India Meteorological Department has stated that a low-pressure area is likely to form over the southern Andaman Sea region tomorrow (Nov. 30).
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


