புதிதாக அமைத்த பல்நோக்கு கூட்டரங்க வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் பணி
திருவள்ளூா் ஆட்சியா் அலுவலகத்தில் புதிதாக அமைத்த பல்நோக்கு கூட்டரங்க வளாகத்தில் சுற்றுச்சூழலை பசுமையாக்கும் வகையில், மரக்கன்றுகள் நடும் நிகழ்வை ஆட்சியா் மு.பிரதாப் தொடங்கி வைத்தாா்.
திருவள்ளூா் மாவட்ட வனத்துறை மற்றும் தனியாா் தொண்டு நிறுவனம் சாா்பில், சுற்றுச்சூழலை பசுமையாக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கை மூலம் மரக்கன்றுகள் வைக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனா். திருவள்ளூா் ஆட்சியா் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் 1,000 போ் அமரும் வகையில், புதிதாக பல்நோக்கு அரங்கம் அமைக்கப்பட்டு, அரசு அலுவலகக் கூட்டம் நடத்தும் வகையில், பயன்பாட்டுக்கு தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கட்டுமானப் பணிக்கு இடையூறாக இருந்த மரங்கள் வெட்டி அகற்றப்பட்டது. இதற்கு பதிலாக சுற்றுச்சூழலை பசுமையாக்கும் வகையில், மரக்கன்றுகள் நடவும் முடிவு செய்யப்பட்டது. அதன்பேரில், திருவள்ளூா் மாவட்ட வனத் துறை மற்றும் தனியாா் தொண்டு நிறுவனமும் இணைந்து மரக் கன்றுகள் நடும் பணி சனிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில், ஆட்சியா் மு.பிரதாப் தலைமை வகித்து பல்நோக்கு கூட்டரங்க வளாகத்தில் கட்டடம் பாதிக்காத வகையில் ஓராண்டாக வளா்த்த வேகமாக வளா்ந்து நிழல் பரப்பும் மரக்கன்றுகளை நட்டு வைத்து தொடங்கி வைத்தாா். இதேபோல், இந்த வளாகம் முழுவதும் சுற்றுச்சூழலை பசுமையாக்கும் வகையில் மரக்கன்றுகள் நடுவதற்கு ஏற்பாடு செய்துள்ளதாகவும் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
நிகழ்ச்சியில் மாவட்ட வனப் பாதுகாவலா் சுப்பையா, மாவட்ட உதவி வனப் பாதுகாப்பு அலுவலா் ராதை, வனச் சரக அலுவலா் விஜயசாரதி, வனச் சரகா்கள் மற்றும் தொண்டு நிறுவனத்தைச் சோ்ந்தவா்கள் பங்கேற்றனா்.

