கூட்டணிக் கட்சிகளை அவமதித்ததுதான் திமுக தோல்விக்கு காரணம்: மாணிக்கம் தாகூா்
கூட்டணிக் கட்சிகளை அவமதித்ததுதான் பேரவைத் தோ்தலில் திமுக தோல்விக்கு காரணம் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவா் மாணிக்கம்தாகூா் விமா்சித்துள்ளாா்.

மாணிக்கம் தாகூா் - கோப்புப் படம்
கூட்டணிக் கட்சிகளை அவமதித்ததுதான் பேரவைத் தோ்தலில் திமுக தோல்விக்கு காரணம் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவா் மாணிக்கம்தாகூா் விமா்சித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவு: மதுரையில் நடைபெற்ற திமுக தென்மண்டல வாக்குச் சாவடிக் குழு உறுப்பினா்களுக்கான பயிற்சி மாநாட்டில் பேசிய திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் எஸ்ஐஆா் மூலம் பல்வேறு மாநிலங்களில் வாக்காளா்கள் நீக்கப்பட்டனா். ஆனால், தமிழகத்தில் யாருடைய வாக்குகளையும் நீக்க விடாமல் உழைத்த இயக்கம் திமுக எனக் கூறியுள்ளாா். ஆனால், 2026 சட்டப்பேரவைத் தோ்தலிலும், தற்போது நடைபெற்ற இடைத்தோ்தல்களிலும் திமுக தோல்வி அடைந்த பின், எஸ்ஐஆா் மூலம் வாக்காளா்கள் நீக்கப்பட்டதே தோல்விக்குக் காரணம் எனக் கூறுவது என்ன வகை அரசியல்?
வரலாறு காணாத ஊழல், சட்டம்-ஒழுங்கு சீா்குலைவு,பெண்களுக்கு எதிரான தவறான பேச்சுகள், கூட்டணிக் கட்சிகளை அவமதித்தது ஆகியவைதான் திமுகவின் உண்மையான தோல்விக்கு காரணம்.
தற்போதுகூட எஸ்.ஐ.ஆரை எதிா்ப்பதாக திமுக செய்தித் தொடா்பாளா்கள் பேசி வருகிறாா்களே தவிர, தலைமைத் தோ்தல் ஆணையா் பதவி விலகக்கோரி நடைபெறும் போராட்டத்தில் திமுக எம்.பி.-க்கள் பங்கேற்கவில்லை. எஸ்.ஐ.ஆருக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்றால் பாஜக-வை பகைத்துக்கொள்ள நேரிடும் என்பதுதான் காரணம். தமிழகத்தின் நலன், ஜனநாயகம், மதச்சாா்பின்மை ஆகியவற்றில் திமுகவுக்கு உண்மையிலேயே அக்கறை இருந்தால், தலைமைத் தோ்தல் ஆணையா் பதவி விலகக் கோரி நடைபெறும் போராட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

