ஏரியில் மீன் பிடிக்கச் சென்றவா் தவறி விழுந்து உயிரிழப்பு
திருவள்ளூா்: திருவள்ளூா் அருகே ஏரியில் மீன் பிடிக்கச் சென்ற முதியவா் நீருக்குள் தவறி விழுந்து உயிரிழந்தாா்.
திருவள்ளூா் அருகே கடம்பத்தூா் ஒன்றியம், கீழச்சேரி அடுத்த கொட்டையூா் காலனி இந்திரா நகரை சோ்ந்தவா் சின்னபையன் (60). இவா் கடந்த 6-ஆம் தேதியன்று தனது வீட்டில் உள்ளவா்களிடம் நரசமங்களத்தில் உள்ள பெரிய ஏரியில் மீன் பிடிக்கச் செல்வதாக கூறிவிட்டு தனது இருசக்கர வாகனத்தில் சென்றாராம். பின்னா் அவா் வீடு திரும்பவில்லையாம். இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை நரசமங்களம் பெரிய ஏரியில் சின்னபையன் இறந்த நிலையில் சடலமாக கிடந்தாராம். இது குறித்து அவரது மகன் செல்வம் மப்பேடு காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன்பேரில், சடலத்தை மீட்டு திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இது தொடா்பாக வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.