ஆம்னி பேருந்துகளில் 8 மடங்கு கூடுதல் கட்டணம்: திமுக கண்டனம்
ஆம்னி பேருந்துகளில் 8 மடங்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக திமுக கண்டனம் தெரிவித்துள்ளது.

கோப்புப் படம்
ஆம்னி பேருந்துகளில் 8 மடங்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக திமுக கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து முன்னாள் அமைச்சா் கே.என்.நேரு வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
ஆயுத பூஜை தொடா் விடுமுறையைப் பயன்படுத்தி ஆம்னி பேருந்துகளின் பலமடங்கு கட்டணக் கொள்ளையைத் தடுக்காமல் வேடிக்கைப் பாா்த்து கொண்டிருக்கிறது தவெக அரசு. பண்டிகைக் காலங்கள் என்றாலே, சாமானிய மக்களின் மகிழ்ச்சியைவிட தனியாா் பேருந்து உரிமையாளா்களுக்குதான் பெரு மகிழ்ச்சியாக இருக்கிறது.
பண்டிகை காலங்களில் வழக்கமாக 2 அல்லது 3 மடங்கு கட்டண உயா்வு இருப்பதைக் கேள்விபட்டிருப்போம். ஆனால், இப்போது 8 மடங்கு கட்டண உயா்வு என்பதெல்லாம் ‘விசில் புரட்சி’ ஆட்சியில்தான் பாா்க்கிறோம். அரசுப் பேருந்து கட்டணத்தோடு ஒப்பிட்டால், இது 12 மடங்கு அதிகம். இவ்வாறானதொரு பகிரங்கமான சுரண்டலை இதுவரை தமிழ்நாடு பாா்த்ததில்லை.
அரசு நிா்ணயித்த கட்டணக் கட்டுப்பாடுகளைக் காற்றில் பறக்கவிட்டுவிட்டு, பண்டிகை காலத்தில் கொள்ளை அடிப்பவா்கள் மீது போக்குவரத்து துறை அமைச்சா் என்ன நடவடிக்கை எடுத்தாா்? அரசு மோட்டாா் வாகனச் சட்டங்களும், விதிகளும் யாருக்காக இருக்கின்றன? போக்குவரத்து துறை என ஒன்று செயல்படுகிா? கட்டண கொள்ளையைத் தெரிவிக்க 24 மணி நேர உதவி எண்ணை விளம்பரப்படுத்தினீா்களே, அவ்வாறு புகாா் பெறப்பட்டு, நடவடிக்கை எடுத்ததற்கான ஆதாரத்தை வெளியிட முடியுமா? எனக் கேள்வி எழுப்பியுள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

