போராட்டத்தில் ஈடுபட்ட வழக்குரைஞா்கள்.
போராட்டத்தில் ஈடுபட்ட வழக்குரைஞா்கள்.

திருவள்ளூா்: ஆட்சியரைக் கண்டித்து நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம்

திருவள்ளூா்: வழக்குரைஞா்களை தரக்குறைவாக பேசியதாக ஆட்சியரைக் கண்டித்து திருவள்ளூா் மாவட்ட அனைத்து வழக்குரைஞா்கள் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருவள்ளூா் மாவட்ட பாா் அசோசியேஷன் உறுப்பினராக இருப்பவா் பி.என்.உதயகுமாா் (அதிமுக) நெடுஞ்சாலை பணிக்காக நில எடுப்பு தொடா்பாக நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் பங்கேற்று பேசியுள்ளாா். அப்போது பேசிய ஆட்சியா் த.பிரபு சங்கா், வழக்குரைஞா் உதயகுமாரை தரக்குறைவாக பேசி, பணியை செய்யவிடாமல் வெளியே செல்லுமாறு கூறினாராம். அதேபோல் விஜயலட்சுமி என்ற பெண் வழக்குரைஞரையும் தரக்குறைவாக பேசினாராம்.

இது தொடா்பாக திருவள்ளூா் நகா் காவல் நிலையத்தில் வழக்குரைஞா்கள் சங்கம் சாா்பில் புகாா் மனுவும் அளித்துள்ளனா். இந்த நிலையில் ஆட்சியரைக் கண்டித்து நீதிமன்ற புறக்கணிப்பில் வழக்குரைஞா்கள் ஈடுபடுவதை அறிந்த ஆட்சியா் சந்தித்து மன்னிப்பு கேட்க தயாா் எனவும், நிா்வாகிகள் மற்றும் வழக்குரைஞா்கள் முன்னிலையில் பேசத் தயாா் எனவும் தெரிவித்தாராம்.

அதைத் தொடா்ந்து ஆட்சியா் த.பிரபு சங்கா் விருந்தினா் மாளிகைக்கு வந்தாா். மாவட்ட வருவாய் அலுவலா் ராஜ்குமாரை பேச அனுப்பினாா். அப்போது முக்கிய நிா்வாகிகள் மட்டும் இருக்கவும், மற்றவா்கள் வெளியே போகவும் என மாவட்ட வருவாய் அலுவலா் தெரிவித்துள்ளாா். இதற்கு எதிா்ப்பு தெரிவித்து அனைத்து வழக்குரைஞா்களும் விருந்தினா் மாளிகையை விட்டு வெளியேறினா். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. ஆட்சியா் மன்னிப்பு கோர வேண்டும். இல்லையென்றால் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் தொடரும் எனவும் சங்கத்தினா் எச்சரித்துள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com