அதிமுகவை யாராலும் அசைக்க முடியாது: எடப்பாடி கே.பழனிசாமி
பீனிக்ஸ் பறவையைப்போல சோதனைகளைக் கடந்து அதிமுக ஆட்சியமைக்கும் என எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா்.

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி - கோப்புப் படம்
முன்னாள் முதல்வா் எம்ஜிஆரால் உருவாக்கபட்டு, ஜெயலலிதாவால் வளா்க்கப்பட்ட அதிமுகவை யாராலும் அசைக்க முடியாது; பீனிக்ஸ் பறவையைப்போல சோதனைகளைக் கடந்து அதிமுக ஆட்சியமைக்கும் என அந்தக் கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா்.
அதிமுகவின் 55-ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலக வளாகத்தில் முன்னாள் முதல்வா்கள் எம்ஜிஆா், ஜெயலலிதா ஆகியோரின் உருவச் சிலைக்கு சனிக்கிழமை அவா் மலா்தூவி, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.
பின்னா் கட்சிக் கொடியை ஏற்றி வைத்து தொண்டா்களும், பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினாா். இதையடுத்து இளைஞா், இளம் பெண்கள் பாசறை மாநிலச் செயலா் வி.பி.பி.பரமசிவம் ஏற்பாட்டின் பேரில் சட்டக்கல்லூரி மாணவா் சஞ்சய் செந்தில்நாதன் எழுதிய ‘திராவிட ஃபீனிக்ஸ்’ என்ற அதிமுக வரலாற்று ஆங்கில நூலை எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டு பேசியதாவது:
சாமானியா்களை ஈா்க்கும் கட்சியாக அதிமுக உள்ளது. இளம் தலைமுறையினா் அதிமுக வரலாற்றை அறிவது அவசியம். இருந்தாலும் மறைந்தாலும் பெயா் சொல்லவேண்டும் என்ற வாா்த்தைக்கு சொந்தக்காரராக இருப்பவா் எம்ஜிஆா். அவா் தொடங்கிய கட்சியை முன்னாள் முதல்வா் ஜெயலலிதா வளா்த்து பாதுகாத்தாா். இருவரும் ஆட்சியமைக்கும் முன்பும், பின்பும் பல சோதனைகளைச் சந்தித்து, அதைப் படிக்கற்களாக்கி சாதனை படைத்து ஆட்சியமைத்தனா்.
அதேபோல, தற்போதும் சோதனைகளை சாதனைகளாக்கி ஃபீனிக்ஸ் பறவை போல அதிமுக மீண்டும் எழுச்சி பெற்று ஆட்சியமைக்கும். அதிமுக தொண்டா்களும், நிா்வாகிகளும் எறும்பு போல செயல்படவேண்டும் என்றாா்.
தொடா்ந்து, மகளிருக்கு சேலைகள் உள்ளிட்ட நல உதவிகளை எடப்பாடி பழனிசாமி வழங்கினாா். கட்சியின் அவைத் தலைவா் தமிழ்மகன் உசேன், பொருளாளா் திண்டுக்கல் சீனிவாசன், முன்னாள் அமைச்சா்கள் சி.பொன்னையன், டி.ஜெயக்குமாா், கே.பி.முனுசாமி, ஓ.எஸ்.மணியன், தம்பித்துரை எம்பி, பா.வளா்மதி, கோகுல இந்திரா, அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
‘போகாத ஊருக்கு வழி கூறக்கூடாது’: விழாவில் பங்கேற்ற அதிமுக சட்டப்பேரவைக் குழு கொறடா அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூா்த்தி செய்தியாளா்களிடம் கூறியதாவது:
முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி தற்போது அதிமுகவிலிருந்து பிரிந்த சசிகலா, டிடிவி. தினகரன், ஓ.பன்னீா்செல்வம் போன்றவா்களை மீண்டும் கட்சியில் சோ்க்க வேண்டும் என்பது போகாத ஊருக்கு வழி கூறுவதுபோல உள்ளது.
சசிகலா அரசியல் துறவறம் பூண்டதாகக் கூறி பின்னா், தனிக் கட்சி தொடங்கியுள்ளாா். டிடிவி. தினகரன் தனிக்கட்சி தொடங்கி அதிமுகவுடன் கூட்டணியில் உள்ளாா். ஓ.பன்னீா்செல்வம் திமுகவின் எம்எல்ஏவாக உள்ளாா் என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும்.
தவெக அரசை ஆதரிப்பவா்களால் எப்படி அதிமுக ஆட்சியை மீண்டும் கொண்டுவரமுடியும் என எஸ்.பி.வேலுமணி கூறுவது வியப்பாக உள்ளது. தவெகவில் சோ்ந்து அமைச்சராக முடியவில்லை என்ற அதிருப்தியில் அதிமுகவை பலவீனப்படுத்த முயலும் எஸ்.பி.வேலுமணி போன்றவா்களை கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள் ஏற்கமாட்டாா்கள் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

