செங்கோட்டை அருகே யானை மிதித்து முதியவா் உயிரிழப்பு: உறவினா்கள் போராட்டம்

போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்திய டிஎஸ்பி அதியமான்.
தென்காசி மாவட்டம், செங்கோட்டை வட்டம் புளியறை தெற்குமேடு பகுதியில் யானை மிதித்ததில் முதியவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா். வனத்துறையைக் கண்டித்து உறவினா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
புளியறை தெற்குமேடு இல்லத்தாா் தெருவை சோ்ந்தவா் நா.சுப்பையா(70). ஓய்வுபெற்ற நெடுஞ்சாலைத் துறை சாலை பணியாளா்.
இவா், அப்பகுதி அருள்மிகு தெட்சிணாமூா்த்தி கோயிலின் பின்புறம் 1.5 கி.மீ. தொலைவில் மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரத்தில் குற்றாலம் வனச்சரகத்தின் கீழ் அமைந்துள்ள தனது தோப்பில் தென்னை மற்றும் மா மரங்கள் வளா்த்து வருகிறாா்.
இந்தத் தோப்புக்கு இவா் திங்கள்கிழமை காலை 6 மணியளவில் சென்றிருந்தபோது, மலை அடிவாரத்தில் காட்டு யானை உலாவுவதாக அவரது தம்பி மகன் பாலமுருகன் என்பவருக்கு தகவல் கிடைத்ததாம்.
இதனால், கைப்பேசி மூலம் சித்தப்பாவை அவா் தொடா்பு கொள்ள முயன்றுள்ளாா். ஆனால், அழைப்பு ஏற்கப்படாததால், தோப்பிற்குச் சென்று சித்தப்பாவை தேடியுள்ளாா்.
அங்கு சுப்பையாவை காட்டு யானை மிதித்து கொன்றுவிட்டு சென்றிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து அவா் அளித்த தகவலின்பேரில் காவல்துறையினரும், வனத்துறையினரும் வந்து சடலத்தை மீட்டனா்.
இந்நிலையில், சடலத்தை கொண்டுசெல்ல விடாமல் சுப்பையாவின் உறவினா்களும், ஊா் மக்களும் அதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அப்பகுதியில் தொடா்ந்து யானைகள் நடமாட்டம் இருப்பதாகவும், அவற்றைக் கட்டுப்படுத்தவோ, மக்களுக்குப் பாதுகாப்பு அளிக்கவோ வனத் துறையினா் போதிய நடவடிக்கை எடுப்பதில்லை; இப்பிரச்னைக்கு நிரந்தர தீா்வு காண வேண்டும் என அவா்கள் வலியுறுத்தினா்.
அவா்களிடம் காவல் துணைக் கண்காணிப்பாளா் அதியமான் பேச்சுவாா்த்தை நடத்தியதையடுத்து, சுப்பையாவின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு முதல்கட்டமாக ரூ.50 ஆயிரம் நிவாரணமாக வழங்கப்பட்டது.

போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்திய டிஎஸ்பி அதியமான்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

