
கீழடி அறிக்கை விவகாரம்: மத்திய கலாசார துறை அமைச்சரின் கருத்துக்கு இன்ஸ்டாவில் எதிர்க் கருத்து பதிவிட்ட அமர்நாத்
கீழடி அகழாய்வு குறித்து மத்திய கலாசாரத் துறை அமைச்சர் கஜேந்திர ஷெகாவத் தெரிவித்த விரிவான கருத்துக்கு இந்திய தொல்லியல் துறை இயக்குநர் கே. அமர்நாத் ராமகிருஷ்ணா தனது இன்ஸ்டாகிராம் பக்கம் வாயிலாக எதிர்வினையாற்றியுள்ளார்.

தொல்லியல் துறை ஆராய்ச்சியாளார் அமர்நாத் ராமகிருஷ்ணன் - x
நமது சிறப்பு நிருபர்
கீழடி அகழாய்வு குறித்து மத்திய கலாசாரத் துறை அமைச்சர் கஜேந்திர ஷெகாவத் தெரிவித்த விரிவான கருத்துக்கு இந்திய தொல்லியல் துறை இயக்குநர் கே. அமர்நாத் ராமகிருஷ்ணா தனது இன்ஸ்டாகிராம் பக்கம் வாயிலாக எதிர்வினையாற்றியுள்ளார்.
சிவகங்கை மாவட்டம், கீழடியில் நடைபெற்ற முதல் மற்றும் இரண்டாம் கட்ட அகழாய்வுகளைத் தலைமையேற்று நடத்தியவர் இந்திய தொல்லியல் துறையின் (ஏஎஸ்ஐ) இயக்குநர் அமர்நாத் ராமகிருஷ்ணா. வைகை நதிக்கரை நாகரிகத்தின் தொன்மையையும், பழந்தமிழர்களின் நகர நாகரிகத்தையும் உலகறியச் செய்ததில் இந்த ஆய்வுகளுக்கு முக்கியப் பங்குண்டு.
கீழடி குறித்து அமர்நாத் ராமகிருஷ்ணா சமர்ப்பித்த 982 பக்க அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள காலக்கணிப்புகளைத் திருத்தி எழுதுமாறு இந்திய தொல்லியல் துறை அவருக்கு அறிவுறுத்தியது. ஆனால், அறிவியல்பூர்வமான ஆய்வுகளின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட அந்த அறிக்கையைத் திருத்த அவர் மறுத்துவிட்டார். இதற்கிடையே, தமிழ்நாட்டில் இருந்து முதலில் தில்லிக்கும், பிறகு கிரேட்டர் நொய்டாவில் உள்ள தொல்லியல் துறை அலுவலகங்களுக்கும் அமர்நாத் ராமகிருஷ்ணா இடமாற்றம் செய்யப்பட்டார்.
இந்த நிலையில், ஆங்கில நாளிதழ் ஒன்றின் நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் கஜேந்திர ஷெகாவத், "இந்திய அரசின் அனுமதியுடன் தொல்லியல் துறை கீழடியில் அகழாய்வை மேற்கொண்டது. அகழாய்வுக்கென்று உலகம் முழுவதும் அங்கீகரிக்கப்பட்ட அறிவியல்பூர்வ செயல்முறை உள்ளது. இந்திய தொல்லியல் துறைக்கு உலக அளவில் தனி நற்பெயரும், கெüரவமும், நம்பகத்தன்மையும் உள்ளது. ஆனால், தொடர்புடைய அதிகாரி (அமர்நாத் ராமகிருஷ்ணா) சமர்ப்பித்த அறிக்கையில் பல்வேறு குறைபாடுகள் இருந்தன. அந்த அறிக்கையைத் தயாரிக்கும்போது அந்த அதிகாரி "அரசியல் செல்வாக்குக்கு' உட்பட்டுவிட்டார் என்று கூறினார்.
இந்த நிலையில், மத்திய அமைச்சரின் கருத்துக்கு இன்ஸ்டாகிராம் சமூக ஊடகத்தில் பயனர்கள் விவாதித்தபோது, அதில் ஒரு பயனருக்கு அமர்நாத் ராமகிருஷ்ணா தனது அதிகாரபூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து பதிலளித்து எதிர்வினையாற்றியுள்ளார். அதில், "முதலில் 982 பக்கங்கள் கொண்ட கீழடி அகழாய்வு அறிக்கையை பொதுவெளியில் வெளியிட மத்திய அமைச்சரிடம் கூறுங்கள். அரசியலில் ஈடுபடுவது யார் என்பதை அந்த அறிக்கை உணர்த்தும்' என்று குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






