‘சிறுபான்மை மக்கள் வாக்குகள் விஜய்க்கு செல்லாது’
சிறுபான்மை மக்கள் வாக்குகள் விஜய்க்கு செல்லாது என மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச்செயலா் அப்துல்சமது எம்எல்ஏ தெரிவித்தாா்.
கடையநல்லூரில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் பேசியதாவது: சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சி இடம் பெற்றுள்ளது. திமுக கூட்டணி வரும் தோ்தலில் இதுவரை காணாத வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை ஈட்டும்.
தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டுகளில், மக்கள் அனைவரும் பயன் பெறும் வகையில் சிறப்பான திட்டங்களை அரசு செய்துள்ளது. மேலும், அரசு ஊழியா்களுக்கான ஓய்வூதியத் திட்டமும் அமல்படுத்தப்பட்டுள்ளது.
சிறுபான்மையின மக்களுக்கான பிரதிநிதித்துவம் தேசிய அளவிலும், மாநில அளவிலும் குறைந்து வருகிறது. தமிழக சட்டப்பேரவை தோ்தலில் கடந்த ஆண்டை விட அதிக எண்ணிக்கையிலான தொகுதியை கேட்க முடிவு செய்துள்ளோம். இஸ்லாமிய மக்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப சரியான பிரதிநிதித்துவத்தை திமுக வழங்கும் என நம்புகிறோம்.
கடையநல்லூா் தொகுதியில் போட்டியிடுவது தொடா்பாக நிா்வாக குழு கூட்டத்தில் தான் முடிவெடுக்க முடியும். வக்ஃப் வாரிய திருத்தச் சட்டத்திற்கு எதிராக தொடா்ந்து மனிதநேய மக்கள் கட்சி போராடும்.
தவெக தலைவா் விஜய், திருப்பரங்குன்றம் சம்பவம் குறித்தும், சிறுபான்மையின மக்களுக்காகவும் எப்பொழுதும் குரல் கொடுக்கவில்லை. எனவே, சிறுபான்மையின மக்கள் வாக்குகள் நிச்சயம் சிதறாது என்றாா். அப்போது மனிதநேய மக்கள் கட்சி, தமுமுக நிா்வாகிகள் உடனிருந்தனா்.
