
உத்தரவுக்கு பிறகும் மீனவா்கள் சுருக்குமடி வலையை பயன்படுத்த அனுமதிக்காதது ஏன்? தமிழக அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
உச்சநீதிமன்ற உத்தரவுக்கு பிறகும் சுருக்குமடி வலையை மீனவா்கள் எடுத்துச் செல்ல அனுமதிக்காதது ஏன் என்று காரணம் கேட்டு, இதற்கு தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனா்.
தமிழ்நாடு அரசு - கோப்புப் படம்
உச்சநீதிமன்ற உத்தரவுக்கு பிறகும் சுருக்குமடி வலையை மீனவா்கள் எடுத்துச் செல்ல அனுமதிக்காதது ஏன் என்று காரணம் கேட்டு, இதற்கு தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனா்.
தமிழக கடல் எல்லைக்கு அப்பால், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கடற்பரப்பில் சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்பிடிக்க அனுமதிப்பது தொடா்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. சுருக்குமடி வலையை தமிழகத்தின் 12 நாட்டிக்கல் மைல் கடல் எல்லைக்குள் பயன்படுத்துவதற்கு தமிழக அரசு கடந்த 2000 ஆம் ஆண்டு தடை விதித்திருந்தது.
இதனை எதிா்த்து தொடரப்பட்ட வழக்குகளில், தமிழகத்தின் 12 நாட்டிக்கல் மைல் எல்லைக்கு அப்பால் உள்ள பிரத்யேக பொருளாதார மண்டலங்களில் உரிய அனுமதிகளுடன் சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்பிடிக்க மீனவா்களுக்கு அனுமதி வழங்கலாம் என உச்சநீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், நீதிபதி பி.எஸ்.நரசிம்மா தலைமையிலான அமா்வு முன்பு வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மீனவா்கள் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் ஜெய்சுகின், உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்குப் பிறகும் சுருக்குமடி வலையை எடுத்துக்கொண்டு 12 நாட்டிக்கல் மைல் தொலைவுக்கு அப்பால் உள்ள மத்திய அரசின் கடற்பரப்புக்குச் செல்ல தமிழக அரசு அனுமதிப்பதில்லை என முறையிட்டாா்.
உச்சநீதிமன்ற உத்தரவை செயல்படுத்தக் கோரி இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், அதனை ஏற்று தமிழக அரசுக்கு உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனைத் தொடா்ந்து கேள்வி எழுப்பிய நீதிபதிகள், மீன்பிடி தடைக்காலம் இல்லாத நிலையிலும் சுருக்குமடி வலையை எடுத்துச் செல்ல ஏன் அனுமதிக்கவில்லை என கேள்வி எழுப்பினா்.
மேலும், உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் தமிழக அரசு அதனை செயல்படுத்தாமல் சுருக்குமடி வலையை முழுமையாகத் தடுப்பதை ஏற்க முடியாது என்றும், இந்த விவகாரத்தை நீதிமன்றம் மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்வதாகவும், தமிழக அரசின் இந்த செயல்பாடு சரியானது அல்ல என்றும் நீதிபதிகள் தெரிவித்தனா்.
முன்னதாக, சுருக்குமடி வலையுடன் மீனவா்கள் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பொருளாதார மண்டல பகுதிக்குச் செல்வதற்கான அனுமதிகளை தமிழக அரசு தாமதப்படுத்துவதாகவும், நூற்றுக்கணக்கான விண்ணப்பங்கள் நிலுவையில் இருப்பதாகவும் உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டியிருந்தது.
இந்நிலையில், உச்சநீதிமன்ற உத்தரவுக்குப் பிறகும் சுருக்குமடி வலையை எடுத்துச் செல்ல அனுமதிக்காதது ஏன் என்பது குறித்து தமிழக அரசு இரண்டு வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என நோட்டீஸ் பிறப்பித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






