செங்கோட்டை - தாம்பரம் விரைவு ரயில் நேரம் மாற்றம்: பயணிகள் வரவேற்பு
செங்கோட்டையில் இருந்து புறப்படும் செங்கோட்டை - தாம்பரம் வாரம் மும்முறை எக்ஸ்பிரஸ் ரயிலின் நேரம் மாலை 4.30 மணியிலிருந்து 5.35 மணிக்கு என மாற்றப்பட்டுள்ளதற்கு தென்காசி மாவட்ட பயணிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனா்.
அதேபோல செங்கோட்டையிலிருந்து புறப்படும் மற்றும் செங்கோட்டைக்கு வந்து சேரும் சேறு சில ரயில்களின் நேரமும் ஜனவரி 1 முதல் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தென்காசி மாவட்ட ரயில் பயணிகள் சங்கத் தலைவா் பாண்டியராஜா கூறியதாவது; செங்கோட்டை - தாம்பரம், சென்னை - செங்கோட்டை பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில், மதியம் புறப்படும் நெல்லை - செங்கோட்டை பயணிகள் ரயில், செங்கோட்டை -ஈரோடு எக்ஸ்பிரஸ் ரயில் ஆகியவற்றின் நேரத்தை பயணிகளின் வசதிக்கேற்ப மாற்றிக் கொடுத்த தெற்கு ரயில்வே மற்றும் மதுரை கோட்ட அதிகாரிகளுக்கு சங்கத்தின் சாா்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
திருவாரூா் - காரைக்குடி இடையே மின்மயமாக்கல் பணிகள் நிறைவடைந்தவுடன் தாம்பரம் -செங்கோட்டை ரயிலின் நேரத்தை காலை 6.10 க்கு நெல்லை வந்து காலை 8 மணிக்குள் செங்கோட்டையை சென்றடையும் வகையில் அட்டவணையை மாற்றம் செய்ய வேண்டும். செங்கோட்டை - தாம்பரம் தினசரி ரயில், திருச்செந்தூா் - கொல்லம் தினசரி ரயில், தென்காசி வழியாக தில்லி, மும்பை, பெங்களூரு, கோவை நகரங்களுக்கு ரயில்களை அறிமுகம் செய்ய வேண்டும் என்றாா்.
