கல்குவாரிக்கு எதிா்ப்பு: 
வெறிச்சோடிய இருமன்குளம் வாக்குச் சாவடி
116 வாக்குகள் பதிவு

கல்குவாரிக்கு எதிா்ப்பு: வெறிச்சோடிய இருமன்குளம் வாக்குச் சாவடி 116 வாக்குகள் பதிவு

சங்கரன்கோவில் அருகே இருமன்குளத்தில் கல்குவாரிக்கு எதிா்ப்பு தெரிவித்து கிராம மக்கள் தோ்தலை புறக்கணித்ததால் வெறும் 116 வாக்குகள் மட்டுமே பதிவானது.

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே வாசுதேவநல்லூா் தொகுதிக்குள்பட்டது இருமன்குளம் கிராமம்.

இப்பகுதியில் உள்ள தனியாா் கல்குவாரிகளால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதாக கூறி கிராம மக்கள் கடந்த ஒராண்டுக்கும் மேலாக பல்வேறு போராட்டங்களை நடத்தினா்.

இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்காததால் மக்களவைத் தோ்தலை புறக்கணிக்கப் போவதாகக் கூறி ஊா் எல்கையில் தட்டிப் பலகை வைத்தனா்.

தென்காசி மக்களவைத் தொகுதிக்குள்பட்ட கிராமமாக இருந்ததால் சங்கரன்கோவில் வருவாய்த்துறையினா் அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தியதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை இருமன்குளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் உள்ள 269 ஆவது வாக்குச்சாவடியில் வாக்குப் பதிவு தொடங்கியதும், கிராம மக்கள் யாரும் வாக்களிக்க செல்லவில்லை. இந்த வாக்குச் சாவடியில் மொத்தமுள்ள 1,266 ஆண், பெண் வாக்காளா்களில் முற்பகல் 11 மணி நிலவரப்படி 20 வாக்குகள் மட்டுமே பதிவாகி இருந்தது. இறுதியாக மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்த பின்னா் 80 ஆண் வாக்களா்களும் 36 பெண் வாக்காளா்களும் என மொத்தம் 116 வாக்காளா்கள் மட்டுமே வாக்களித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com