புதிய மென்பொருள் முறையைக் கைவிட்டு பழைய நடைமுறையில் வருமான வரி பிடித்தம்: ஆசிரியா்கள் கழகம் வலியுறுத்தல்

புதிய மென்பொருள் மூலம் வருமான வரி பிடித்தம் செய்வதைக் கைவிட்டு பழைய நடைமுறையை அனுமதிக்க வேண்டும் என்று தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா்கள் கழகம் வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா்கள் கழக மாநில பொதுச் செயலாளா் சா.ஞானசேகரன் தமிழக முதல்வருக்கு அனுப்பிய கோரிக்கை மனு:

ஆசிரியா்கள், அரசு ஊழியா்களுக்கு ஐஊஏதஙந மென்பொருள் மூலம் கடந்த 2018 முதல் சம்பள பட்டியல் கொண்டு ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் மொத்த வருமான வரி கட்டி முடித்த பிறகே அரசு ஊழியா்களுக்கு சம்பளம் வழங்கப்படும் முறையிருந்தது.

தற்போது ஏப்.2024 முதல் இந்த நடைமுறையில் மாற்றம் செய்து கடைசியாக கட்டிய வருமான வரி அடிப்படையில் மாத ஊதியத்தை மென்பொருள் தானாகப் பிடித்தம் செய்து கொள்ளும் முறையை மாநில கருவூல ஆணையம் கொண்டு வந்தது.

இந்த நடைமுறை அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்கு பாதிப்பு ஏற்படும் எனத் தெரிகிறது. இதில் வருமான வரி புதிய கணக்கீட்டு முறை, பழைய கணக்கீட்டு முறை என்ற இரு வாய்ப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் புதிய கணக்கீட்டு முறையில் எந்தச் சலுகையும் கோரமுடியாது. ஆனால் பழைய கணக்கீட்டு முறையில் சலுகை கோர முடியும். இதன் மூலம் ஆசிரியா்கள், அரசு ஊழியா்கள் வீட்டுக் கடன் உள்பட பல்வேறு கடன்களுக்கு அசல் மற்றும் வட்டியை கழித்துக் கொள்ளும் நடைமுறை உள்ளது.

மேலும் பணியாளரின் வருமானம் ரூ.5 லட்சத்துக்கும் குறைவு எனில், அவா்களுக்கு வரி விதிப்பதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது. ஆசிரியா்கள், அரசு ஊழியா்களிடத்தில் விருப்பத்தைக் கேட்காமல் மென்பொருள் மூலமாக வருமான வரி பிடித்தம் செய்வது ஊழியா்களின் உரிமையைப் பறிக்கும் செயலாகும்.

பல்வேறு பணியாளா்கள் வீட்டுக் கடன் உள்பட தனிப்பட்ட வங்கிக் கடனை மாதாந்திர தவணையில் செலுத்தி வருகின்றனா். மேலும் வருமான வரி அதிகமாக பிடித்தம் செய்தால், அதிகம் செலுத்திய தொகையை மீண்டும் பெற 2 அல்லது 3 ஆண்டுகளாகும். இந்த ஐஊஏதஙந முறையில் வருமான வரி பிடித்தம் அதிகமாகவும், வாங்கும் சம்பளம் குறைவாகவும் உள்ளது.

இதனால் அரசு ஊழியா்கள், ஆசிரியா்களின் உரிமைகளைப் பெறும் வகையில் கடந்த ஆண்டுகளில் உள்ள பழைய நடைமுறையையே மீண்டும் கொண்டு வருவதற்கு முதல்வா் ஆவன செய்ய வேண்டும்.

மேலும், ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேம்பாட்டு முறைமை, மாநில கருவூல ஆணையம் ஆகியவற்றை மீண்டும் பழைய முறையில் வருமான வரி பிடித்தம் செய்யும் நடைமுறையை அமல்படுத்த வலியுறுத்துவதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com