
இடைத்தேர்தல்... தாராபுரத்தில் தலைகாட்ட முடியாத சத்யபாமா! மாலை வந்த போது..
இடைத்தேர்தல் நடக்கும் தாராபுரத்தில் தலைகாட்ட முடியாத சத்யபாமா முதல்வர் விஜய் உருவ பொம்மையுடன் வந்தார்.

சத்யபாமா
தமிழ்நாட்டில், மதுராந்தகம் மற்றும் தாராபுரத்தில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு தேர்தல் பிரசாரம் சூடுகிளப்பி வரும் நிலையில், திங்கள்கிழமை மதியம் வரை, தவெக வேட்பாளர் சத்யபாமா பிரசாரத்துக்கு வரவில்லை.
பிறகு, மாலையில், விஜய்யின் உருவ பொம்மையுடன் தவெகவினரை ஈர்க்கும் வகையில் வாகனத்தில் பிரசாரத்தை தொடங்கியிருந்தார்.
திங்கள்கிழமை காலை முதலே பல்வேறு பகுதிகளிலும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வந்தனர். அனல் பறக்கும் பிரசார பேச்சுகள் ஏற்கனவே, அடித்துக் கொண்டிருந்த வெப்பத்தை வெப்ப அலையாக மாற்றிக் கொண்டிருந்தது.
முன்னாள் அதிமுக எம்எல்ஏவும் இன்னாள் தவெக வேட்பாளருமான சத்யபாமாவை, தாராபுரத்தில் எங்கும் காண முடியவில்லை என்று பேசப்பட்டது. மாலையில் அவர் வாகனத்தில் பிரசாரம் செய்ய கிளம்பினார். அப்போது ஆச்சரியம் தரும் வகையில் தவெக தலைவரும் முதல்வருமான விஜய்யின் உருவ பொம்மை வாகனத்தில் ஏற்றப்பட்டிருந்தது.
அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்துவிட்டு, தவெகவில் இணைந்து தற்போது தவெக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சத்யபாமாவுக்கு தாராபுரம் தொகுதியில் கடும் எதிர்ப்பு அலை உருவாகியிருக்கிறது.
எங்கு பிரசாரம் சென்றாலும் அதிமுகவினர் ஓடோடி வந்து அவரைக் கேள்விகளால் அச்சுறுத்தி வந்தனர். இதனால் அவர் பலத்த காவல்துறை பாதுகாப்புடன் பிரசாரம் செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.
ஒரு சில நாள்களுக்கு முன்பு, உடல்நலக் குறைவு ஏற்பட்டு ஓய்வில்இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதனால், சத்யபாமா எங்கு பிரசாரம் செய்கிறார் என்பதை முன்கூட்டியே அறிவிக்காமல், திடீரென ஒரு பகுதிக்குச் சென்று பிரசாரம் செய்வதை வழக்கமாக்கிக் கொண்டார். முன்கூட்டியே தெரிந்தால்தான், அதிமுகவினர் வந்து ரகளை செய்கிறார்கள் என்பதால் இப்படி ஒரு உக்தியை கையாண்டு வருகிறார்களாம்.
இதனால்தானோ என்னவோ அவசர அவசரமாக முதல்வர் விஜய் உருவத்தை தயாரித்து வாகனத்தில் ஏற்றியிருக்கிறார்கள். ஒருவேளை, இந்த உருவப் படத்தைப் பார்த்தாவது மக்கள் ஏமாந்து போக மாட்டார்களா, தனது பிரசாரத்தைத் தடுக்காமல் இருந்துவிட மாட்டார்களா என்று எதிர்பார்க்கிறார் சத்யபாமா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






