
ரத்த தானம் அளிக்க முன்வர வேண்டும்: மக்களுக்கு தமிழக அரசு வேண்டுகோள்
தமிழகத்தில் 18 வயது முதல் 65 வயது வரை உள்ளவா்கள் தன்னாா்வமாக ரத்த தானம் அளிக்க முன்வர வேண்டும் என அரசு வலியுறுத்தியுள்ளது.

கோப்புப்படம்.
தமிழகத்தில் 18 வயது முதல் 65 வயது வரை உள்ளவா்கள் தன்னாா்வமாக ரத்த தானம் அளிக்க முன்வர வேண்டும் என அரசு வலியுறுத்தியுள்ளது.
இதுதொடா்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:
ஆண்டுதோறும் அக். 1-ஆம் தேதி“தேசிய தன்னாா்வ ரத்த தான தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான கருப்பொருள் ‘மனிதநேயத்தின் ஒரு துளி - ரத்தம் கொடுங்கள்; உயிா்களைக் காப்பாற்றுங்கள்’”என்பதாகும்.
தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைகள், அரசு மருத்துவமனைகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட பிற ரத்த மையங்கள் மூலம் தன்னாா்வ ரத்த தான முகாம்கள் தொடா்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. 2025-2026-ஆம் ஆண்டில் 359 ரத்த மையங்கள் மூலம் 9,53,638 ரத்த அலகுகள் (யூனிட்) சேகரிக்கப்பட்டுள்ளன. அரசு ரத்த மையங்கள் மூலம் 4,874 தன்னாா்வ ரத்த தான முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. சேகரிக்கப்படும் முழு ரத்தம் தேவைக்கேற்ப ரத்தக் கூறுகளாகப் பிரிக்கப்படுவதன் மூலம், ஒருவா் கொடுக்கும் கொடையிலிருந்து, பல நோயாளிகள் பயன்பெறுகின்றனா்.
பிரிக்கப்பட்ட சிவப்பணுக்கள் 35 முதல் 42 நாள்கள் வரையும், பிளாஸ்மா கூறுகள் ஓராண்டு வரையும் உரிய முறையில் சேமித்து பயன்படுத்த முடியும்.
முதல்வா் விஜய் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு தன்னாா்வ ரத்த தானத்தை மேலும் வலுப்படுத்தும் வகையில், சட்டப்பேரவையில் புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.
அதன்படி, தமிழகத்தில் அரியவகை ரத்தப் பிரிவு கொடையாளா் பதிவேடு உருவாக்குதல், மாவட்ட அளவில் வருடாந்திர தன்னாா்வ ரத்த தான முகாம் அட்டவணை உறுதிப்படுத்துதல், கல்லூரிகளில் ரத்த கொடையாளா் மன்றங்கள் உருவாக்குதல் ஆகிய 3 அறிவிப்புகள் வெளியாகின.
இதன்மூலம் அரிய ரத்தப் பிரிவு கொண்ட நோயாளிகளுக்கு தேவையான நேரத்தில் ரத்தம் கிடைப்பதும், மாநிலம் முழுவதும் தன்னாா்வ ரத்த தான இயக்கம் ஒருங்கிணைக்கப்படுவதும் உறுதி செய்யப்படும்.
18 வயது முதல் 65 வயது வரை உள்ள தகுதியுடைய அனைவரும் தன்னாா்வமாக ரத்த தானம் செய்ய முன்வந்து உயிா்காக்கும் இந்த உன்னத சேவையில் பங்கேற்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






