நீட் தேர்வு என்ற தடைக்கல்லும் தூக்கி எறியப்படும்: கல்விச் சிந்தனை அரங்கில் முதல்வர் மு.க. ஸ்டாலின் உறுதி

நீட் என்ற பெயரில் தகுதி என்ற தடைக் கற்களை போடுகிறார்கள். அதனால்தான் நீட் தேர்வை எதிர்க்கிறோம். அந்த தடைக்கல்லும் தூக்கி எறியப்படும். 
கல்விச்  சிந்தனை அரங்கில் முதல்வர் மு.க. ஸ்டாலின்
கல்விச் சிந்தனை அரங்கில் முதல்வர் மு.க. ஸ்டாலின்

படிப்பதற்கே தடைக் கற்கள் போட்ட இந்த சமூகத்தில், படித்தால் தகுதி தன்னால் வந்துவிடும் என்று ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமையை பெற்றுத் தந்தோம். இன்று நீட் என்ற பெயரில் தகுதி என்ற தடைக் கற்களை போடுகிறார்கள். அதனால்தான் நீட் தேர்வை எதிர்க்கிறோம். அந்த தடைக்கல்லும் தூக்கி எறியப்படும். 

'தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம்' நடத்தும் 'கல்விச் சிந்தனை அரங்கு 2022' சென்னையில் மார்ச் 8, 9 (செவ்வாய், புதன்) ஆகிய இரு நாள்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்தக் கருத்தரங்கை வாழ்த்திக் காணொலி வாயிலாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசினார். 

முதல்வர் பேச்சு:

முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கும், தாழ்த்தப்பட்டோருக்கும், பெண்களுக்கும் பல்வேறு கட்டணச் சலுகைகளை அறிவித்தது தமிழ்நாடுதான். நூறாண்டுகளாகப் பார்த்துப் பார்த்து வடிவமைத்த, பண்படுத்திய, செதுக்கிய தமிழ்நாட்டின் கல்வி முறையைச் சிதைக்க, நீட் தேர்வை போன்று பழைய கருத்தாக்கங்களுக்குப் புதிய கல்விக் கொள்கை எனப் பெயரிட்டு ஒப்பனைபோட்டு மீண்டும் கொண்டுவருகிறார்கள்.

கடந்த 8 ஆண்டுகளில் மத்திய பாஜக அரசின் கீழ் கல்வி மிக மோசமாக சீரழிக்கப்பட்டிருக்கின்றது. அதிகாரத்தைப் பயன்படுத்தி அறிவியலுக்கும், பகுத்தறிவுக்கும் ஒவ்வாத பழமைவாதமும் மூடக்கருத்துகளும் கல்வியில் திணிக்கப்படுகின்றன.

கல்விச்சாலைகளில் வெறுப்புணர்ச்சிக்கு வித்திட்டு, இளம் பருவத்திலேயே மாணவர்களின் நெஞ்சில் மதவாத சக்திகள் நஞ்சைக் கலக்குகிறார்கள். இதுதான் கல்விக்கு ஓர் அரசு செய்யும் பங்களிப்பா? இதுதான் நாட்டில் உள்ள நடுநிலையாளர்களும் மனசாட்சியுடையோரும் கல்வியாளர்களும் அறச்சீற்றத்தோடு துணிச்சலோடு கேட்க வேண்டிய கேள்வி. இதுபோன்ற கல்வி க் கருத்தரங்குகளில் நம் நாட்டின் கல்வியைச் சூழ்ந்துள்ள இதுபோன்ற தீமைகளை ஒழிக்க ஆக்கப்பூர்வமாக விவாதிக்க வேண்டும்.

கல்வி என்பது நாட்டின் சொத்து. அதை மத்தியில் ஆளும் ஒரு கட்சி சீரழிக்க நினைப்பது உயிர்க் காற்றைப் பறிப்பதற்குச் சமம். இதை யாரும் ஆதரிக்க மாட்டார்கள். அதனால்தான் கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வர மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வருகிறோம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com