
கச்சத்தீவு விவகாரத்தில் மீனவர்களுக்கு விழிப்புணர்வு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்
கச்சத்தீவு விவகாரத்தில் மீனவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியிருப்பது பற்றி...

உச்சநீதிமன்றம்
இலங்கைக்கு வழங்கப்பட்ட கச்சத்தீவு விவகாரத்தில், அந்நாட்டின் கடல் பகுதிக்குள் இந்திய மீனவர்கள் செல்லாமல் இருக்க அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை அறிவுறுத்தியது.
மேலும், இந்த வழக்கின் அடுத்த விசாரணையை 2027-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்துக்கும் உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.
கச்சத்தீவை இலங்கைக்கு ஒப்படைத்த இரு ஒப்பந்தங்களை எதிர்த்து ஏ.கே. செல்வராஜ் என்பவர் உச்சநீதிமன்றத்தில் 2008-இல் வழக்கு தொடர்ந்தார். இது தொடர்பாக திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளின் சார்பிலும் வெவ்வேறு காலகட்டங்களில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகள் நீதிபதிகள் சஞ்சய் குமார், சஞ்சீவ் சச்தேவா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, தமிழக அரசு தரப்பில் மாநில கூடுதல் தலைமை வழக்குரைஞர் ஹரிப்ரியா ஆஜராகி, "கச்சத்தீவு பகுதியில் மீன் பிடிப்பதற்கான உரிமை இருந்தும் தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்படுகிறார்கள். தமிழக முதல்வரும் இது தொடர்பாக பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்' என்றார்.
இதையடுத்து, மத்திய அரசு சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் ஆர். வெங்கட்ரமணி, "இது இரு நாடுகள் தொடர்புடைய ராஜீய விவகாரம் என்பதால் இந்திய உச்சநீதிமன்றத்தால் உத்தரவு பிறப்பிக்க முடியாது. இலங்கையுடன் இந்தியா ராஜீய நிலையில் சிறந்த உறவுகளைப் பேணி வருகிறது. இரு நாடுகளுக்கு இடையேயான பழைய ஒப்பந்தங்களை மீண்டும் ஆய்வுக்குள்படுத்த (ரத்து செய்ய) மத்திய அரசு விரும்பவில்லை. மீனவர்கள் விவகாரத்தில் இலங்கை அரசுடன் ராஜீய அளவில் தொடர்ந்து இந்திய அரசு பேசி வருகிறது. ஆனால், இணங்கிச் செயல்பட கட்டாயப்படுத்த முடியாது' என்று வாதிட்டார். திமுக தரப்பில் மூத்த வழக்குரைஞர் பி. வில்சன் வாதிடுகையில், "கச்சத்தீவு ஒப்பந்தத்தை அமல்படுத்துவதற்கு அரசமைப்புச் சட்டத்தின் முதல் அட்டவணையில் திருத்தம் செய்திருக்க வேண்டும். அது இதுவரை செய்யப்படவில்லை. இந்திய மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதும், அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதும் வாடிக்கையாக உள்ளது. இலங்கை அரசுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்தி பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்' என்று சுட்டிக்காட்டினார்.
மீனவர்கள் அமைப்பு சார்பில் ஆஜரான வழக்குரைஞர் ஜெய்சுகினும் இலங்கை கடற்படையால் கைது நடவடிக்கைக்கு ஆளாகும் இந்திய மீனவர்களின் நிலை குறித்து எடுத்துரைத்தார். இதையடுத்து, வாய்மொழியாகக் கருத்து தெரிவித்த நீதிபதி சஞ்சய் குமார், "இலங்கையின் சிறந்த சுற்றுச்சூழல் பாதுகாப்புக் காரணங்களால் கூட மீன்கள் அந்த நாட்டு கடல் பகுதிக்கு அதிகமாக இடம்பெயரக்கூடும். இந்த விஷயத்தில் இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பகுதிக்குள் செல்லாமல் தடுப்பதற்கு அவர்களுக்கு போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அவர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை பார்த்துக்கொள்ள வேண்டும்' என்று குறிப்பிட்டார்.
இதைத்தொடர்ந்து, வழக்கை ஒத்திவைக்க மத்திய அரசு விடுத்த வேண்டுகோளை ஏற்று, அடுத்த விசாரணையை அடுத்த ஆண்டு பிப்ரவரிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
பின்னணி: 1974-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இந்திய-இலங்கை கடல் எல்லை ஒப்பந்தத்தின்கீழ் கச்சத்தீவு இலங்கைக்கு வழங்கப்பட்டதையும், இந்திய மீனவர்களின் மீன்பிடி உரிமைகளைக் கட்டுப்படுத்திய 1976-ஆம் ஆண்டு ஒப்பந்தத்தையும் எதிர்த்து இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ளது. சர்ச்சைக்குரிய கடல் பகுதியில் மீன்பிடிக்கும்போது தமிழக மீனவர்கள் இலங்கை பாதுகாப்புப் படையினரால் தொடர்ந்து கைது செய்யப்படுவதாக மனுதாரர்கள் தரப்பில் மனுவில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
பாக் நீரிணையில் மீன்பிடிக்கும் மீனவர்களின் வாழ்வாதாரம் மற்றும் கச்சத்தீவு ஒப்பந்தம் தொடர்பாக 2008-ஆம் ஆண்டு முதல் நிலுவையில் உள்ள இந்த வழக்குகள் மூலம் மீனவர்கள் பிரச்னை தொடர்ந்து பேசுபொருளாகியுள்ளது. 1974 மற்றும் 1976-ஆம் ஆண்டு ஒப்பந்தங்களின் செல்லுபடியாகும் தன்மை குறித்து உச்சநீதிமன்றம் எந்தக் கருத்தையும் இதுவரை தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது


தில்லி ஜிம்கானா கிளப் விவகாரம்! உறுப்பினா்களின் மனுவை உயா்நீதிமன்றம் பரிசீலிக்க உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்!

ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேர் சிறைப்பிடிப்பு! வேடிக்கை பார்க்கும் மத்திய அரசு - காங்கிரஸ்




