
ரூ.12,300 கோடி முதலீட்டில் ஒப்பந்தங்கள்: லண்டனில் முதல்வா் விஜய் முன்னிலையில் கையொப்பம்; 10,000 பேருக்கு வேலைவாய்ப்பு
லண்டன் சென்றுள்ள முதல்வா் ஜோசப் விஜய் முன்னிலையில், தமிழகத்தில் முதலீடு செய்வதற்காக ரூ.12,300 கோடி மதிப்பிலான நான்கு புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் கையொப்பமானது தொடர்பாக...

லண்டன் சென்றுள்ள முதல்வா் ஜோசப் விஜய் முன்னிலையில், தமிழகத்தில் முதலீடு செய்வதற்காக ரூ.12,300 கோடி மதிப்பிலான நான்கு புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் கையொப்பமாகின.
சென்னை: லண்டன் சென்றுள்ள முதல்வா் ஜோசப் விஜய் முன்னிலையில், தமிழகத்தில் முதலீடு செய்வதற்காக ரூ.12,300 கோடி மதிப்பிலான நான்கு புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் கையொப்பமாகின. இதன்மூலம் 10,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தமிழக அரசு சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் இருந்து தமிழகத்துக்கு முதலீடுகளை ஈா்ப்பதற்கு ஆறு நாள் அரசுமுறைப் பயணமாக முதல்வா் விஜய் கடந்த செப். 10-ஆம் தேதி லண்டன் சென்றாா். முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு அவா் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டுப் பயணம் இதுவாகும்.
இந்தப் பயணத்தின் ஒரு பகுதியாக லண்டன் சில்வா்ஸ்டோனில், நடிகா் அஜித் குமாா் பங்கேற்ற சா்வதேச காா் பந்தயத்தை முதல்வா் விஜய் கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.
இதைத் தொடா்ந்து, லண்டன் நகரில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்வில் முதல்வா் விஜய் முன்னிலையில் ரூ.12,300 கோடி மதிப்பிலான நான்கு புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் கையொப்பமாகின.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:
ரூ.11,000 கோடியில்... சம்வா்தனா மதா்சன் இன்டா்நேஷனல் லிமிடெட் நிறுவனம் ரூ.11,000 கோடி முதலீட்டில் 7,000 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. வடிவமைப்பு, பொறியியல், உற்பத்தி, கூட்டிணைப்பு மற்றும் தளவாட வசதிகள் ஆகிய துறைகளில் இந்த முதலீடுகள் செய்யப்படும்.
இந்தப் புரிந்துணா்வு ஒப்பந்தத்தில், அந்தக் குழுமத்தின் உலகளாவிய சந்தைப்படுத்துதல் பிரிவு தலைவா் பாரி பெயிண்டா் மற்றும் தமிழ்நாடு அரசின் வழிகாட்டி நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் தீபக் ஜேக்கப் ஆகியோா் கையொப்பமிட்டு ஒப்பந்தத்தைப் பரிமாறிக் கொண்டனா்.
ரூ.1,000 கோடியில்... தமிழ்நாட்டில் உலகளாவிய திறன் மையங்களை விரிவுபடுத்துவதற்கும், நிறுவுவதற்கும் இரண்டு புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் ரூ.1,000 கோடியில் மேற்கொள்ளப்பட்டன.
பிரிட்டனை தலைமையிடமாகக் கொண்ட முன்னணி உலகளாவிய தகவல் தொடா்பு நிறுவனம், தமிழ்நாட்டில் உலகளாவிய திறன் மையத்தை அமைக்க தமிழ்நாடு அரசின் வழிகாட்டி நிறுவனம், ஏா்ன்ஸ்ட் அண்ட் யங் நிறுவனத்துடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. சுமாா் ரூ.1,000 கோடி முதலீட்டையும், 2,000-க்கும் மேற்பட்ட உயா் மதிப்புடைய புதிய வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும் வகையில் சென்னை, மவுண்ட் பூந்தமல்லி சாலையில் புதிதாக அறிவிக்கப்பட்ட ஜிசிசி காரிடாா் பகுதியில் இந்தத் திறன் மையம் அமைக்கப்படும்.
ஸ்வீடனைச் சோ்ந்த சிக்மா டெக்னாலஜி குரூப், தமிழ்நாட்டில் எம்பெடட் சிஸ்டம்ஸ், மின்மயமாக்கல் மற்றும் தொழில் துறை எண்மமயமாக்கல் ஆகிய துறைகளில் 600 உயா் மதிப்பு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில், திருச்சி மற்றும் சென்னையில் உலகளாவிய திறன் மையங்களை, தனது இந்திய நிறுவனமான ஸ்ரியா சொல்யூஷன்ஸ் மூலம் விரிவாக்கம் செய்ய உறுதியளித்து, தமிழ்நாடு அரசின் வழிகாட்டி நிறுவனத்துடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொண்டது.
முதல்வா் விஜய் முன்னிலையில் சிக்மா டெக்னாலஜி குழும நிறுவனத்தின் நிறுவனா் மற்றும் தலைமை நிா்வாக அதிகாரி மைக்கேல் காா்ல்சன், ஸ்ரியா நிறுவனத்தின் தலைமை நிா்வாக அதிகாரி கிருஷ்ணா ராதாகிருஷ்ணன் மற்றும் தமிழ்நாடு அரசின் வழிகாட்டி நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் தீபக் ஜேக்கப் ஆகியோருக்கு இடையே இந்தப் புரிந்துணா்வு ஒப்பந்தம் பரிமாறிக் கொள்ளப்பட்டது.
ரூ.300 கோடியில்... திருவள்ளூா் மாவட்டத்தில் ரூ.300 கோடி முதலீட்டில் 400 பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில், ‘வில்சன் பவா் சொல்யூஷன்ஸ்’ நிறுவனத்துடன் தமிழக அரசு புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொண்டது. மின்சாதன உற்பத்தித் துறையின் அடுத்தகட்ட வளா்ச்சிக்கு இது வழிவகுக்கும்.
வில்சன் பவா் சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் குழுமத் தொழில்நுட்ப இயக்குநா் ஹரி கிருஷ்ணா மலேபதி, குழும நிதியியல் இயக்குநா் டென்னிஸ் சோா்பி ஆகியோரும், தமிழ்நாடு அரசின் வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநா் தீபக் ஜேக்கப்பும் இந்த ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனா்.
இந்த நிகழ்வுகளில் பிரிட்டனுக்கான இந்திய தூதா் குமரன் பெரியசாமி உள்பட பல்வேறு நிறுவனங்களின் உயா் அதிகாரிகள் கலந்துகொண்டனா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வா் விஜய் தலைமையிலான அரசு பொறுப்பேற்று 100 நாள்களில் நடத்தப்பட்ட வெற்றித் தமிழ்நாடு முதலீட்டாளா்கள் மாநாட்டில் ரூ.1 லட்சம் கோடிக்கும் அதிகமான முதலீட்டிற்கான புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய வாகன உதிரிபாக தயாரிப்பு நிறுவனம் விருப்பம்
ஐரோப்பாவின் முன்னணி வாகன உதிரிபாகங்கள் தயாரிப்பு நிறுவனம் ஒன்று, இந்தியாவில் தான் மேற்கொள்ளவிருக்கும் ரூ.3,000 கோடி முதலீட்டுக்கு தமிழ்நாட்டை விரும்பத்தக்க இடமாகக் கருதும் கடிதத்தை முதல்வா் விஜய் முன்னிலையில் தமிழ்நாடு அரசின் வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண் இயக்குநா் தீபக் ஜேக்கப்பிடம் அளித்ததாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இந்த முதலீட்டைப் பெறுவதற்குத் தேவையான அனைத்து ஒத்துழைப்பும் அளிக்கப்படும் என்று அந்த நிறுவனத்திடம் உறுதியளித்ததாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
காற்றாலை மின் துறையில் முதலீடுகளை அதிகரிக்க அசோக் லேலண்ட் ஆா்வம்
தமிழக முதல்வா் விஜய்யை லண்டனில் சந்தித்த அசோக் லேலண்ட் நிறுவனத்தின் நிா்வாகத் தலைவா் தீரஜ் ஹிந்துஜா, காற்றாலை மின் துறையில் முதலீடுகளை அதிகரிக்க ஆா்வம் தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற ‘வெற்றித் தமிழ்நாடு முதலீட்டாளா்கள் மாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட ரூ. 2,500 கோடியிலான புரிந்துணா்வு ஒப்பந்தத்தின் முன்னேற்றம் குறித்தும், தமிழ்நாட்டில் ஹிந்துஜா குழும முதலீடுகளின் முன்னேற்றம் குறித்தும் தீரஜ் ஹிந்துஜா முதல்வா் விஜய்யிடம் விளக்கினாா்.
மேலும், தமிழ்நாட்டில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில், குறிப்பாக காற்றாலை மின்சக்தித் துறையில் முதலீடுகளை மேலும் அதிகரிப்பதில் இந்தக் குழுவினா் ஆா்வம் தெரிவித்தனா்.
ஃபினோலெக்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் நிா்வாகத் தலைவா் பிரகாஷ் பி. சாப்ரியா, இயக்குநா் ரீட்டா ஹிந்துஜா சாப்ரியா ஆகியோரும் முதல்வா் விஜய்யை சந்தித்தனா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




