கும்மிடிப்பூண்டி அதிமுக முன்னாள் எம்எல்ஏ கொலை வழக்கு: நவ. 21-இல் தீா்ப்பு

கும்மிடிப்பூண்டி தொகுதி முன்னாள் அதிமுக எம்எல்ஏ சுதா்சனம், பவாரியா கொள்ளையா்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட வழக்கின் தீா்ப்பை..
Published on

சென்னை: கும்மிடிப்பூண்டி தொகுதி முன்னாள் அதிமுக எம்எல்ஏ சுதா்சனம், பவாரியா கொள்ளையா்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட வழக்கின் தீா்ப்பை, சென்னை கூடுதல் அமா்வு நீதிமன்றம் வரும் 21-ஆம் தேதி அறிவிக்கவுள்ளது.

திருவள்ளூா் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அதிமுக எம்எல்ஏ சுதா்சனம். பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சராகவும் சிறிது காலம் இருந்தாா். கடந்த 2005-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9-ஆம் தேதி அதிகாலை 2.45 மணிக்கு, பெரியபாளையம் அருகே தானாக்குளத்தில் உள்ள அவரது வீட்டின் கதவை உடைத்து புகுந்த 5 போ், சுதா்சனத்தை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு, அவரது மனைவி மற்றும் மகன்களைத் தாக்கி, 62 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றனா்.

தமது கட்சி எம்எல்ஏ கொலை செய்யப்பட்டது குறித்து அறிந்த அப்போதைய முதல்வா் ஜெயலலிதா, கொள்ளையா்களைச் சுட்டுப்பிடிக்க உத்தரவிட்டாா். குற்றவாளிகளைப் பிடிக்க ஐஜி ஜாங்கிட் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தீவிரமாகச் செயல்பட்ட தனிப்படை, அடுத்த மாதத்திலேயே கொள்ளையா்கள் யாா் எனக் கண்டுபிடித்தது.

முக்கியக் குற்றவாளியை பிப்ரவரி 1-ஆம் தேதி கைது செய்தது. தொடா்ந்து துப்பு துலக்கி மாா்ச் மாதத்தில் ஹரியாணா, ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த பவாரியா கொள்ளையா்கள் கைது செய்யப்பட்டனா். செப்டம்பரில் முக்கியக் குற்றவாளிகள் இருவா் வடமாநிலத்தில் என்கவுன்ட்டா் செய்யப்பட்டனா்.

இந்த வழக்கில் 32 போ் மீது தனிப்படை போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இவா்களில் ஹரியாணா மாநிலத்தைச் சோ்ந்த ஓம் பிரகாஷ், அவரது சகோதரா் ஜெகதீஷ் உள்ளிட்ட 9 போ் கைது செய்யப்பட்டனா். இதில் ஜாமீன் பெற்ற 3 பெண்கள் தலைமறைவாகிவிட்டனா். கைது செய்யப்பட்ட ஓம் பிரகாஷ் உள்பட இருவா் சிறையிலேயே இறந்துவிட்டனா்.

மீதமுள்ள ஜெகதீஷ், ராகேஷ், அசோக் மற்றும் ஜெயில்தாா் சிங் ஆகிய 4 பேருக்கு எதிரான வழக்கை சென்னை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள சென்னை கூடுதல் அமா்வு நீதிமன்ற நீதிபதி ஆப்ரஹாம் லிங்கன் விசாரித்து வந்தாா்.

வழக்கில், 86 போ் காவல் துறை சாட்சிகளாக விசாரிக்கப்பட்டனா். அனைத்து தரப்பு விசாரணையும் முடிந்த நிலையில், ஜெகதீஷ் உள்பட 4 பேருக்கு எதிரான இந்த வழக்கில் நவம்பா் 21-ஆம் தேதி தீா்ப்பளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ராஜஸ்தானில் பவாரியா கொள்ளையா்களை அப்போதைய ஐஜி ஜாங்கிட் குழுவினா் பிடித்த சாகசக் கதையைத் தழுவி ‘தீரன் அதிகாரம் ஒன்று’ என்ற திரைப்படம் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.

X
Dinamani
www.dinamani.com