
மீனாட்சியம்மன் கோயில் நில மோசடி! மேலும் 4 பேர் கைது
மீனாட்சியம்மன் கோயில் அறக்கட்டளை நில மோசடி வழக்கில் மேலும் 4 பேர் கைது

மேலும் நால்வர் கைது
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அறக்கட்டளைக்கு சொந்தமான நில மோசடி விவகாரத்தில் இதுவரை ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன் மூலம் கைது செய்யப்பட்டோர் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. மேலும் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மற்றும் அழகர்கோயில் சேவைக்காக உருவாக்கப்பட்ட அறக்கட்டளைக்குச் சொந்தமான சுமார் 1.79 ஏக்கர், ரூ.60 கோடி மதிப்பிலான நிலம் முறைகேடாக பட்டா மாற்றம் செய்யப்பட்டு, பத்திரப்பதிவு மற்றும் அடமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக எழுந்த புகார் தொடர்பான வழக்கில், இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் மொத்தம் 19 பேர் மீது மதுரை மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
முதற்கட்டமாக புதுக்கோட்டை ராஜ்குமார், உசிலம்பட்டி இளையராஜா, முன்னாள் தாசில்தார் அன்பழகன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து முறைகேடான பத்திரப்பதிவுக்கு உதவியதாகக் கூறப்படும் திண்டுக்கல் சிறுமலையைச் சேர்ந்த காளிக்குமார், கோயில் நிலத்தின் பட்டா மாற்ற நடவடிக்கையில் தொடர்புடையதாகக் கூறப்படும் முன்னாள் வி.ஏ.ஓ. அரசன், முன்னாள் சார் பதிவாளர் அனந்தராமன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதன் மூலம் கைது எண்ணிக்கை 6 ஆக உயர்ந்தது.
இந்நிலையில், தற்போது மேலும் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள்: முத்துராணி (60) – கணேசன் மனைவி, புதுக்கோட்டை; ராஜேந்திரன் (59) – வெள்ளைச்சாமி மகன், கரம்பக்குடி; ஜோதி (50) – சின்னப்பா மனைவி, குளத்தூர்; கீதா (49) – நாராயணன் மனைவி, புதுக்கோட்டை. இவர்கள் வழக்கு எண் 0035/2026, IPC 120(B) (கூட்டுச்சதி), 420 (மோசடி) ஆகிய பிரிவுகளின் கீழ் நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இதுவரை கைது செய்யப்பட்டுள்ள 10 பேரில் அரசு வருவாய்த்துறை அதிகாரிகள், முன்னாள் வி.ஏ.ஓ., சார் பதிவாளர் மற்றும் நிலத்துடன் தொடர்புடைய தனிநபர்கள் இடம்பெற்றுள்ளனர். மீதமுள்ள குற்றம்சாட்டப்பட்டவர்களின் பங்கு, பட்டா மாற்றம், பத்திரப்பதிவு மற்றும் நிலத்தை கைமாற்றியதில் யார் யார் தொடர்புடையவர்கள் என்பது குறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





