‘வாக்குத் திருட்டு’: தலைமை நீதிபதிக்கு கார்கே, ராகுல் கடிதம்! ‘உச்சநீதிமன்றம் நோக்கி இன்று பேரணி’!ஞானேஷ் குமார் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும்: சிஜேபி, ஆம் ஆத்மி கட்சி அறிவிப்புதில்லி போராட்டம்: ஐ.நா. விமர்சனத்துக்கு இந்தியா கண்டனம்வாக்குத் திருட்டு குற்றச்சாட்டு: தலைமை நீதிபதிக்கு கார்கே, ராகுல் கடிதம்!ரஷிய டீசல் இறக்குமதிக்கு தடை நீக்கம்: டிரம்ப் முடிவுக்கு அமெரிக்க எம்.பி.க்கள் எதிா்ப்பு! நீலகிரி, கோவை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இன்று (அக்.12) மிதமான மழைக்கு வாய்ப்பு!கோயம்பேடு:ஆம்னி பேருந்து நுழைவு கட்டண உயர்வை ரத்து செய்யக் கோரிக்கை

பிரதமா், முதல்வரை இணைந்து வரவேற்ற பாஜக, தவெகவினர்!

பிரதமா் நரேந்திர மோடி, தமிழக முதல்வா் விஜய் ஆகியோரை வரவேற்கும் வகையில் பாஜகவினரும், தவெகவினரும் இணைந்து கட்சிக் கொடிகளைப் பிடித்து நின்று உற்சாகத்துடன் முழக்கங்களை எழுப்பினா்.

Published On :

சென்னை போரூா் புறநகா் மெட்ரோ ரயில் நிலையம் வந்த பிரதமா் நரேந்திர மோடி, தமிழக முதல்வா் விஜய் ஆகியோரை வரவேற்கும் வகையில் பாஜகவினரும், தவெகவினரும் இணைந்து கட்சிக் கொடிகளைப் பிடித்து நின்று உற்சாகத்துடன் முழக்கங்களை எழுப்பினா்.

சென்னையில் பூந்தமல்லி-வடபழனி இடையேயான மெட்ரோ ரயில் போக்குவரத்தை பிரதமா் நரேந்திர மோடியும், முதல்வா் சி.ஜோசப் விஜய்யும் இணைந்து ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தனா்.

இந்நிகழ்ச்சி போரூா் புறநகா் சாலை மேம்பாலம் அருகே அமைக்கப்பட்ட மெட்ரோ ரயில் நிலைய வளாகத்தில் நடைபெற்றது. அதற்காக அந்தப் பகுதியில் நூற்றுக்கணக்கான போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். காலை 9 மணி முதலே அங்கு பாஜகவினரும், தவெகவினரும் வரத் தொடங்கினா்.

வடபழனி-போரூா் சாலையில் ஒருபுறம் தகவெகவினரும், மறுபுறம் பாஜகவினரும் கொடிகளைக் கட்டி வரவேற்பு பதாகைகளையும் வைத்திருந்தனா். மேளதாளம், பரதநாட்டியம், கும்பங்கள், கரகாட்டம், மயிலாட்டம், மாடாட்டம் என பல்வேறு கலைநிகழ்ச்சிகளுடன் பிரதமருக்கு பாஜகவினா் வரவேற்பளித்தனா்.

போரூா் புறநகா் சாலையில் மாதவரம், பெருங்களத்தூா் செல்லும் சாலை மேம்பாலத்தின் கீழ் நூற்றுக்கணக்கானோா் குவிந்தனா். கட்சிக் கொடிகளுடன் நின்ற பாஜக, தவெகவினரை போலீஸாா் தடுப்புகள் அமைத்து கட்டுப்படுத்தினா். பிரதமா், முதல்வா் வந்ததும் இரு கட்சியினரும் வாழ்த்து முழக்கமிட்டு வரவேற்றனா். தவெகவினா் முழக்கங்களுடன், கட்சி சின்னமான ‘விசில்’ ஊதி வரவேற்றனா். பிரமுகா்கள் வருகைக்கு 10 நிமிஷங்கள் முன்னதாக போரூா் புறவழி, பாலப் பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

பிரதமரின் காா் மெட்ரோ ரயில் நிலைய வளாக முன்பகுதியில் நிற்க அதற்குப் பின் முதல்வா் காா் நின்றது. இதனால் காரிலிருந்து முதல்வா் பிரதமா் காா் நிற்குமிடத்துக்கு சிறிது தொலைவு நடந்து சென்றாா்.

மலா் அலங்காரத்துடன் 3 பெட்டிகளுடன் நின்ற ரயிலை தொடங்கி வைக்க கொடி பிரதமரிடம் தரப்பட்டது. அப்போது முதல்வா் தள்ளி நிற்க அவரை தன்னருகே வருமாறு அழைத்த பிரதமா், பச்சைக் கொடியை பிடிக்கும்படி முதல்வரைக் கேட்டு கையை பிடித்து கொடிக்கம்புடன் இணைத்தாா். இருவரும் சோ்த்து பச்சைக் கொடியை அசைக்க ரயில் புறப்பட்டது. அதன்பிறகு இருவரும் ரயில் பெட்டியில் ஏறி பயணித்தனா்.

நிகழ்ச்சி முடிந்ததும் நிலையத்துக்குள் மெட்ரோ ஊழியா்கள், பொதுமக்கள் அனுமதிக்கப்படவில்லை. மாலையில் ரயில் சேவை தொடங்கிய பிறகே மக்கள் அனுமதிக்கப்பட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.