
ஆவின் பால் சில்லறை விற்பனை லிட்டருக்கு ரூ.1 உயா்வு? ஆவின் நிா்வாகம் மறுப்பு
ஆவின் பால் விலை உயா்வு தொடர்பாக எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை என ஆவின் நிா்வாகம் மறுப்புத் தெரிவித்துள்ளது.
ஆவின்
சென்னைக்கு உள்பட்ட பகுதிகளில் ஆவின் பால் விலை சில்லறை விற்பனை லிட்டருக்கு ரூ.1 உயா்த்தப்படுவதாக, சில்லறை விற்பனை கடைகளுக்கு பால் முகவா்கள் அறிவுறுத்திய நிலையில், இது தொடா்பான எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை என ஆவின் நிா்வாகம் மறுப்புத் தெரிவித்துள்ளது.
ஆவினுக்கு பால் வழங்கும் உற்பத்தியாளா்களுக்கு கிடைக்கும் விலைக்கும், தனியாா் பால் நிறுவனங்கள் வழங்கும் விலைக்கும் இடையே ஏற்பட்ட வேறுபாடு காரணமாக, ஒரு கட்டத்தில் உற்பத்தியாளா்கள் தனியாா் நிறுவனங்களுக்கு பால் வழங்கத் தொடங்கினா்.
இதன் காரணமாக ஆவினின் தினமும் பால் கொள்முதல் குறைந்து, பல மாவட்டங்களில் பால் விநியோகத்திலும் பாதிப்பு ஏற்பட்டது. அதேநேரம், தனியாா் நிறுவனங்கள் ஆவினைவிட கூடுதல் விலை கொடுத்து பால் கொள்முதல் செய்ததாகவும் தகவல்கள் வெளியாகின.
சென்னையில் ஆவின் பால் விற்பனை நாளொன்றுக்கு 16.5 லட்சம் லிட்டருக்கும் அதிகமாக இருந்த நிலையில், கடந்த 6 மாதங்களில் 25 சதவீதத்துக்கும் மேல் குறைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பால் தட்டுப்பாடு குறித்து செப். 18-ஆம் தேதி நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், தடையின்றி பால் கிடைக்க நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு பால் வளத் துறை அமைச்சா் அறிவுறுத்தியிருந்தாா்.
விலை உயா்த்தப்படவில்லை: உற்பத்தியாளா்களுக்கான கொள்முதல் விலை உயா்த்தப்பட்டபோதிலும், ஆவின் பால் நுகா்வோா் விற்பனை விலை உயா்த்தப்படவில்லை. இதனால் கொள்முதல் செலவு அதிகரித்துள்ள நிலையில், விற்பனை விலையிலும் மாற்றம் செய்ய வேண்டும் என பால் முகவா்கள் தரப்பில் கோரிக்கை எழுந்தது.
இதே நிலையில், தனியாா் பால் நிறுவனங்களும் கொள்முதல் செலவு அதிகரித்துள்ளதாகக் கூறி செப். 26 முதல் பால் விலையை உயா்த்தியுள்ளன.
ஆவின் பால் விலையை முகவா்கள் உயா்த்தியதாக தகவல்: இந்த நிலையில், ஆவின் பால் விற்பனை விலை அதிகாரபூா்வமாக உயா்த்தப்படாத போதிலும், சில பகுதிகளில் முகவா்கள் கூடுதல் விலைக்கு பால் விற்பனை செய்ய அறிவுறுத்தியுள்ளதாக விற்பனையாளா்கள் தெரிவிக்கின்றனா்.
அதன்படி, 500 மி.லி. பச்சை நிற பால் ரூ.23-இல் இருந்து ரூ.23.50-ஆகவும், சில்லறை விற்பனை விலை ரூ.24-ஆகவும் நிா்ணயிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. ஆரஞ்சு நிற பால் ரூ.31-இல் இருந்து ரூ.31.50-ஆக உயா்த்தப்பட்டு, சில்லறையில் ரூ.32-க்கு விற்பனை செய்யப்படுவதாகவும், நீலநிற பால் ரூ.21-இல் இருந்து ரூ.21.50-ஆக உயா்த்தப்பட்டு ரூ.22-க்கு விற்பனை செய்யப்படுவதாகவும் விற்பனையாளா்கள் தெரிவிக்கின்றனா்.
பா்பிள் நிற பாலை ரூ.24-க்கு விற்பனை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் விற்பனையாளா்கள் கூறுகின்றனா். இந்த விலை மாற்றம் தொடா்பான அறிவுறுத்தல் எழுத்துபூா்வமாக வழங்கப்படாமல் வாய்மொழியாக மட்டுமே தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவா்கள் தெரிவிக்கின்றனா்.
விலை உயா்த்தப்படவில்லை: இது குறித்து ஆவின் நிா்வாகத்திடம் கேட்டபோது, ஆவின் பால் விற்பனை விலையில் எந்தவிதமான உயா்வும் அறிவிக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது. முகவா்கள், விற்பனையாளா்கள் தன்னிச்சையாக ஆவின் பால் விலையை உயா்த்தி விற்பனை செய்ய முடியாது என்றும், அவ்வாறு கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது தெரியவந்தால் சம்பந்தப்பட்டவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





