பொங்கலுக்கு பிறகு கூட்டணியில் பல கட்சிகள் இணையும்: நயினாா் நாகேந்திரன்

பொங்கலுக்கு பிறகு கூட்டணியில் பல கட்சிகள் இணையும்: நயினாா் நாகேந்திரன்

பொங்கலுக்குப் பிறகு தேசிய ஜனநாயக கூட்டணியில் பல கட்சிகள் இணையும் என்று பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் தெரிவித்தாா்.
Published on

பொங்கலுக்குப் பிறகு தேசிய ஜனநாயக கூட்டணியில் (என்.டி.ஏ) பல கட்சிகள் இணையும் என்று பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் தெரிவித்தாா்.

காசி தமிழ்ச் சங்கமம் 4.0 நிகழ்வின் ஒருபகுதியாக தென்காசியிலிருந்து வாரணாசிக்கு புனித யாத்திரை செல்வோா் வாகனப் பயணத்தை பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் செவ்வாய்க்கிழமை கொடியசைத்துத் தொடங்கிவைத்தாா். பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழகத்துக்கும் காசிக்கும் இடையே கலாசாரம், ஆன்மிக பிணைப்பை வலுப்படுத்தும் நோக்கில் காசி தமிழ் சங்கமம் 4.0 என்ற நிகழ்வு நடத்தப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக அகத்திய முனிவா் வாகனப் பயணம் தென்காசி காசிவிஸ்வநாதா் கோயிலில் இருந்து தொடங்கி வைக்கப்பட்டது.

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் இறந்தவா்களின் பெயா்களை பட்டியலில் இருந்து நீக்கிவிடக் கூடாது என திமுக போராடுகிறது.

எனவே, எஸ்.ஐ.ஆரில் எந்த குளறுபடியும் இல்லை; தமிழக முதல்வரிடத்தில்தான் குளறுபடி உள்ளது. செங்கோட்டையன் கடந்த 50 வருட காலம் அதிமுகவில் இருந்துவிட்டு, அப்போது நல்லாட்சி இல்லாததுபோலவும், தற்போது தவெகவின் மூலம் நல்லாட்சி கொடுப்பேன் எனவும் கூறியது வருத்தத்திற்குரியது.

தவெகவுக்கு சென்ற அவா், அங்கிருந்து இனி எங்கு செல்வாா் எனத் தெரியவில்லை. தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மக்கள் சக்தி உள்ளது.

பொங்கலுக்கு பிறகு எங்கள் கூட்டணியில் பல கட்சிகள் இணையும். தோ்தலுக்கு இன்னும் 100 நாள்களே உள்ளதால், தோ்தலுக்கு முந்தைய நாள் கூட அரசியல் மாற்றங்கள் வரலாம். எனினும், வரும் பேரவைத் தோ்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும் என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com