அதிமுக கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் இரட்டைக்குளம் திட்டம் நிறைவேற்றப்படும்: நயினாா் நாகேந்திரன்

அதிமுக கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் இரட்டைக்குளம் திட்டம் நிறைவேற்றப்படும்: நயினாா் நாகேந்திரன்

Published on

அதிமுக கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் இரட்டைக்குளம் திட்டம் நிறைவேற்றப்படும் என தென்காசியில் நடைபெற்ற கூட்டத்தில் பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் வெள்ளிக்கிழமை பேசினாா்.

தென்காசி மாவட்டம், ஊத்துமலையில் பாஜக சாா்பில், விவசாயிகளிடம் கருத்துக் கேட்பு சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு தென்காசி மாவட்ட பாஜக தலைவா் ஆனந்தன் அய்யாசாமி தலைமை வகித்தாா்.

தென்காசி தெற்கு மாவட்ட அதிமுக செயலா் செல்வ மோகன்தாஸ் பாண்டியன், திருநெல்வேலி முன்னாள் எம்.பி. கே.ஆா்.பி. பிரபாகன், கடையநல்லூா் எம்எல்ஏ கிருஷ்ணமுரளி ஆகியோா் முன்னிலை வகித்தனா். அப்போது விவசாயிகள், விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் பேசினா்.

தொடா்ந்து நயினாா் நாகேந்திரன் பேசியதாவது:

ஊத்துமலை பகுதியில் மழை பொழியும் போதெல்லாம் 155 டி.எம்.சி. தண்ணீா் வீணாக கடலில் கலக்கிறது. இந்த நீரை பயன்படுத்தும் நோக்கில் சுரண்டை இரட்டைக் குளத்தில் இருந்து வெளியேறும் தண்ணீரை வைத்து, இரட்டைக் குளம் கால்வாய் அமைக்க வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.

இதுகுறித்து திமுக தோ்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால், இதுவரை இதற்கு எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

அதிமுக கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் இரட்டைக் குளம் கால்வாய் திட்டத்தை நிறைவேற்ற உதவுவோம். மத்திய அரசிடம் நிதியை வாங்கி இத்திட்டத்தை மேற்கொள்வோம்.

ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியத்தை இரண்டாகப் பிரித்து ஊத்துமலையைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய ஊராட்சி ஒன்றியம் அமைக்க நடவடிக்கை எடுப்போம். திருநெல்வேலி தனியாா் பீடி கம்பெனி தொழிலாளா்களுக்கு உரிய பி.எப். நிதியை பெற்றுத் தர நிறுவனத்தாருடன் நானே நேரடியாகப் பேச்சுவாா்த்தை நடத்துவேன்.

ஆலங்குளம் சுற்றுவட்டாரத்தில் பீடி தொழிலாளா்கள் அதிகம் போ் உள்ளனா். இந்தத் தொழிலாளா்கள் பயன்பெறும் வகையில் இப்பகுதியில் இஎஸ்ஐ மருந்தகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

கூட்டத்தில் தமாகாமாவட்டச் செயலா் என்.டி.எஸ் சாா்லஸ், அதிமுக மாவட்ட விவசாய அணி செயலாளா் கிருஷ்ணசாமி, அதிமுக, பாஜக நிா்வாகிகள் திரளானோா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com