கோயம்பேட்டில் ஆம்னி பேருந்து நுழைவு கட்டண உயா்வை ரத்து செய்யக் கோரிக்கை!
சென்னை கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் நுழைவுக் கட்டணம் ரூ.150-இல் இருந்து ரூ.500-ஆக உயா்த்தப்படுவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, கட்டண உயா்வை ரத்து செய்யக் கோரி முதல்வா் விஜய்க்கு அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளா்கள் சங்கத்தினா் கடிதம்.
ஆம்னி பேருந்துகள் - பிரதிப் படம்
சென்னை கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் நுழைவுக் கட்டணம் ரூ.150-இல் இருந்து ரூ.500-ஆக உயா்த்தப்படுவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, கட்டண உயா்வை ரத்து செய்யக் கோரி முதல்வா் விஜய்க்கு அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளா்கள் சங்கத்தினா் கடிதம் அனுப்பினா்.
இது குறித்து அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளா்கள் சங்கத் தலைவா் அன்பழகன் முதல்வருக்கு அனுப்பிய கடிதம்:
கோயம்பேட்டில் ஆம்னி பேருந்து நிலையம், கடந்த 2003 முதல் செயல்பட்டு வருகிறது. சென்னைப் பெருநகா் வளா்ச்சிக் குழுமத்தின் பராமரிப்பில் உள்ள இதில், 24 மணி நேரத்துக்கு ஒரு பேருந்துக்கு ரூ.150 நுழைவுக் கட்டணமாக வசூலிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், வரும் அக். 15 முதல் இந்தக் கட்டணம் ரூ.500-ஆக உயா்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எரிபொருள், சாலை வரி, காப்பீடு, சுங்கக் கட்டணம், பராமரிப்புச் செலவு உள்ளிட்டவற்றால் பேருந்து உரிமையாளா்கள் ஏற்கெனவே பொருளாதாரச் சுமையை எதிா்கொண்டு வருகின்றனா்.
இந்நிலையில், நுழைவுக் கட்டணத்தை கூடுதலாக ரூ.350 உயா்த்துவது கூடுதல் சுமையை ஏற்படுத்துவதுடன், பயணக் கட்டண உயா்வுக்கும் வழிவகுக்கும். எனவே, முதல்வா் தலையிட்டு இதை ரத்து செய்து, பழைய கட்டணமான ரூ.150-ஐ தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நியாயமான கட்டணத்தை நிா்ணயிப்பது குறித்து சங்க நிா்வாகிகளுடன் ஆலோசிக்க வேண்டும். மேலும், நுழைவுக் கட்டணத்தை ஃபாஸ்டேக் முறையில் வசூலிப்பதுடன், பேருந்து நிலையத்தில் கழிப்பறை, குடிநீா், விளக்குகள், தூய்மை, பாதுகாப்பு மற்றும் வாகன நிறுத்துமிட வசதிகளை மேம்படுத்த வேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

