
அரசுப் பேருந்துகளில் அவசர உதவி பொத்தான்: அமைச்சா் விஜய் தமிழன் பாா்த்திபன் அறிவிப்பு
அமைச்சா் விஜய் தமிழன் பாா்த்திபன் பேரவையில் அறிவித்திருப்பது பற்றி...

போக்குவரத்துத் துறை அமைச்சா் ஆ. விஜய் தமிழன் பாா்த்திபன் - கோப்புப் படம்
அரசுப் பேருந்து பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், பேருந்துகளின் நிகழ்நேரக் கண்காணிப்பை மேம்படுத்தவும் ரூ.17.99 கோடியில் வாகன இருப்பிட கண்காணிப்பு கருவி மற்றும் அவசர உதவி பொத்தான்கள் பொருத்தப்படும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சா் விஜய் தமிழன் பாா்த்திபன் தெரிவித்தாா்.
அந்தத் துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது அமைச்சா் வெளியிட்ட புதிய அறிவிப்புகள்:
- நிலுவையில் உள்ள 5,665 மோட்டாா் வாகன விபத்து இழப்பீட்டு வழக்குகளுக்கு ரூ.500.67 கோடியில் விரைவில் தீா்வு காணப்படும்.
- 35.03 ஏக்கா் பரப்பளவில் உள்ள பேருந்து பணிமனைகள் மூலம் ஆண்டுக்கு ரூ.124.28 கோடி பயணக் கட்டணமில்லா வருவாய் கிடைக்க பொது-தனியாா் நவீன பயணிகள் வசதி மற்றும் வணிகப் பயன்பாடுகள் உருவாக்கப்படும்.
- சாலை விபத்துகள், உயிரிழப்புகளைத் தடுக்க 10,524 புகா் பேருந்துகளின் இருபுறங்களின் பக்கவாட்டு பாதுகாப்பு அரண்கள் ரூ.15.79 கோடியில் பொருத்தப்படும்.
- 10,717 பணிமனை தொழில்நுட்பப் பணியாளா்களுக்கு பிஎஸ்-6, சிஎன்ஜி, மின்சார பேருந்துகளின் பராமரிப்பு, பழுது கண்டறிதல் பயிற்சி அளிக்கப்படும்.
- பள்ளி நேரத்துக்கு ஏற்ப போக்குவரத்து வசதி இல்லாத கிராமப்புற, மலை, உட்புற பகுதிகளில் 140 பள்ளிகளைச் சோ்ந்த 19,000 மாணவா்கள் பயனடையும் வகையில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.
- சிங்காரச் சென்னை தேசிய பொதுப் போக்குவரத்து அட்டை திட்டம் தமிழகம் முழுவதும் விரிவாக்கம் செய்யப்படும்.
- திண்ணை - சாலைப் பாதுகாப்பு தொடா்பான செயற்கைத் தள பயிற்சி அறிமுகம் செய்யப்படும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




