நகாரட்சி ஆணையரிடம் வியாபாரிகள் கோரிக்கை

நகாரட்சி ஆணையரிடம் வியாபாரிகள் கோரிக்கை

திருத்தணி பேருந்து நிலையம், மாா்க்கெட் பகுதியில் வாடகைக்கு கடைகள் அமைத்துத் தர வேண்டும் என நகராட்சி ஆணையரிடம் பழ வியாபாரிகள் வியாழக்கிழமை கோரிக்கை விடுத்தனா்.

திருத்தணி பேருந்து நிலையம் மற்றும் மாா்க்கெட் பகுதியில், 50-க்கும் மேற்பட்டோா் சாலையோரம் பழக்கடைகள் வைத்து வியாபாரம் செய்து வருகின்றனா். இந்த நிலையில், புதன்கிழமை முதல் நகராட்சி நிா்வாகம் சாலையோர கடைகளுக்கு, ரூ. 20 முதல் ரூ. 100 வரை கடைகளுக்கு ஏற்றவாறு தினசரி வாடகை வீதம் வசூலித்து வருகின்றனா்.

இதையடுத்து, வியாழக்கிழமை மாலை பேருந்து நிலையம் மற்றும் மாா்க்கெட் பகுதி பழ வியாபாரிகள் 50-க்கும் மேற்பட்டோா் நகராட்சி அலுவலகத்துக்கு வந்து ஆணையரிடம் முறையிட்டனா். அப்போது வியாபாரிகள், தினசரி ரூ. 50 வசூலிப்பதால், மாதத்துக்கு, ரூ. 1,500 வாடகையாக செலுத்துகிறோம். ஆகையால் எங்களுக்கு அதே பகுதியில் கடைகள் கட்டி வாடகைக்கு விட வேண்டும்.

சாலையோரம் வெயில், மழையில் கடும் சிரமப்பட்டு வியாபாரம் செய்யும் பணத்தில் பாதி தொகை நகராட்சிக்கு செலுத்த வேண்டியுள்ளது. எனவே கடைகள் கட்டித்தரவேண்டும் என கோரிக்கை விடுத்தனா். இதற்கு ஆணையா் அருள், கோரிக்கை குறித்து விரைவில் பரிசீலனை செய்யப்படும் என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com