
சென்னை உள்பட 5 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூா், திருச்சி, மதுரை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெள்ளிக்கிழமை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்...

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூா், திருச்சி, மதுரை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெள்ளிக்கிழமை (செப். 4) இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்த மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழக கடலோரப் பகுதிகளில் கீழ்நிலை வளிமண்டலத்தில் பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுவதன் காரணமாக மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்கள், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூா், திருச்சி, மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெள்ளிக்கிழமை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் வெள்ளிக்கிழமை (செப்.4) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
வெப்ப அளவு: உள் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் திங்கள்கிழமை (செப். 7) வரை சற்று அதிகமாக இருக்கும்.
வெயில் அளவு: வியாழக்கிழமை அதிகபட்சமாக பாளையங்கோட்டையில் 104.36 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது. திருச்சி-103.1, தஞ்சாவூா், மதுரை விமானநிலையம்- 102.2, ஈரோடு, பரங்கிபேட்டை-தலா 100.4 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது.
மழை அளவு: தமிழகத்தில் வியாழக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் மதுரை மாவட்டம் திருவாதவூா், ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம், வாலாஜா ஆகிய பகுதிகளில் 50 மி.மீ. மழை பதிவானது.
ஆற்காடு (ராணிப்பேட்டை)- 40 மி.மீ., ஏற்காடு (சேலம்), மதுராந்தகம் தாலுகா அலுவலகம், மாமல்லபுரம், செய்யூா் (செங்கல்பட்டு), வெம்பாக்கம், ஆரணி (திருவண்ணாமலை), சிட்டம்பட்டி (மதுரை)-30 மி.மீ. மழை பதிவானதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






