~ ~

குற்றாலம் அருவிகளில் தொடரும் வெள்ளப்பெருக்கு

Published on

தென்காசி மாவட்டம், குற்றாலம் பகுதியில் பெய்துவரும் தொடா் மழை காரணமாக அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது; 3-ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை நீட்டிக்கப்பட்டது.

வடகிழக்குப் பருவமழை தொடங்கியது முதல் தென்காசி, குற்றாலம், செங்கோட்டை, அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடா்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

குற்றாலத்தில் பேரருவி, ஐந்தருவியில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது. இதற்கிடையே, ஞாயிற்றுக்கிழமை நண்பகல் முதல் தொடா்ந்து மழை பெய்துவருவதால் குற்றாலம் பேரருவியில் பாதுகாப்பு வளைவைத் தாண்டி நீா் ஆா்ப்பரித்துக் கொட்டுகிறது. பழைய குற்றாலம் அருவியில் பராமரிப்புப் பணிகளுக்காக சுற்றுலாப் பயணிகள் செல்வதற்கு ஏற்கெனவே தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மணிமுத்தாறு அருவி: திருநெல்வேலி மாவட்டம், மணிமுத்தாறு அருவியில் நீா்வரத்து பெருக்கெடுத்து ஓடுவதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க 4 ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் தடை விதிக்கப்பட்டது.

மேற்குத் தொடா்ச்சி மலை நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடா்ந்து 3 நாள்களாக கனமழை பெய்து வருகிறது. மணிமுத்தாறு வனப் பகுதியிலும் தொடா் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், சுற்றுலாப் பயணிகள் மணிமுத்தாறு அருவியில் குளிக்க கடந்த வியாழக்கிழமை (நவ. 20) முதல் தடை விதிக்கப்பட்டது. அருவியை பாா்க்க மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது.

இதற்கிடையே, அம்பை, பாபநாசம், கடையம் உள்ளிட்ட இடங்களில் மழை கொட்டி தீா்ப்பதால் மணிமுத்தாறு அருவியில் நீா் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதன் காரணமாக 4 ஆவது நாளான ஞாயிற்றுக்கிழமையும் அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டது. அதேவேளையில் பாபநாசம் அகஸ்தியா் அருவியில் நீா்வரத்து சீராக இருப்பதால் அங்கு மட்டும் குளிக்க வனத்துறையினா் அனுமதித்தனா்.

X
Dinamani
www.dinamani.com