அனைவரும் ஒன்றிணைய வேண்டிய காலம் வந்துவிட்டது: வி.கே. சசிகலா
அனைந்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலர் சசிகலா தெரிவித்தது குறித்து....

அஇபுதமமுக பொதுச்செயலா் வி.கே. சசிகலா. - கோப்புப் படம்
அனைவரும் ஒன்றிணைய வேண்டிய காலம் வந்துவிட்டதாக அனைந்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலர் சசிகலா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவு:
”அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தோற்றுவித்து தற்போது 54 ஆண்டுகளை நிறைவு செய்து, 55வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இதனை கொண்டாடி மகிழும் கோடான கோடி தொண்டர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
1972 ஆம் ஆண்டு பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவரால் ஏழைகளுக்காகவே உருவாக்கப்பட்ட இயக்கம்தான் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம். இந்த இயக்கத்தை தனது இறுதி மூச்சுவரை காப்பாற்றியவர் புரட்சித்தலைவர். புரட்சித்தலைவரின் மறைவுக்குப் பிறகு புரட்சித்தலைவி அம்மா இந்த இயக்கத்தை கட்டி காப்பாற்றினார்கள். இந்தியாவிலேயே மூன்றாவது பெரிய கட்சியாக உருவாக்கினார்கள். இதில் எனது பங்கும் அடங்கியிருப்பதை யாராலும் மறுக்க முடியாது. நான் நேசித்த நம் இருபெரும் தலைவர்கள்தான், நான் இந்த இயக்கத்தை சுவாசிக்க காரணமாக அமைந்தவர்கள்.
புரட்சித்தலைவி அம்மா மறைவுக்குப் பிறகு இந்த இயக்கம் பல்வேறு சறுக்கல்களையும், தோல்விகளையும்தான் இன்று வரை சந்தித்து கொண்டு இருக்கிறது. இதற்கு ஒரு சிலரின் சுயநலம் மற்றும் அவர்கள் எடுத்த தவறான முடிவுகள் தான் காரணமாக அமைந்துவிட்டது. இந்த இயக்கத்தின் பலனை அனுபவித்த ஒரு சிலர் மட்டும் ஏதாவது ஆதாயம் தேடி இயக்கத்தை விட்டு சென்று இருக்கலாம். ஆனால், அதே சமயம் புரட்சித்தலைவர் மற்றும் புரட்சித்தலைவி அம்மாவின் வழியில் வந்த தொண்டர்கள் இன்றைக்கும் நம்பிக்கையோடும், உறுதியோடும்தொடர்ந்து பயணித்து கொண்டிருக்கிறார்கள். தொண்டர்கள் அனைவருக்கும் இருக்கும் ஒரே எண்ணம் என்னவென்றால், இந்த இயக்கம் என்றைக்கு ஒன்றுபடும். பிரிந்து சென்றவர்கள், விலக்கப்பட்டவர்கள், ஒதுங்கி நிற்பவர்கள் என அனைவரும் ஒன்றிணையும் காலம் எப்போது? என்று ஒவ்வொரு நாளும் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கிறார்கள்.
எனவே, இது நாள் வரை “நடந்தவை நடந்தவையாகவே இருக்கட்டும், இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும்” என்று சொன்ன அறிஞர் அண்ணாவின் கொள்கைகளை மனதில் வைத்து தொண்டர்களின் எண்ணங்கள் ஈடேறிட அனைவரும் ஒன்றிணைய வேண்டிய காலம் வந்துவிட்டது. இதற்கு மேலும், வேடிக்கை பார்த்து கொண்டிருந்தால் இந்த இயக்கத்தை காப்பாற்றுவது மிகவும் கடினமாகிவிடும்.
“இன்னும் நூற்றாண்டுகள் ஆனாலும் இந்த இயக்கம் மக்களுக்காகவே இயங்கும்” என்று எந்த நம்பிக்கையில் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் சூளுரைத்தார்களோ, அந்த நம்பிக்கை என்றைக்கும் வீண் போய்விடக்கூடாது என்பதை மிகவும் வலியுறுத்தி கேட்டுகொள்கிறேன். இந்த இயக்கம், ஒன்றுபட்ட, வலிமைமிக்க, பேரியக்கமாக மீண்டும் மலர வேண்டும் எனவும், மீண்டும் அம்மாவின் ஆட்சியை தமிழகத்தில் கொண்டு வர வேண்டும் எனவும், தமிழக மக்களுக்கு மீண்டும் ஒரு பொற்கால ஆட்சியாக அது அமையட்டும் எனவும் இந்நாளில் எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்” என்று சசிகலா தெரிவித்துள்ளார்.
Summary
Sasikala, General Secretary of the All India Revolutionary Leader People's Progress Federation (Anainthindiya Puratchi Thalaivar Makkal Munnetra Kazhagam), has stated that the time has come for everyone to unite.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

